தமிழ் மக்களுக்கு வெற்றி தர கூடிய தலைவர்கள் யார்? அறிஞர்கள் யார்?

tamil makkalஅவர்களின் வார்த்தையில் அவர்கள் கூறிவந்த அந்தப் “பயங்கரவாதம்” முடிவடைந்துவிட்டது. ஆனால் அப்பாவித் தமிழ் மக்கள் மீதான அவர்களின் துப்பாக்கி வேட்டுக்கள் இன்னும் முடிவடையவில்லை. தமிழ் மக்களின் பண்பாட்டைப் புரிந்து கொள்ளாமல் அவர்களின் அபிலாசைகளைப் புரிந்துகொள்ள முடியாது. அவர்களை அவர்களின் பலமான பண்பாடு ஒரு போதும் மண்டியிட அனுமதிக்காது.

ஒன்றின் மீது இன்னொன்று தாக்கம் புரியவல்ல. பல்வேறு வேதியற் கலவைகளின் சங்கமத்தால் இலங்கை அரசியல் கொதிநிலை அடைந்துள்ளது.

தற்போது இலங்கை அரசியல் எந்தொரு தலைவனினதும் அல்லது எந்தொரு கட்சியினதும் கட்டுப்பாட்டில் இல்லை. இராணுவம், பொலிஸ்துறை, புலனாய்வுத்துறை, கட்சிகள், மகாசங்கம், ஊடகங்கள் என உள்நாட்டில் பல்வேறு சக்திகளும் தனித்தனியே நிறுவன மயப்பட்டுள்ளன. இவை அனைத்தினதும் நிறுவன வளர்ச்சியென்பது ஈழத்தமிழர் பிச்சினையை மையப் பொருளாகவும், அச்சாணியாகவும் கொண்டவை.

இலங்கையின் சனத்தொகை அளவு மற்றும் பருமனுக்கு மீறிய வளர்ச்சியை இராணுவம் அடைந்துள்ளது. அதற்கான தளமும் ஊட்டச்சக்தியும் ஈழத்தமிழர் பிரச்சனையாகவே உள்ளது. ஆதலால் அத்தகைய இராணுவம் தனது வாழ்விற்கும், வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் ஈழத்தமிழரை களமாக பாவிக்கிறது. இப்படியே பொலிஸ் துறையும், புலனாய்வுத்துறையும், கட்சிகளும், ஊடகங்களும் ஈழத்தமிழர் பிரச்சினை மீதே தமக்கான நலன்களுக்கு தளம் அமைத்துள்ளன.

ஆதலால் வெளிநாட்டுச் சக்திகளும் கூடவே தமக்கான அரசியல், இராணுவ, வர்த்தக நலன்களை ஈழத்தமிழர் பிரச்சனைக்கு ஊடாகவே அணுகுகின்றன. இதில் அப்பாவித் தமிழர்களே உள்ளாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளினது நலன்களுக்கான பலியாடுகளாய் உள்ளனர். இவ்வாறு ஆடுகளமாக்கப்பட்டுள்ள, நொந்து நூலாய் நலிவுற்றுள்ள தமிழ் மக்களுக்காக பேசுவதும் பாடுபடுவதிலும் இருந்துதான் நீதிக்கான பணியும் தர்மமும் ஆரம்பமாக முடியும்.

இவ்வாறு பலிக்கடாவாக்கப்படும் இந்த அப்பாவி மக்களின் நலன்களுக்காக பாடுபடாத எந்தொரு “இசமும்” எந்தொரு “நாயகமும்” எந்தொரு “தர்ம போதனையும்” உன்னதமானவைகளாக அமைய முடியாது.

அரசியல் ஒருபோதும் அதன் வெளித் தோற்றப்பாட்டில் இருப்பதில்லை, மாறாக அதன் உள்ளோட்டத்திலும் அதற்கான பொறிமுறையுமே தங்கியுள்ளது. இந்த வகையில் அரசியல் உடற்கூற்றியிலையும் அதன் உயிரோட்டங்களையும் உரிய முறையில் கண்டறியாமல் தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்க முடியாது.

உள்நாட்டு அரசியலானது வெளிநாட்டு அரசியலின் நீட்சியாக உள்ளது. வெளிநாட்டு அரசியல் நலனானது பூகோளம் தழுவிய நலனை ஈட்ட முனையும் உலகப் பெருவல்லரசுகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளது. அதேவேளை பூகோளம் தழுவிய நலன்களைக் கொண்ட பெருவல்லரசுகளான அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் உள்நாட்டு அரசியல் என்பது பூகோளம் தழுவிய வெளிநாட்டு அரசியலாக உள்ளது.

சர்வதேச அரசியல் (International Politics) என்பது இரண்டுக்குக் குறையாத நாடுகளிடையேயான அரசியலாகும். பூகோள அரசியல் (Global Politics) என்பது முழு உலகையும் தழுவிய உலகளாவிய அரசியலாகும். பூகோள அரசியலானதுவர்த்தகம் எனப்படும் ஒரேயொரு நாரில் முடியப்பட்டுள்ள பூமாலையாய் உள்ளது.

இந்த வர்த்தக ஆதிக்கமானது இராணுவம், யுத்தம், முகாமைத்துவம் என்ற மூன்றினாலும் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. இவை மூன்றும் ஒன்றுடன் இன்னொன்று இணைந்தும் ஒன்றில் இன்னொன்று தங்கியும் உள்ளன.

அரசியலில் இராணுவம் ஒருபோதும் தனது முக்கியத்துவம் இழந்திடாது. நேரடியாக இரத்தம் சிந்தும் யுத்தம் மட்டுமல்ல இராணுவ ஏற்பாடுகளும், இராணுவ முஸ்தீபுகளும் ஒருவகை யுத்தம்தான். இரத்தம் சிந்தும் யுத்தத்தை தணிப்பதற்கான யுத்தத்தின் இன்னொரு பரிமாணம் தான் இராணுவ ஏற்பாடுகளும் இராணுவ முஸ்தீபுகளுமாகும்.

இதன்படி முகாமைத்துவத்தின் வாயிலாக உலகை கட்டியாளுதல் என்ற தந்திரத்தில் அதற்கான அடித்தளமாய் இராணுவ ஏற்பாடுகளும் இராணுவ முஸ்தீபுகளும் அமைகின்றன. அதன்படி இந்த உலகமானது மேற்படி பரிமாணம் கொண்ட முகாமைத்துவத்தால் ஆளப்படுகின்றது.

முகாமைத்துவத்தின் அங்கங்களே யுத்தமும், இராணுவ ஏற்பாடுகளும் இராணுவ முஸ்தீபுகளுமாகும். இந்தவகையில் வர்த்தக ஆதிக்கமானது இராணுவம், யுத்தம், முகாமைத்துவம் என்ற இழைகளினால் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. எனவே யுத்தமும் முகாமைத்துவத்திற்குள் அடங்கும் ஒரு பகுதியாகும். அந்த முகாமைத்துவம் புவிசார் அரசியலையும் தனக்கான கருவியாக்கிக் கொள்கிறது. இத்தகைய அடியாழத்தில் இருந்துதான் அரசியலானது ஆயிரக்கணக்கான அலைகளாய் வெளியே தோன்றுகிறது.

யுத்தத்திற்கு முன்னோ அல்லது யுத்தத்திற்குப் பின்னோ பெருவல்லரசுகள் தமது தேவைக்குப் பொருத்தமான வகையில் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளை வடிவமைத்துதமக்கான முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்கான பெயர்தான் “சமூக நிர்மாணிப்பியல் (Social Constructionist)” என்பதாகும். உதாரணமாக முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்பு நிகழ்ந்த சனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தமது நலன்சார்ந்த வகையில் வெளி அரசுகள் ஈழத் தமிழர்களை அதன்பால் செயற்படச் செய்தமையானது மேற்படி “சமூக நிர்மாணிப்பியல்” என்பதற்கு உட்பட்டதாகும்.

ஆட்டுவித்தால் ஆடுபவனாய் உள்நாட்டு அரசியல்கள் காணப்படுகின்றன. இதில் பலவீனமான இனங்கள் அல்லது மக்கள் பிரிவுகள் முதலில் பலியாகிவிடுகின்றன. கழுத்தில் வாள் வைக்கப்பட முன்பு போடப்படும் பூமாலையைக் கண்டு மகிழும் நேர்த்திக் கடாக்களின் கதைகளாக மக்களின் தலைவிதி ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உன்னதமான தலைவர்களையும் நல்லறிஞர்களையும் சார்ந்தாகும்.

“தந்தை செல்வாவிற்குப் பிறகு, தலைவர் திரு.வே.பிரபாகரனுக்குப் பிறகு, வடமாகாண முதல்வர் திரு. சி.வி.விக்கினேஸ்வரனைத்தான் நாங்கள் வீரியமுள்ள எமக்கான தலைவராக பார்க்கிறோம்” என்று லண்டன் ரெயினஸ்லேன் சொறொஸ்ரியன் சென்ரரில் 23-10-2016 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவதற்கு விக்கினேஸ்வரனை அழைக்கையில் அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய திரு.கே.வி.நந்தன் அவர்கள் திரு.விக்கினேஸ்வரனை நோக்கிக் கூறிய வார்த்தைகளே இவை.

இலங்கை அரசியலில் இன்று முக்கிய பேசு பொருளாய் காணப்படுவோரின் அரங்கில் உள்ள திரு.விக்கினேஸ்வரனும், திரு.மகிந்த ராஜபக்சவும் முக்கியமானவர்கள். அதேபோல அரங்கில் இல்லாது பேசப்படுவோரில் திரு. பிரபாகரனும் திரு.ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் முக்கியமானவர்கள். இந்த நால்வரும் இலங்கை அரசியலில் குறியீட்டு அளவிலான இயங்கு சக்திகளாக உள்ளனர்.

சிங்களத் தரப்பின் அரசியலில் அரங்கத்தில் இருக்கும் சக்தி என்ற வகையில் மகிந்த ராஜபக்சவும், அரசியல் வழியை வடிவமைத்துவிட்டவராக அரங்கில் இல்லாத ஜெயவர்த்தனாவும் காணப்படுகின்றனர். அதே போல தமிழ்த் தரப்பில் அரங்கில் உள்ள சக்தியாக விக்கினேஸ்வரனும், அரங்கில் இல்லாத சக்தியாக பிரபாகரனும் காணப்படுகின்றனர்.

பனிப்போர் நிலவிய காலத்தில் அதாவது 1980ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் இந்திராகாந்தி பதவிக்கு வந்ததும் இந்தியாவில் நிலையான அரசாங்கம் அமைக்கப்பட்டுவிட்டது. இதன் பின்னணியிற் இந்திய, சோவியத் உறவு பனிப்போர் சக்திகளாக வீரியம் கொண்டன. இக்காலத்தில் தனது பனிப்போர் இலக்கின் பொருட்டு அமெரிக்கா இலங்கையில் தனது கவனத்தை வீரியத்துடன் செலுத்த முற்பட்டது.

இப்பின்னணயில் இனப்பிரச்சனையின் பேரால் அமெரிக்காவை இலங்கையில் பலமுறச் செய்யஜெயவர்த்தன அரசாங்கம் தீவிர பிரயத்தனத்தில் ஈடுபட்டது. இக்கால கட்டத்தில் தான் இந்தியாவும் ஈழத்தமிழர் பிச்சனைக்கு ஊடாக அதனை எதிர்கொள்ளத் தொடங்கியது. இப்பின்னணியில் அப்போது ஆயுதப் போராட்டத்தில் தலையாய பாத்திரம் வகிக்கத் தொடங்கிய விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் அதற்கான இந்து சமுத்திர அரசியலில் முக்கிய ஒரு சுழற்சி மையமானார்.

1974ஆம் ஆண்டு சனவரி மாதம் தமிழ் மக்களின் நெஞ்சங்களை நிரப்பிய நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு இலங்கை அரசின் பொசிப்பின்றி ஆனால் மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக நிகழ்ந்து கொண்டிருந்த வேளை. அதுவும் இறுதிநாள், இறுதி நேரத்தின் போது பொலிசார் மேற்கொண்ட கலாட்டாவினால் ஒன்பது அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் மாநாடு துயரத்தில் முடிந்தது.

