இந்தியாவின் மூன்று கோரிக்கைகள் – நிராகரித்தது சிறிலங்கா

மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இந்தியத் தரப்பில் முன்வைக்கப்பட்ட மூன்று கோரிக்கைகளை சிறிலங்கா அமைச்சர்கள் நிராகரித்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான குழுவுக்கும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவுக்கும் இடையில் மீனவர்கள் விவகாரம் தொடர்பாக நேற்று புதுடெல்லியில் பேச்சுக்கள் நடத்தப்பட்டிருந்தன

இந்தப் பேச்சுக்கள் தொடர்பான நேற்று கூட்டறிக்கை ஒன்றும் புதுடெல்லியில் வெளியிடப்பட்டது.

அதில், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு, கூட்டுக் குழு ஒன்றை அமைக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும், இந்தக் குழுவின் கூட்டத்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்துவதெனவும், இரு நாடுகளின் மீன்பிடி அமைச்சர்களும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சந்தித்துப் பேசுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

indo-sl-meet

அத்துடன்,  இரண்டு நாடுகளின் கடலோரக்காவல்படைகளுக்கும் இடையில் நேரடி தொலைபேசி வசதியை ஏற்படுத்தவும் இணக்கம் காணப்பட்டது.

அத்துமீறும் மீனவர்கள் மீது வன்முறையை பிரயோகிக்க கூடாது என்றும் இந்தப் பேச்சுக்களில் இணக்கம் காணப்பட்டதாகவும் அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

எனினும், சட்டவிரோதமான இழுவைப்படகு மீன்பிடி முறையை தடுப்பதற்கு மூன்று ஆண்டு காலஅவகாசத்தை வழங்குமாறு இந்தியத் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சிறிலங்கா குழு நிராகரித்து விட்டது.

இதுபற்றி பேச்சுக்களில் பங்கேற்ற சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தகவல் வெளியிடுகையில், பாக்கு நீரிணையில் இழுவைப்படகுகளில் மீன்பிடிப்பதை தடை செய்வதற்கு மூன்று ஆண்டு கால அவகாசத்தை வழங்குமாறும், அத்துமீறிய படகுகளை விடுவிக்குமாறும், சிறிலங்கா கடற்பரப்பில் 80 நாட்கள் மீன்பிடிக்க இந்திய மீனவர்களை அனுமதிக்குமாறும் இந்தியத்தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை  நிராகரித்து விட்டதாக குறிப்பிட்டார்.

சிறிலங்கா கடற்பரப்பில் பெருமளவில் இந்திய மீனவர்கள் அத்துமீறும் விவகாரத்துக்கு தீர்வு காண்பதற்கான தடைக்கற்களை இந்தப் பேச்சுக்களின் மூலம் நீக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

-http://www.puthinappalakai.net

TAGS: