இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிலளிப்பதற்காக சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான குழு, ஜெனிவாவுக்கு செல்லவுள்ளது.
இந்தக்குழு, ஜெனிவாவில் நடைபெறவுள்ள சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் 59வது நிகழ்வில் பங்கேற்கவுள்ளது.
இந்தக்குழுவில் ஐக்கிய நாடுகளின் நியூயோர்க்கிற்கான வதிவிடப்பிரதிநிதி ரொஹான் பெரேரரா, ஜெனீவாவுக்கான பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, பொலிஸ் திணைக்களத்தின் சட்ட உதவி பிரிவு உதவி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, தேசிய புலனாய்வுத்துறை பணிப்பாளர் சிசிர மெண்டிஸ் ஆகியோர் அடங்குகின்றனர்.
எதிர்வரும் 7ஆம் திகதி முதல் டிசம்பர் 7ஆம் திகதி வரை இந்த அமர்வு இடம்பெறவுள்ளது.
இதன்போது இலங்கை உட்பட்ட பல்வேறு நாடுகளின்மீது சுமத்தப்பட்டுள்ள சித்திரவதை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் ஆராயப்படவுள்ளன.
அட்டவணைப்படி, 8,9 ஆம் திகதிகளில் ஈக்குவடோர் பற்றியும், 9,10ஆம் திகதிகளில் பின்லாந்து பற்றியும், 11 முதல் 14 வரை மொனாக்கோ பற்றியும் 15,16 ஆம் திகதிகளில் இலங்கை பற்றியும், 18 முதல் 21 வரை நமீபியா தொடர்பிலும் ஜெனீவாக்குழு ஆராயவுள்ளது.
சித்திரவதைகளுக்கு எதிரான ஜெனீவாக்குழுவில் 159 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இந்தக்குழுவில் 10 சுயாதீனமான நிபுணர்கள் அங்கம் வகிக்கின்றனர். அவர்கள், இலங்கையின் குழுவுடன் கலந்துரையாடல்களையும் நடத்தவுள்ளனர்
இந்தநிலையில் டிசம்பர் 7ஆம் திகதி குழுவின் இறுதிக்கண்டறிதல்கள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-http://old.tamilwin.com