இதனைக் கண்டு தமிழ் மக்கள் கொதிப்படைந்தனர். பொலிஸ் வன்செயலுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) எஸ்.கே. சந்திரசேகரா மீதும் அதற்குப் பொறுப்பான யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா மீதும் பெரும் கோபம் கொண்டனர். இந்த நிலையில் சந்திரசேகர மீது திரு. பொன். சிவகுமார் என்ற இளைஞன் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டாராயினும் அதில் அவர் வெற்றி பெறவில்லை.

பின்பு இவர் தனது அரசியலுக்கான வங்கிக் கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்ட போது பொலிசாரால் துரத்தப்படுகையில் சைனைட் நஞ்சை உட்கொண்டு 1974ஆம் ஆண்டு யூன் 5ஆம் திகதி உயிர்நீத்தார். இது மக்கள் மத்தியில் இரட்டை சோகத்தை உருவாக்கியது. மக்களால் தமிழாராய்ச்சி மாநாட்டில் நிகழ்ந்த துயரை மறக்க முடியவில்லை.

இப்பின்னணியில், 1975ஆம் ஆண்டு யூலை 27ஆம் தேதியன்று அல்பிரட் துரையப்பா மீது பிரபாகரன் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது அவர் கொல்லப்பட்டார். இங்கு தமிழாராய்ச்சி மாநாட்டு துயரத்திற்கு பழிவாங்கப்பட்டதன் மகிழ்ச்சியையும், சிவகுமாரனது மரணத்தின் பின்பான மீட்சியையும் மக்களுக்கு இச்சம்பவம் ஏற்படுத்தியதன் பேரில் பிரபாகரன் மக்கள் மத்தியில் கதாநாயகனாக வளரத் தொடங்கினார்.

மக்களைப் பொருத்தவரையில் இராணுவம் மற்றும் பொலிஸ், இனக் கலவரம் என்பனவற்றின் வாயிலாக தாம் அடைந்த இன்னல்களுக்கான ஒரு நிவாரணியாக ஆயுதப் போராட்டத்தையும் பிரபாகரனையும் பார்த்தனர். இது அவர்கள் அடைந்த துயரத்தின் பிரதிபலிப்பான ஒரு குறியீடாகும். இதனால் மக்கள் பிரபாகரனையும் குறிப்பாக புலிகளையும் பொதுவாக ஆயுதப் போராட்டத்தையும் ஆதரித்தனர்.

ஏனைய ஆயுதப் போராட்ட இயக்கங்களோடு ஒப்பிடுகையில் புலிகள் தமிழ் மக்களின் இயல்புகளையும், பழக்க வழக்கங்களையும் பின்பற்றுவதன் மூலம் தம்மை மக்களின் மனங்களில் முன்னரங்கப்படுத்தினர். உதாரணமாக புலிகள் பயன்படுத்திய சொற்கள் தம்பி, அன்னை, அம்மான், மாமா, சித்தி, மாமி, அப்பையாண்ணை, அய்யாண்ணை, தம்பியப்பாஷ போன்ற இரத்த உறவுமுறை சொற்களாகும்.

ஆனால் ஏனைய இயக்கங்கள் மக்களின் இயல்புடன் ஒட்டாத “தோழர்” என்ற சொல்லைப் பயன்படுத்தினர். இதில் சரி பிழை என்பதை பற்றி இக்கட்டுரை எதுவும் குறிப்பிடவில்லை. மாறாக மக்களின் மனங்களில் எது இடம் பிடித்தது என்பதை மட்டுமே இது பதிவு செய்கிறது. எப்படியோ தமிழ் மக்களின் மனங்களில் புலி இயல்புக்கு முக்கிய மதிப்பிருந்தது என்பது கவனத்திற்குரியது.

இத்தகைய பரிமாணங்களுடன் மக்கள் மத்தியில் வளர்ந்த புலிகள் பிராந்திய அரசியலிலும் கவனத்திற்கு உரியவர்களாகினர். இவ்வகையில் இந்துசமுத்திர அரசியலின் ஒரு புள்ளியாக காணப்பட்ட பிரபாகரனை 2009ஆம் ஆண்டு பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் வீழ்த்தியதன் மூலம் ராஜபக்சக்கள் இந்து சமுத்திர அரசியலில் தனி முக்கியத்துவம் வாய்ந்த புள்ளியாய் மாறினர்.

ஒருவகையில் பிரபாகரன் மைய அரசியலை ராஜபக்சக்கள் சுவிகாரம் எடுத்துக் கொண்டனர். 1980களின் முற்பகுதியில் இருந்து வளர்ந்து வந்த பிரபாகரன் மைய அரசியல் 2009 முள்ளிவாய்க்கால் தோல்வியுடன் ராஜபக்சக்கள் மைய அரசியலாக மாறியது.

புலிகள் களங்களில் வெற்றிகண்டாலும், யுத்தத்தில் தோல்விகண்டனர். இதுபற்றிய மதிப்பீடுகள் அதுவும் விருப்பு வெறுப்புக்களைக் கடந்து மிக ஆழமாக மேற்கொள்ளப்பட வேண்டியவைகளாகும். அத்தகைய மதிப்பீடுகளை மேற்கொள்வதன் மூலம் தான் தமிழ் மக்களின் விடிவுக்கான வழிகளை தேடமுடியும்.

“தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று தந்தை செல்வா தனது அடுத்த கட்டத்திற்கான வழியின்மையை அறிவித்த வெற்றிடத்தில் பிரபாகரன் எழுச்சி பெற்றார்.

1980ஆம் ஆண்டு ஈரோஸ் அமைப்பினால் வெளியிடப்பட்ட முதலாவது “தர்க்கீகம்” என்ற மாதாந்த அரசியல் பத்திரிகையில் தலைப்புச் செய்தி பின்வருமான தலையங்கத்தின் கீழ் எழுதப்பட்டிருந்தது.

“தந்தையின் பின்பு தளபதி தலைவராவாரா?” என்பதே அந்த தலைப்பாகும். இது அன்றைய அரசியல் சூழலில் மிகவும் ஒரு சிறப்பான, மிகவும் ஆழமான ஒரு தலையங்கமாகும். ஆனால் தளபதி அமிர் அதனை நிரூபிக்கவில்லை.

இராணுவ பரிமாணம் வளாச்சியடைந்து வந்த அரசியல் சூழலில், பயங்கரவாத தடைச்சட்டம் உருவாகியிருந்த அரசியல் சூழலில் வாளேந்திய தளபதியைத்தான் மக்கள் வேண்டி நின்றார்கள். இந்த அரசியல் யதார்த்தத்தை இன்றைய நிலையில் வைத்து புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

நல்லாட்சி, நல்லிணக்கம் என்பன கானல் நீராகி அது துப்பாக்கிக் குண்டுகளால் வெளிப்படும் நிலை பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிர்களைக் காவு கொண்ட அரசியல் நீடிக்கும் நிலையில் தமிழ் மக்கள் அதற்கெதிரான குறியீடுகளை தமக்கான சக்தியாக தேடுவார்கள். அதுதான் ஊடகவியலாளர் கே.வி. நந்தனின் குரலில் வெளிப்பட்டிருக்கிறது.

இப்போது அந்த “தர்க்கீகம்” என்ற பத்திரிகையில் வந்திருந்த தலையங்கத்துக்குப் பொறுப்பாக தன்னை ஆக்கிக் கொள்ளவல்ல தலைவன் யார்? இதனை மக்கள் விக்கினேஸ்வரனை நோக்கி எதிர்பார்க்கிறார்கள். இதனை அவர் செய்வாரா அல்லது வேறு யாரும் செய்வார்களா என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு இன்றுள்ள தமிழ்த் தலைவர்கள் முன் உள்ளது.

விலைபோகாத, கண்ணியமுள்ள செயல்திறன் கொண்ட நீண்டதூர பார்வை மிக்க சிறந்த தலைவர்களை தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனை நிறைவேற்றவல்ல எவனோ அவனே வரலாற்று நாயகனாவான்.

