யுத்தத்தால் சேதமடைந்த குழந்தைவேல் சுவாமிகள் சமாதி சிவாலயத்திற்குச் செந்தமிழில் குடமுழுக்கு

வரலாற்றுப் பெருமை மிகு கீரிமலை மண்ணில் ஈழத்துச் சித்தர் பரம்பரை முன்னோடிகளில் ஒருவரான குழந்தைவேல் சுவாமிகள் சமாதி சிவாலயம் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் மீள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு இன்று செந்தமிழ் ஓத திருக்குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது.

ஈழத்துச் சித்தர்களின் முக்கியமானவராகத் திகழ்ந்த கடையிற் சுவாமிகளின் நேரடிச் சீடரான குழந்தை வேல் சுவாமிகள் 1909ஆம் ஆண்டு கீரிமலை மண்ணிலே சமாதியடைந்தார்.

அவர் சமாதி அடைந்த கீரிமலை தீர்த்தக் கரையிலேயே அவருக்குச் சமாதி அமைக்கப்பெற்றுச் சிவாலயமும் அமைக்கப் பெற்றது.

நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த குழந்தை வேல் சுவாமிகள் சமாதி சிவாலயம் நாட்டில் கடந்த கால யுத்த சூழ்நிலைகளால் முழுமையாகச் சேதமடைந்தது.

குழந்தைவேல் சுவாமிகளின் பூட்டனாரின் நிதிப்பங்களிப்பில் சைவமகா சபையின் சிவதொண்டர்களின் பேராதரவுடன் மீள் புனருத்தாரண சபையால் பல இலட்சம் ரூபா நிதியில் இவ்வாலயம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

செந்தமிழில் இடம்பெற்ற திருக்குடமுழுக்கு விழாவில் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தென்கயிலை ஆதீனம் அகத்தியர் அடிகள், யாழ். சின்மயா மிஷன் தலைவர் ஜாக்கிரத சைதன்ய சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு திருக்குடமுழுக்கு இடையூறின்றி இடம்பெற ஆசிகள் வழங்கினர்.

இன்றைய திருக்குடமுழுக்கு சமஸ்கிருத மந்திரங்கள் எதுவுமின்றி முழுக்க முழுக்கச் செந்தமிழால் நடாத்தி முடிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

-http://www.tamilwin.com

அத்துடன் சித்தர் பீடத்தினுள் புதிதாகச் சைவ அறப்பணி மையம் நிர்மாணிக்கப் பெற்றுள்ளது. குறித்த அறப்பணி மையத்தை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்த அறப்பணி நிலையம் மூலம் எதிர்காலத்தில் யோகாசனம், தியானம் மற்றும் எமது சமூதாயத்திலுள்ள மக்களை ஆற்றுப்படுத்தும் பல்வேறு செயற்பாடுகள் என்பன மேற்கொள்ளப்படவுள்ளது எனச் சைவமகா சபையின் செயலாளரும், மீள் புனருத்தாரண சபையைச் சேர்ந்தவருமான வைத்தியகலாநிதி ப. நந்தகுமார் தெரிவித்தார்.

இதேவேளை, குழந்தைவேல் சுவாமிகள் சமாதி சிவாலயத்திற்கருகில் சித்தர் அருளம்பல சுவாமிகள் உட்பட 40 சித்தர்களின் சமாதிகள் அமையப் பெற்றுள்ளமை யாழ். மண்ணிற்கும், சைவத் தமிழ் உலகிற்கும் பெருமை சேர்க்கும் விடயமாகும்.

-http://www.tamilwin.com

TAGS: