தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருப்பது நியாயமான ஒன்று என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் இதுவரையிலும் ஒன்றுமே நடைபெறவில்லை. நடப்பதும் மந்தகதியிலேயே நடைபெறுகின்றது. எனவே 20 வருடம் வராத தீர்வு நாளை வந்துவிடுமா என மக்கள் கேட்பது நியாயமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி சென்றுள்ள அவர், பிபிசி தமிழோசையின் நேரலையில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, ஒரே கட்சியாக மாற்ற நினைப்பது தவறு எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் கட்சிகளின் கூட்டமைப்புதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு. அதை ஒரு கட்சியாக மாற்ற வேண்டும் என நினைப்பது தவறு. அது கூட்டமைப்பாகத் தான் இருக்கிறது, அப்படியாகத் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு கட்சியாக மாற வேண்டுமானால், அதுதொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அத்தகைய தீர்மானம் எதுவும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்க மட்டுமே தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது என எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://old.tamilwin.com