இன்றைய பூகோள, புவிசார், அதி உயர் முகாமைத்துவ பலம் கொண்ட உலக அரசியல் சூழலில் இதனை நிறைவேற்றுவதற்கான பணி மிகவம் நுணுக்கமானவும், கடினமானதும் அதேவேளை மேன்மையானதுமாகும்.

காக்கையின் கூட்டில் குயில் முட்டையிட்டு குஞ்கு பொரிக்கும். இங்கு காக்கை கூடுகட்டுவதிலும் ஒரு பொறிமுறையுண்டு, காக்கையின் கூட்டில் குயில் முட்டையிடுவதிலும் ஒரு பொறிமுறையுண்டு. அந்த குயிலின் முட்டையை காக்கை

குஞ்சாக்குவதிலும் ஒரு பொறிமுறையுண்டு.

எப்படியோ காக்கையின் கூட்டில் அதுவும்; காக்கையின் சூட்டில் தன் முட்டையை குயில் குஞ்சாக்கிவிடுகிறது. காக்கையின் உழைப்பு, காக்கையின் அர்ப்பணிப்பு, காக்கையின் தியாகம், காக்கையின் இரையூட்டல் எல்லாம் அதன் மாறானான குயிலுக்கு சேவகமாக அமைந்துவிடுகிறது.

மேற்படி இந்தப் பொறிமுறை அரசியலுக்கும் பொருந்தும். ஈழத் தமிழர்கள் காக்கைகளாய் ஏமாறப் போகிறார்களா இல்லையா என்பதை அவர்களின் அறிவும், ஆற்றலும், ஆளுமையும்தான் நிரூபிக்க வேண்டும்.

“வேட்டைக்காரனின் கண்ணில் உடும்பின் வால் அதனைக் கட்டுவதற்கே” இவ்வாறே தமிழர்களை தமிழர்களால் கட்டிப் போடாத அரசியலை மேற்கொள்ள வேண்டுமென்றால் அதற்கான ஆழமான அரசியல் விவேகமும், பொறுப்புமிக்க சமூக உணர்வும், அரசியல் பற்றிய உள்ளார்ந்த அறிவும் அவசியமாகும்.

இப்போது களத்திலும், புலத்திலும் தென்படுவோரில் யார் தமிழ் மக்களின் இரட்கரான அரசியல் தலைவராகப் போகிறார் என்ற கேள்விக்கான பதில் அவர்களின் அர்ப்பணிப்பிலும், முன்னுதாரணத்திலும் அதற்கான செயற்பாட்டிலுமே தங்கியிருக்க முடியும்.

தந்தை செல்வா போன்று தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறி ஓய்வெடுப்பீர்களா? அல்லது அதுக்கும் ஒருபடிமேற் சென்று தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அரசியலில் இருந்து ஓதுங்குவீர்களா? என்று மேற்படி லண்டன் கூட்டத்தில் ஊடகவியலாளர் பராபிரபாவின் தாயார் (பெயர் தெரியவில்லை) திரு.விக்கினேஸ்வரனைப் பார்த்துக் கேட்ட கேள்வியானது அனைத்து தமிழ்த் தலைவர்களையும் பார்த்து கேட்ட கேள்வியாகவே இக்கட்டுரை இங்கு பதிவு செய்கிறது.

இந்தியாவை காந்தி புரிந்திருந்தார். ஆதலால் அவர் துறவிகளினதும் ஏழைகளினதும், பாமரர்களினதும் அரை ஆடையை அணிந்துகொண்டார். கூடவே இந்தியாவின் பல்வேறு மதங்களும் பின்பற்றும் “உண்ணா விரதத்தை” கைக்கொண்டார்.

கறுப்பின மற்றும் தென்னாப்பிரிக்க விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த மண்டேலா சிறைச்சாலையை விடுதலைக்கான ஊர்த்தியாக்கிக் கொண்டார்.

மக்களை நேசிப்பதில் இருந்தும் அதற்கான அர்ப்பணிப்பில் இருந்தும் அதற்கேற்ற அறிவாற்றல் மற்றும் கண்ணியத்தில் இருந்தும் உன்னதமான தலைவர்கள் தோன்றுகிறார்கள் என்பதையே வரலாறு தன் பக்கங்களில் எழுதி வைத்திருக்கிறது.

-tamilwin.com

TAGS: