தோல்விகளை வழியனுப்பி வெற்றிகளுக்கு வழிதிறக்க வேண்டிய காலமிது. கற்பனைகளுக்கு சமாதி கட்டி நடைமுறைக்கு மகுடம் சூட்டவேண்டிய காலமிது. “எண்ணங்களும் உணர்ச்சிகளும் யார்த்தத்தில் சிக்கலானவை”
வரலாறு எம்மை எங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறதோ அங்கிருந்துதான் அடுத்த கட்டப் பயணத்தை தொடரலாமே தவிர மனவேகத்தால் ஆயிரம் மைலுக்கு அப்பால் தாவிப்பயணிக்க முடியாது.
“என்ன இருக்கின்றதோ அதைக்கொண்டுதான் எதையாவது செய்யலாமே தவிர இல்லாததிலிருந்து எதையும் படைக்க முடியாது”
ஈழத் தமிழரிடம் 21ஆம் நூற்றாண்டின் முதலாவது பத்தாண்டு சுமைகளையும், சவால்களையும், நெருக்கடிகளையும் ஒப்படைத்துவிட்டு விடைபெற்றுச் சென்று விட்டது.
இரண்டாவது பத்தாண்டு ஒரு புதிய அரசியல் யுகத்திற்குள் பிரவேசிக்குமாறு தமிழ் மக்களை கோரி நிற்கின்றது. புதிய யுகம், புதிய யுகத்திற்கான புதிய சிந்தனை, இவற்றிற்கு பொருத்தமான புதிய வழிமுறைகள் என்பனவற்றைக் கண்டறிந்து தமிழ் மக்கள் தம்மை தற்காத்து முன்னேற வேண்டியுள்ளது.
வரலாறு தன் வளர்ச்சிக்கு அவ்வப்போது மாற்றங்களையோ அன்றிச் சீர்திருத்தங்களையோ கோரி நிற்கும். 17ஆம் நூற்றாண்டின் இறுதி வரை ரஷ்யா இறுகிப்போன ஒரு பழைய கலாச்சாரத்திற்குள் சிறையுண்டியிருந்தது.
அக்காலகட்டத்தில் உருவான பெரும் சீர்திருத்தம் ஒன்றுதான் ரஷ்யாவை நவீன யுகத்திற்குள் நுழைய வைத்தது. அதாவது 17ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 18ஆம் நூற்றாண்டின் முதற்காற் பகுதியில் ரஷ்யாவின் சக்கரவர்த்தியாக இருந்த மகா பீட்டர் பாரிய சீர்திருத்த இயக்கத்தை ஆரம்பித்து ரஷ்யாவை பெரிதும் நவீன மயமாக்கல் பாதையில் வழிநடத்திச் சென்றார்.
அந்த சீர்திருத்தத்திற்கு உட்பட்ட ரஷ்யாதான் இன்றைய நவீன ரஷ்யாவிற்கான அடிப்படை. 19ஆம் நூற்றாண்டின் மத்திவரை ஜப்பான் முற்றிலும் பழைமைக்குள் புதைந்திருந்த ஒரு நாடு.
ஆனால் 19ஆம் நூற்றாண்டின் மத்தியைத் தொடர்ந்து அங்கு சக்கரவர்த்தி மேஜி தலைமையில் மேஜி புரட்சி எனப்படும் நவீன மயமாக்கலுக்கான பாரிய சீர்திருத்த இயக்கம் உருவானது. அதுதான் இன்றைய ஜப்பானின் வளர்ச்சிக்கான அடிப்படை.
சீனாவில் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து டாக்டர் சன்யாட்சென், பின் நடுப்பகுதியில் மாசேதுங், முக்காற் பகுதியில் டெங் சியாவோ பிங் என மூன்று கட்டங்களாக பாரிய மாற்றங்களுக்கு அல்லது சீர்திருத்தங்களுக்கு சீனா உள்ளானது.
இறுதியாக டெங் சியாவோ பிங்கால் உருவாக்கப்பட்ட நால்வகை நவீன மயமாக்கத்தின் அடிப்படையில் இன்றைய சீனா உலகமய அரசியலில் பிரவேசித்துள்ளது.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் ஏற்பட்ட மத மற்றும் சமூக சீர்திருத்த இயக்கங்களின் அடிப்படையில் இன்றைய இந்தியா வடிவம் பெறத் தொடங்கியது.
வரலாறு தன் வளர்ச்சிக்கு வேண்டிய வகையில் மாற்றங்களை அல்லது சீர்திருத்தங்களை அல்லது புரட்சிகளை அல்லது விடுதலைகளை ஆங்காங்கே அவ்வப்போது கோருவது வழக்கம்.
அப்படி எங்கு மாற்றம் அல்லது சீர்திருத்தம் அல்லது புரட்சி அல்லது விடுதலை ஏற்படுகிறதோ அங்குதான் வரலாறு புதிய வேகத்தில் முன்னேறத் தொடங்குகிறது.
குறைவற்ற வீரத்தையும், அளவற்ற தியாகத்தையும் புரிந்த ஈழத் தமிழர்கள் தற்போது முள்ளிவாய்க்கால் உலைக்களத்திலிருந்து புதிய வார்ப்புச் செய்யப்பட வேண்டிய வரலாற்றைக் கொண்டுள்ளார்கள்.
முள்ளிவாய்க்கால் உலைக்களம் தமிழரை புடமிட்டு புதிய பயணத்திற்கு வழிகோரி நிற்கின்றது. சிங்கள மக்கள் மத்தியில் அவ்வப்போது பல மறுமலர்ச்சி இயக்கங்கள் தோன்றின.
இந்த மறுமலர்ச்சி இயக்கங்கள் எதுவும் பல்லினங்களைத் தழுவிய ஒரு புதிய இலங்கையை உருவாக்குவதற்கான மறுமலர்ச்சிகளாக அல்லாமல் அவை ஓரினத்தன்மை வாய்ந்தவையாக மட்டுமன்றி ஏனைய இனங்களை காவுகொள்வனவாகவும் வடிவமைக்கப்பட்டன.
1880, 1910, 1950களில் என முக்கிய மூன்று கட்ட மறுமலர்ச்சி இயக்கங்கள் சிங்கள – பௌத்த மக்கள் மத்தியில் எழுந்தன. 1880களில் ஏற்பட்ட பௌத்த மறுமலர்ச்சியைத் தொடர்ந்து 1915ஆம் அரசியல் விடுதலைக்கான ‘மறுமலர்ச்சி” எழுந்தது.
அதாவது இலங்கையில் கண்டி இராச்சியம் இறுதியாக 1815ஆம் ஆண்டு பிரித்தானியர் வசமானதைக் குறிக்கும் வகையில் 1915ஆம் ஆண்டு ஒரு நூற்றாண்டு நினைவை சிங்கள பௌத்தர்கள் மேற்கொண்டனர்.
அப்போது அதன் பின்னணியில் “கம்பளைக் கலகம்” எனப்படும் முஸ்லிம் எதிர்ப்புக் கலவரம் உருவானது. மேற்படி நூற்றாண்டு நினைவைக் குறிக்கும் வகையில் ஏற்பட்ட எழுச்சியின் பின்னணியில் 1915ஆம் ஆண்டு வாளேந்திய சிங்கக் கொடி வடிவமைக்கப்பட்டது.
இதுதான் பின்பு சுதந்திர காலத்தில் உருவான இலங்கையின் தேசியக் கொடிக்கான அடிப்படையாய் அமைந்து அதன்படி வாளேந்திய சிங்கக் கொடி வடிவமைக்கப்பட்டது.
ஈழத் தமிழர்களும், சிங்கள மக்களும் தனித்தனிப் பாதையில் தத்தமக்கான தேசிய இயக்கங்களை ஆரம்பித்தனர். இதில் சிங்கள – பௌத்தர்கள் முழு இலங்கைக்கும் ஏகத்துவம் கோரும் வகையிலான தேசியத்தை முன்னிறுத்தினர்.
ஆனால் தமிழ்த் தரப்பினர் தமது மொழி, மதம் சார்ந்த தேசியத்தை ஒருபுறமும், முழு இலங்கையும் தழுவிய பல் தேசிய இன தேசியத்தை மறுபுறமும் தாங்கிக் கருக்கொண்டனர்.
19ஆம் ஆண்டின் இறுதியில் வடக்கே ஆறுமுக நாவலர் தமிழ் – சைவம் – கல்வி என்பன சார்ந்து மறுமலர்ச்சிக்கான தொடக்க நிலையை உருவாக்கினார்.
கிழக்கில் தோன்றிய சுவாமி விபுலானந்தர் அறிவியல் பரிமாணத்துடன் தமிழ் – இந்துமத ஆன்மிகம் – தமிழசை சார்ந்து அதிக சமூக நல்லுணர்வுடன் மறுமலர்ச்சியை உருவாக்க முற்பட்டார்.
இவ்வாறு தமிழ் மக்கள் தரப்பில் இருபரிமாணங்களில் இரு முக்கிய தலைவர்கள் காணப்பட்டனர். ஆனால் தமிழ்த் தரப்பில் தோன்றிய மேற்படி மாற்றங்கள் அல்லது மறுமலர்ச்சிக்கான தொடக்கங்கள் அரசியல் ஆதிக்கப் பரிமாணம் கொண்டவையாய் அமையவில்லை.
அதேவேளை குறிப்பாக 1920களில் தமிழ் மக்கள் மத்தியில் இலங்கை தழுவிய மற்றும் விடுதலை நன்நோக்கம் கருதிய சிந்தனை தோன்றியிருந்தது.
முதல் முறையாக தமிழ் மக்கள் மத்தியில் இருந்துதான் முழு இலங்கையின் விடுதலைக்கான அமைப்பு ரீதியான குரல் எழுந்தது. அத்துடன் தமிழ் மக்கள் மத்தியில் இருந்துதான் முதல் முறையாக இலங்கையில் மாணவர் இயக்கம் 1920களின் மத்தியில் உருவானது.
மேலும் “ஈழகேசரி” என்ற தலைப்பில் உலகளாவிய விடுதலை உணர்வுடன் கலந்த வகையில் இந்திய தேசிய இயக்கத்தின் செல்வாக்கிற்கு உட்பட்ட வகையில் தமிழுடன் கூடவே சிங்கள மக்களையும் மற்றும் பல்லின உணர்வுடன் இப்பத்திரிகை செயற்பட்டது.
20ஆம் நுற்றாண்டின் காற்பகுதியைத் தொடர்ந்து இப்பத்திரிகையின் சமூக பரிமாணம் கொண்ட செயற்பாடு காணப்பட்டது. இது அதிகம் இலட்சியபூர்வமானதாக காணப்பட்டது.
தமிழ்த் தரப்பில் தோன்றிய கல்விகற்ற மத்தியதர வர்க்கமானது முற்றிலும் அரச உத்தியோகத்தை நம்பிய வர்க்கமாக காணப்பட்ட நிலையில் அது தமிழ் மண்ணிற்கு வெளியே முழு இலங்கை தழுவிய உத்தியோக நலனை கொண்டதாக அமைந்ததுடன் இலங்கைக்கு வெளியே சிங்கப்பூர் உள்ளிட்ட மலேசியா மற்றும் பர்மா போன்ற வெளிநாடுகளை நோக்கிய உத்தியோக நலனைக் கொண்ட மத்தியத்தர வர்க்கமாய் திகழ்ந்தது.
