வடக்கில் நடக்கும்இன்றைய நிலைகளுக்கு முற்று முழுதாக இலங்கை அரசாங்கங்கள் தான் காரணம் என்பதை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் காட்ட வேண்டிய கட்டாய சூழல்கள் ஏற்பட்டிருப்பதை இன்றைய காலகட்டத்தில்தமிழ் மக்களும், தமிழர் அரசியல் தரப்பும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
வடக்கில் 1 இலட்சத்து 50 ஆயிரம் இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன், அவர்களுக்கு மேலதிகமாக கடற்படை, விமானப்படை மற்றும் வலம் வரும் நிலையில், கடல் வழியாக கஞ்சா வட பகுதிக்கு எவ்வாறு எடுத்து வரப்படுகின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற காலங்களில் மிக அமைதியாகக் காணப்பட்ட வட பகுதி தற்போது கேரள கஞ்சா வர்த்தகத்தின் கேந்திர நிலையமாக உருவாகியிருப்பது குறித்து கவலை வெளியிட்டிருக்கும் வடக்கு முதலமைச்சர்,
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை கரையேற்றுவது எவ்வாறு என விழித்துக் கொண்டிருக்கும் வேளைகளில் வாள்வீச்சு, போதைப் பொருள் பாவனை மக்களிடையே அதிகளவில் பரவிவருவது மிகுந்த குழப்பத்தை உண்டுபண்ணுவதாக அமைந்துள்ளது.
வட பகுதியில் தொடர்ந்தும் நிலவும் இறுக்கமான பாதுகாப்பு, காவல்களையும் தாண்டிப் போதைப் பொருட்கள் எடுத்துவரப்படுகின்றது எனில், எமது பாதுகாப்பு நடவடிக்கைகளில் எங்கேயோ ஓட்டைகள் காணப்படுகின்றது என்பது புலனாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேலியே பயிரை மேய்ந்து வருகின்றதோ எனச் சந்தேகமும்எழுகிறது. போரில் ஈடுபட்ட படையினர் வட மாகாணத்தில் பல ஏக்கர் காணிகளில் தொடர்ந்து இருப்பது மக்களின் சுமூகமான, சுதந்திரமான வாழ்விற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
படிப்படியாக வட மாகாணத்தில் இருந்து படையினர் வாபஸ் பெற வேண்டும். வடக்கிலுள்ள வனப் பிரதேசங்கள் பாதிக்கப்பட்டு வருவதுடன், வட பகுதியில் தமிழர்களுக்குரிய அடையாளங்கள், தெற்கில் உள்ள கடும் போக்காளர்களாலும் ஏனையோராலும் மறுக்கப்பட்டுவருகிறதென்றும்அவர் தன்னுடைய ஆதங்கத்தினை வெளியிட்டு இருக்கிறார்.
உண்மையில் வடக்கு மாகாணமுதலமைச்சர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ஆணித்தரமானவை. அவை இன்று வடக்கினைஅரசாங்கம் எவ்வாறு நோக்குகிறது என்பது தொடர்பிலான தெளிவான பார்வை இது.
இலங்கை அரசாங்கம் எதை நினைக்கிறதோ அதையே திட்டமிட்ட வகையில் செயற்படுத்திவருகின்றது.
மூன்று சாகப்தங்களாகபோரினால் பாதிக்கப்பட்டு எமது உயிர்களையும் சொத்துக்களையும் எதிர்கால வாழ்வினையும்தொலைத்துவிட்டு, அந்தச் சரிவில் இருந்து மெதுவாக எழுந்து நிற்க முன்னர், வடக்கில்இன்று நிகழ்த்தப்படும் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளால் நெஞ்சம் நெக்குருகிப்போகின்றது.
வடக்கை மையப்படுத்தி, வடக்கின் அடுத்த தலைமுறை சுயசிந்தனை இல்லாத, ஆற்றலற்ற, விடுதலை உணர்வில்லாத ஒருதலைமுறை உருவாவதை, உருவாக்குவதையே அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. அதையே தெற்கும் விரும்புகிறது.
வட மாகணத்தில் இன்று அதிகளவில் கேரள கஞ்சா கிடைக்கிறது. சாதாரணமாகவே இது அங்கும் இங்குமாகபரவிக்கிடக்கிறது.
போர் நடைபெற்ற காலத்தில்கூட இந்தக் கஞ்சா கலாச்சாரம் இருந்ததில்லை. ஆனால் போரை வெற்றிகரமாக முடிவிற்குக்கொண்டு, நாட்டில் புலிப்பயங்கரவாதத்தை அழித்த அரசாங்கத்தினால், கஞ்சா கடத்தலையும், இறக்குமதிகளையும் கட்டுப்படுத்த முடியவில்லை.
புலிகளை அழித்தவர்களுக்கு இந்த சின்ன விடையத்தை அழிக்கத் தெரியாமல் இல்லை. முதலமைச்சர் சொல்வதைப் போன்று வடக்கில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் கடமையில் இருந்தும் இவ்வளவு கஞ்சாவும், வாள் வெட்டுக் குழுக்களும் எங்கிருந்து வருகின்றன? எவ்வாறு செயற்படுகின்றன என்பது குறித்து சிந்திப்பது அவ்வளவு பெரிய விடையமல்ல.
தெற்கிலும், நாடாளுமன்றத்திலும் வடக்கும் தெற்கும் ஒன்று தான் என்று வாய் கிழியக் கத்தும்அரசியல்வாதிகள், வடக்கில் நடக்கும் இத்தகைய நிகழ்வுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது விநோதம் தான்.
உண்மையில் தெற்கின்உண்மையான நோக்கம் ஒன்றே ஒன்று தான். தமிழ் மக்களை எப்பாடுபட்டேனும் அடக்கிவிடவேண்டும். அவர்களின் அடுத்த தலைமுறையினர் திசை மாறிச் செல்ல வேண்டும். அவர்களும்சுயநிர்ணயம், சுயாட்சி, அதிகாரம், தீர்வு என்று உரிமைக் குரல் எழுப்பக் கூடாது.
இதை இன்றைய அரசாங்கம்மட்டுமல்ல, ஆட்சிப் பீடம் ஏறிய அத்தனை அரசாங்கங்களும், ஆட்சியாளர்களும் செய்துதான் வந்தனர். அதனால் இது மைத்திரி ரணில் அரசாங்கத்தின் புதிய உத்தியல்ல. முன்னைய அரசாங்கங்கள் பள்ளிக்கூடங்கள், ஏனைய கல்வி நிறுவனங்களை அழித்தன.
இன்றைய அரசாங்கம் மாணவர்களையும், இளைஞர்களையும் அழிக்க, சிதைக்க தலைப்பட்டு இருக்கிறது.
இலங்கையில் மகிந்த ஆட்சியை ஒழித்து, மைத்திரி ஆட்சியைக் கொண்டு வருவதற்கு வேண்டுமானால் தமிழ் மக்கள்உதவிபுரிந்திருக்கலாம். அதற்கு நன்றி விசுவாசமாக இவர்கள் தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை வழங்க முயற்சிப்பார்கள் என்று எதிர் பார்ப்பது முட்டாள்த்தனம்.
சர்வதேச அழுத்தங்களை இலங்கை அரசாங்கங்கள் சமாளிக்கவே முயற்சிக்கின்றன. அந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கைத்தமிழர்களுக்கு சுதந்திரம், ஒரு தடை அகற்றலை செய்வதாக காட்டிக்கொள்ளும் அரசு, அந்தஇடைவெளியிலும் தமிழர்கள் நிதான நிலைக்கு வரக்கூடாது என்பதில் விடாப்பிடியாகஇருக்கிறது.
ஜனாதிபதி எளிமையானவராக தெரியலாம். அவர், சாதாரணமானவர்களைப் போன்று செயற்படலாம். ஆனால் அவரும் முன்னைய அரசாங்கங்களின் தலைவர்களைப் போன்றே செயற்படுகின்றார்.
கஞ்சா கடத்தும்குழுக்களையோ? வாள் வெட்டுக் குழுக்களையோ கட்டுப்படுத்த இலங்கைப் படைகளால்முடியவில்லை என்று அரசாங்கம் வாதாடுமானால் எதிர்காலத்தில் புலிகள் தோற்றம்பெற்றால் அவர்களால் கட்டுப்படுத்த முடியாமல் போகும் என்றொரு கருத்தை முன்வைப்பது சிறந்தது.
உண்மையில் அரசாங்கம்சிறந்த நடிப்பை வெளிக்காட்டுக்கின்றது. அது தமிழர்களை இன்னொரு விதத்தில் அழித்துக்கொண்டுவருகின்றது. அது மறைமுகமாகவே நடத்தப்படுகின்றது.
இதைத்தான் வடக்குமுதலமைச்சர் வெளிப்படுத்தியிருக்கிறார். இதையெல்லாம் நினைவில் வைத்து தான் வடக்கு முதலமைச்சரை தெற்கில் ஊடகங்கள் உட்பட அரசியல் தலைவர்கள் தூற்றத்தொடங்கியிருக்கின்றனர்.
இதை தடுப்பதற்கு தமிழ்த்தலைமைகள் என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. மௌனப் போக்கையும் மென்வலுமையும்தெற்கிற்கு தொடர்ந்து காட்டிக் கொண்டிருந்தால் போதைகளின் சொர்க்கா புரியாக வடக்குமாறும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
-http://www.tamilwin.com