புதிதாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் அமைப்பு வரைபின் ஊடாக மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பின் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் தொடர்பில் முன்னைய யாப்பின் 13வது திருத்தச்சட்டத்தில் காணப்பட்ட அனைத்து உரிமைகளும் அப்படியே உள்வாங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் மாகாண சபைகள் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைக் கொண்டிருக்கும் வகையில் அதிகாரப் பரவலாக்கல் மேற்கொள்ளப்படும்.
அத்துடன் ஜனாதிபதி பதவியில் உள்ளவர் நினைத்த மாத்திரத்தில் மாகாண சபைகளைக் கலைக்கும் வகையில் இதுவரை காலமும் வழங்கப்பட்டிருந்த அதிகாரமும் புதிய அரசியல் அமைப்பின் ஊடாக ரத்துச் செய்யப்படவுள்ளது.
மேலும் மாகாண சபைகளுக்கு நிதி அதிகாரம், ஆளுனர்களை நியமிக்கும்போது மாகாண முதலமைச்சர்களின் ஆலோசனை கோரப்பட வேண்டுமென்ற சரத்து என்பன புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான தகவல்களை அரசியல் அமைப்பு உருவாக்கக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன வெளியிட்டுள்ளார்.
-http://old.tamilwin.com