ஆதலால் அந்த மத்தியத்தர வர்க்கத்தினரிடம் அரசாங்க உத்தியோக நோக்கின் அடிப்படையிலான ஒருவகை எஜமானிய விசுவாசமும், அதேவேளை தம் பிரதேசம் கடந்த நலன்சார்ந்த சிந்தனையும் கூடவே குடிகொண்டதால் தமிழ்த் தேசியம் பற்றிய வீரியமிக்க செயற்பாடுகளில் அவ்வர்க்கம் சார்ந்த சிந்தனையாளர்கள் பெருமளவில் ஈடுபட இயலாதவர்களாய் இருந்தனர்.
ஆனால் சிங்கள மக்கள் தரப்பில் இது அவ்வாறில்லை. அவர்களிடம் மண்ணின் மைந்தர் கோட்பாடும் அதனுடன் அது முழு இலங்கைக்குமான மண்ணின் மைந்தர் கோட்பாடாகவும் வடிவம் பெற்று சிங்கள – பௌத்த தேசியவாதம் பலமான பௌத்த மகா சங்கத்தின் பின்னணியில் சிங்கள அறிஞர்களின் உயிர்ததுடிப்பான பங்களிப்புடனும், செயற்பாட்டுடனும் கூடிய வகையில் வீறுபெற்ற மறுமலர்ச்சி இயக்கங்கள் உருவாகின.
நிறுவன ரீதியான இராஜதந்திர அர்த்தத்தில் அதன் தந்தையாக விளங்குபவர் சேர்.ஓலிவர் குணதிலக ஆவார். இவருடன் தான் இலங்கையின் நவீன இராஜதந்திர கட்டமைப்பும் அற்கான சிந்தனைப் போக்கும் உருவாகின எனலாம்.
இந்த வகையில் இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ்.சேனநாயக்கவின் இராஜதந்திர மூளையாக இவர் செயற்பட்டார்.
இவ்வாறு சிங்களத் தரப்பில் உருவான சேர்.ஓலிவர் குணதிலகவிற்கு நிகரான ஒரு இராஜதந்திரியை தமிழ்த் தரப்பு இதுவரை கண்டதில்லை.
தமிழ்த் தேசியப் பார்வையில் இருந்து இவர் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவரேயானாலும் சிங்கள -பௌத்த தேசியத்தின் கோணத்தில் இவர் அதிகம் மதிநுட்பம் வாய்ந்த செயற்திறன் மிக்க நடைமுறை சார்ந்த ஒரு முன்னணி இராஜதந்திரியாவார்.
இவருக்கு நிகரான திறன் கொண்ட ஒரு இராஜதந்திரியை தமிழ் மண் இதுவரை கொண்டிருக்கவில்லை என்ற உண்மையை தமிழ்த்தரப்பு புத்திபூர்வமாக ஏற்றுக் கொள்ளவேண்டியது அவசியம்.
இதேபோல இலங்கையின் வெளியுறவுக் கொள்கை சார்ந்த அறிவியல் ரீதியான கட்டமைப்பிற்குரிய ஓர் ஆராய்ச்சியாளராக எஸ்.யு.கொடிகார விளங்குகிறார்.
இவர் 1950களின் மத்தியில் ஏற்பட்ட சிங்கள – பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் பிரசவமாவார். இலங்கையின் இன்றைய வெளியுறவுக் கொள்கைப் போக்குக்கான அறிவியல் கட்டமைப்பானது இவரது சிந்தனையில் இருந்து வடிவம் பெற்றதாகும்.
மேலும் 1950களின் மத்தியில் தோன்றிய மறுமலர்ச்சி இயக்கத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றாக சிங்கள கலை இலக்கியம் என்பன வீறுகொண்டன.
இவ்வாறன கலை இலக்கியத்திற்கு சிங்களத் தரப்பில் பலமாக அரசியல் தலைமைத்துவம் இருந்தது. எதிர்வீர சரச்சந்திராவின் “மனமே” நாடகம் சர்வதேச தரம்வாய்ந்த ஒன்றாய் அமைந்தது.
தமிழ்த் தரப்பில் மண்ணோடு ஒட்டாத அரசியல் பின்னணியில் தமிழ் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் தமிழ் உயர்குழாத்தினரின் மேற்படி மண்ணோடு ஒட்டாத ஊசலாட்டத்தின் பின்னணியில் அறிவியல், கலை இலக்கியம் என்பன சிங்களத் தரப்பில் எழுந்ததுபோல் பலங்கொண்டு எழவில்லை.
சேர்.ஜோன் கொத்தவலாவல பாதுகாப்பு பல்கலைக்கழத்தின் பெறுபேறுகளாய் வெளிவரும் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை சார்ந்த அறிவியல் ஆய்வுகளுக்கு நிகராக தமிழ்த் தரப்பில் அறிவியல் முயற்சிகள் இல்லை.
வெளிவிவகாரம், கொள்கைவகுப்பு, இராஜதந்திரம் சார்ந்து சிங்களத் தரப்பு மிகப் பாரிய நிறுவன வகைப்பட்ட வளர்ச்சியடைந்திருக்கிறது.
இதற்கு ஈடாக என்று சொல்வதற்கும் அப்பால் இதில் அகர வரிசை தொடக்கத்தைக்கூட நிறுவன அர்த்தத்தில் தமிழ்த் தரப்பு இதுவரை கொண்டிருக்கவில்லை.
அறிவியல் – கலை – இலக்கியம் – பண்பாடு என்பன சார்ந்து நிறுவன ரீதியான முன்னெடுப்புக்களை தமிழ் அரசியல் தலைமைகள் மேற்கொள்ள வேண்டும்.
தேசியம் எப்போதும் அரசியல் தலைமைத்துவத்தினால் அதிகம் போசித்து வளர்க்கப்படும் ஒன்றாகும். இதில் தமிழ்த் தரப்பு அரசியல் அர்த்தத்தில் பெரும் வெற்றிடத்தையே கொண்டுள்ளது.
தமிழ்த் தரப்பில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மறுமலர்ச்சிக்கான கருக்கள் தோன்றிய போதிலும் அவை சிங்கள பௌத்த மறுமலர்ச்சியோடு ஒப்பிடுகையில் வீரியமற்றதாகவும், அரசியல் தலைமை அற்றதாகவும் காணப்பட்டது.
கலைத்துறையில் தனிப்பட்டோரின் ஆர்வமும் அக்கறையும்தான் முதன்மை பெற்றிருந்தன. தமிழில் கூத்துத்துறை சார்ந்து திரு.வைரமுத்து “அரிச்சந்திர மயான காண்டத்தின்” மூலம் முத்திரை பதித்திருந்தார்.
ஆனால் இதில் இவருக்கு அரசியல் போசிப்பு கிடைத்திருக்கவில்லை. நவீன தமிழ் நாடகம் பொருட்டு பேராசிரியர் சு.நித்தியானந்தன் முன்னணித் தொடக்கினராக இருந்துள்ளார்.
இவரின் பின்பு இத்துறை சார்ந்து உயிருடன் இருப்பவர்களில் போராசிரியர் மௌனகுரு, திருவாளர்கள் தாஸிசியஸ், பாலேந்திரா, கலாநிதி சிதம்பரநாதன், திரு.ஜெய்சங்கர் போன்றோரும், நுண்கலைகள் சார்ந்து திருவாளர்கள் சனாதனன், அகிலன் ஆகியோரும்,
நாட்டாரியல் சார்ந்து திரு. அருந்தாகரன் போன்றோரும் இத்துறை சார்ந்த செயற்பாடுகளைக் கொண்டுள்ள திரு.ம.நிலாந்தன் போன்றோரும், நாடகத்துறை சார்ந்த தலைசிறந்த முன்னோடிகளாகவும் விமர்சகர்களாகவும் திரு.மு.நித்தியானந்தன் மற்றும் அம்மணி நிர்மலா என பலர் உள்ளனர்.
(மேற்படித் துறைசார்ந்து எவருடைய பெயரும் திட்டமிட்டு தவிர்க்கப்படவில்லை. எனக்கு தெரியவந்த மற்றும் நினைவில் வந்தவர்களின் பெயர்கள் மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன).
கலையைப் பொறுத்தவரையில் தவில் வித்துவான் அளவெட்டி தட்சணாமூர்த்தி நிகரற்ற ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். இவருடைய இத்துறை சார்ந்த பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
இவரைப்பற்றி தமிழகத்தைச் சேர்ந்த அம்சன் குமார் அண்மையில் “யாழ்ப்பாணம் தட்சணாமூர்த்தி” என்ற தலைப்பில் சிறந்த ஆவணப்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளார்.
இவ் ஆவணப்படம் 2016ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் திகதி நல்லூர் ஸ்ரீ துர்க்கா கோயில் மண்டபத்தில் திரையிடப்பட்டது. இந்த ஆவணப்படம் இந்தியாவில் தேசிய விருதுபெற்ற ஒன்றாய் அமைந்துள்ளது.
இப்படத்தை பார்க்கும் போது இந்த தவில் வித்துவானது ஒளிப்பதிவு நாடாக்கள் எதுவும் எடுக்கப்பட்டிருக்காமை தெரியவந்தது. தனது 42வது வயதில் 1975ஆம் ஆண்டு காலமான இந்த உன்னதமான கலைஞனின் கலை ஆக்கத்தை தமிழ்ச் சமூகம் ஒளிநாடாவாக பதிவு செய்யாமை இதுசார்ந்த தமிழ்ச் சமூகத்தின் அக்கறையின்மையை பறைசாற்றுவதாக உள்ளது.
தவில், பறை, உடுக்கு போன்ற தோல்வாத்திய கலைஞர்கள் எம்மத்தியில் இலைமறை காய்களாக உண்டு. இவர்களை கலை பண்பாட்டு ஆர்வம் கொண்ட தமிழ்ச் சமூகத்தினரும் அரசியல்வாதிகளும் அதிகம் கவனத்தில் கொண்டு வளர்த்தெடுக்க வேண்டியது அவசியம்.
காழ்ப்புணர்வுகளையும், குறுநில மன்னர் கலாச்சார குத்துவெட்டுக்களையும் தாண்டி பரந்த தேசிய நல்நோக்குடன் இத்துறைகளை வளர்த்தெடுக்கப்பட வேண்டியவர்களாக உள்ளனர்.
ஈழத் தமிழர் மத்தியில் தற்கால நூல் வெளியீட்டுத்துறையில் முன்னோடியாக திரு.பத்மநாப ஐயர் காணப்படுகிறார். இதில் இவர் முன்னுதாரணமுள்ள அர்ப்பணிப்புமிக்க ஒரு சிறந்த நூல் வெளியீட்டாளராவார்.
ஈழத்தில் இலக்கியம் அரசியல் – அறிவியல் சார்ந்து தொடர்ச்சியாக ஒரு சிறந்த சஞ்சிகை வெளிவரவில்லை என்றும் அக்குறையைக் களையக்கூடிய வகையில் இதுதொடர்பான ஒரு சிறந்த சஞ்சீகை வெளிவர வேண்டுமென்றும் தனது மன ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுவிடயத்தில் தமிழ் அறிஞர்கள் மற்றும் அரசியல்வாதிகள், இலக்கிய கர்த்தாக்கள், புரவலர்கள் போதிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
இலக்கியத்துறை சார்ந்து எதனையும் பேசக்கூடிய நிலையில் நான் இல்லை. ஆதலால் இலக்கியம், இலக்கியப் படைப்பாளிகள், இலக்கிய விமர்சகர்கள் பற்றி இங்கு எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ஆனால் ஈழத்தில் தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமையை கொள்கையாகக் கொண்ட சிறந்த இலக்கியச் சஞ்சிகையாக திரு.அ.யேசுராசாவை ஆசிரியராகக் கொண்டு “அலை” என்ற சஞ்சிகை வெளி வந்ததைப் பற்றி இம்மாதம் 5ஆம் திகதி சென்னையில் நடந்த பத்மநாப ஐயரின் பவள விழாமலர் வெளியீட்டு விழாவின் போது பேசிய அறிஞர்கள் குறிப்பிட்டனர்.
அலைக்குப் பின்பு “வெளிச்சம்” என்ற தலைப்பில் திரு.கருணாகரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த சஞ்சிகை வெளியீட்டுத்துறை சார்ந்து ஒரு நேர்த்தியான சஞ்சிகையாக அமைந்த போதிலும் அதுவும் இடையில் நின்றுவிட்டது.
பத்பநாப ஐயர் கூறுவது போன்ற ஒரு சிறந்த கலை இலக்கியம் அறிவியல் சார்ந்த சஞ்சிகை ஈழத்தில் தொடர்ச்சியாக வெளிவந்து முத்திரை பதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இது விடயத்தில் அரசியல் மற்றும் நிதி ஆதாரங்கள் சார்ந்த முன்னேடுப்புக்கள் அவசியமானவை.
நூல்கள், சஞ்சிகைகள் மற்றும் வெளியீடுகளை ஆவணப்படுத்துவதிலும், நூல்களை தொகுத்து நூலகர் என்.செல்வராஜா நூற்தேட்டம் என்ற பதிப்பினூடாக பதிவதையும், குறிப்பிட்டுச் சொல்லலாம்.
அவ்வாறே முல்லை அமுதன் போன்றோர்களும் நூல்களை ஆவணப்படுத்துகின்றனர். அதேபோல நூலகம் இணையத்தளத்தின் சேவைகளும் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டும்.
மேற் குறிப்பிட்டோருடைய சேவைகளை மேன்மேலும் விரிவுபடுத்த உலகம் தழுவிய தமிழர்கள் ஒத்தாசைகளை வழங்க வேண்டும்.
இப்போது எமது பிரச்சனை 21ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டில் உலகம் அடைந்திருக்கும் அரசியல் சமூக பொருளாதார இராணுவ சூழலின் பின்னணியில் ஈழத்தமிழர்கள் ஒரு பலம் வாய்ந்த தேசிய இனமாக பல்பரிமாணங்களையும் தழுவிய வளர்ச்சிக்கான கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டியது அவசியமாகும்.
பெரிதும் பாதிக்கப்படுகின்ற, அந்நிய நாடுகளினால் வேட்டைக் களமாக்கப்படுகின்ற, உள்நாட்டு ரீதியில் ஒடுக்கப்படுகின்ற ஈழத்தமிழர்கள் ஒரு புதிய அரசியல் சிந்தனையுடன் தம்மை தற்காக்கவும், முன்னேறவும் வழிகாண வேண்டும்.
விருப்பார்ந்த எண்ணங்கள் எவ்வளவுதான் நல்தாக இருப்பினும் அவை செயல்வடிவம் பெறப்போவதில்லை. விருப்பார்ந்த (Wishful) செயல்களுக்குப் பதிலாக புத்திபூர்வ (Thoughtful) அரசியல் பண்பாட்டுச் செயல்களில் ஈடுபடவேண்டியது அவசியமாகும்.
ஆழமான வரலாறு மற்றும் பண்பாடு அடிப்படையிலான அறிவியல், கலை, இலக்கியம், வாழ்நிலை மற்றும் சூழலியல் பொருளாதார அம்சங்களுடன் கலந்த நீண்டகால கண்ணோட்டத்திற்குரிய தமிழ்த் தேசிய நிர்மாணிப்பில் ஈடுபட வேண்டிய அத்தியாவசியம் ஈழத் தமிழ்த்தரப்பிற்கு உண்டு.
தேசியம் என்பது ஒரு பாதுகாப்புக் கவசம். தேசியம் இல்லையேல் ஒரு மக்கள் கூட்டத்திற்கு பாதுகாப்பும் இல்லை வாழ்வும் இல்லை.
அடிப்படையில் தேசியம் என்பது ஒரு மனிதனை மத்திய கால சமூக கட்டுக்களில் இருந்து விடுவித்து “சுயம்” உள்ளவனாக, சுயமரியாதை உள்ளவனாக, தன்னைத் தானே நிர்ணயிப்பதற்கான சுயநிர்ணயம் உள்ளவனாக மாற்றுகிறது.
இது பரந்த அடிப்படையில் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையாக வடிவம் பெறுகிறது. எனவே தேசியம் என்பது ஒரு மனிதனின் சுயநிர்ணயம், அவனது தேசியப் பண்பாடு சார்ந்த கூட்டுச் சுயநிர்ணயம் சார்ந்த உரிமையாக வடிவம் எடுப்பதினால் அது வரலாற்றில் வளர்ச்சிக்குரிய ஒரு தனிச்சிறப்புமிகு கருவியாக உள்ளது.
இத்தகைய தேசியத்தை பல்பரிமாண பார்வையுடன் வளர்த்தெடுக்க வேண்டியது உலகம் தழுவிய மனிதகுல நாகரிக வளர்ச்சியின் ஓர் அங்கமாகும்.
எளிதில் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் பலவற்றாலும் பாதிக்கப்படக்கூடிய மக்களாய் ஈழத் தமிழ்த் தேசியம் உள்ளது. மேற்படி சக்திகள் தத்தமது நலன்களுக்காக ஈழத்தமிழர்களை இலக்கு வைக்கவும், பலியிடவும் தயங்கவில்லை என்பதை கடந்த முக்கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலான வரலாறு எண்பித்து நிற்கின்றது.
இந்நிலையில் பல்பரிமாணம் கொண்ட, அதுவும் 21ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பத்தாண்டுக்கு அப்பாலான நீண்டகால உலகளாவிய நோக்கில் தமிழ்த் தேசியம் திட்டமிட்டு கட்டமைப்புச் செய்யப்பட வேண்டும்.
தூய இலட்சியங்கள் பேசவும் கேட்கவும் இனிமையாக இருக்கலாம். ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாதவைப் போல, இலகு காத்த கிளி போல அவை ஆகிவிடும்.
மாறாக நடைமுறைச் சாத்தியமான யதார்த்தம் சார்ந்த அறிவியல் கண்ணோட்டத்துடன் இலக்குக்களை தேர்ந்தெடுத்து தமிழ்த் தேசிய முன்னேற்றத்தை ஈட்டவேண்டும்.
இதற்கு பொருத்தமான அரசியல் முன்னேடுப்புக்கள் அத்தியாவசியமானவை. சிங்களத் தரப்புடன் ஒப்பிடுகையில் தமிழ்த் தரப்பு பலவிடயங்களில் வெற்றிடத்தைக் கொண்டுள்ளது.
இதனால் சிங்களத் தரப்பு எப்பொழுதும் வெற்றிவாகை சூடும் தரப்பாகக் காணப்படுகிறது. சிங்களத் தரப்பு எப்போதும் தமது அரசியல் சித்து விளையாட்டில் இறுதி வெற்றியை ஈட்டுகிறது.
தற்போது தமிழ்த் தரப்பில் திரு,ஆர்.சம்மந்தன், திரு,சி.வி.விக்கினேஸ்வரன் என்போரின் கால்களில் தமிழ் மக்கள் பந்தை உருட்டு உள்ளனர். இவர்கள் கோட்டை விடுவார்களா அல்லது கோல் (Goal) அடிப்பார்களா என்பதை வரலாறு இன்னும் 6 மாதத்திற்குள் நிரூபித்துவிடும்.
-http://www.tamilwin.com