குழப்பங்களும், சதிகளும், சகுனிகளும் நிறைந்த ஓர் அரசியல் பாதையில் பயணம் செய்கின்றது தற்போதைய இலங்கை அரசியல் என்பது வெளிப்படை.
அடுத்தது என்ன என எதிர்ப்பார்க்க முடியாத அரசியல் நிலவரமே தற்போது காணப்படுகின்றது. ஆனாலும் இந்த நிலவரம் கலவரமாக மாற்றப்படக் கூடாது என்பதும் மிக முக்கியம். இவை அனைத்தும் பிக்குகள் மூலமாக நடைபெறுகின்றது என ஆதார பூர்வமாக கூறுகின்றனர், தென்னிலங்கை புத்திஜீவிகள்.
நினைத்துப் பார்க்க முடியாத வகையில் சூழ்ச்சிகளும் சதிகளும் அரசுக்கு எதிராக வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் அரங்கேற்றப்பட்டு வருகின்றது.
இனவாதம், அடக்குமுறை இவை இரண்டுமே தற்போது இலங்கை முழுவதும் பரப்பப்படுகின்றது எனலாம். அதற்கான காரணம் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த இவை மட்டுமே தற்போது சாத்தியப்படக்கூடியது.
நேர்த்தியாக வகுக்கப்பட்ட திட்டம் ஓர் மூலையில் இருந்து மொம்மைகளைக் கொண்டு இயக்கப்பட்டு வருகின்றது. இவை யாரால் என்பது அண்மைக்கால அரசியல் பாதையினை சற்று உற்று நோக்கும் போது தெளிவாகும்.
அண்மைக்காலத்தில் பூதாகரமாக வெளியான பிரச்சினை சிவனொளிபாத மலை. பல்வேறுபட்ட விமர்சனங்களும் போராட்டங்களும் வெளிவந்து தற்போது அடங்கிப்போய்விட்டது.
ஒரு சில பௌத்த பிக்குகள் பிரளயமாக மாற்ற முயற்சி செய்த விவகாரம் காணாமல் ஆக்கப்பட்டு விட்டது. ஆனாலும் சிறிதளவு புகையும் தற்போதும் இருக்கத்தான் செய்கின்றது. வேறு ஒரு விடயம் கிடைத்து விட்டதால் புகை நெருப்பாக வளர்க்கப்படவில்லை என்பதே உண்மை.
இங்கு சிவனொளிபாத மலை தொடர்பில் ஏற்பட்ட கொந்தளிப்புகள், பசில் ராஜபக்ச தொடர்பு உள்ளதாக கூறப்பட்ட காரணத்தினால் அடங்கிப்போனது எனவும் கூறப்படுகின்றது.
அடுத்தது அங்கவீனமடைந்த இராணுவத்தினரின் போராட்டம் கலவரத்தில் வந்து முடிய காரணமும் பிக்குகளே. அந்த போராட்ட ஆரம்பத்தில் பிக்குகள் விடுத்த எச்சரிக்கை சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
அதாவது, ஆர்ப்பாட்டத்தின் இரண்டாவது நாள் கலந்து கொண்ட பிக்குகள் 3 நாள் மட்டுமே அவகாசம் பின்னர் நாம் பிழை என எவரும் கூறக்கூடாது, அடக்கு முறைகளை மேற்கொள்ளக் கூடாது, சிறையில் எம்மை அடக்கவும் எவரும் முற்பட வேண்டாம். என கடுமையான வகையில் எச்சரித்தார்கள்.
இங்கு பிக்குகள் தாக்கப்படுவார்கள், என முன் கூட்டியே அவர்கள் எதிர்வு கூறியது எவ்வாறு? அதே போன்று மஹிந்த ஆதரவாளர்கள் சிலர் பிக்குகள் மீது எவரும் தாக்குதல் மேற்கொள்ளப்படக்கூடாது, என எச்சரிக்கை விடுத்திருந்தமையும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.
ஆக இவை ஆர்ப்பாட்ட ஆரம்பத்திலேயே திட்டமிட்ட செயல் என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாக தென்னிலங்கை புத்திஜுவிகள் தெரிவித்துள்ளனர்.
அதனை பெரும் பிரச்சினையாக சித்தரிக்க முயற்சி செய்த போது அரசு தரப்பு எதிர்ப்பை வெளிப்படுத்தி விமர்சனங்கள் கட்டுப்படுத்தவே மெதுவாக குறையத்தொடங்கியது.
இதன் பின்னர் அடுத்த பிரச்சினை எங்கே உருவெடுக்கும் என்பது தெரியாத நிலையில், அது தற்போது மட்டக்களப்பில் உருவெடுத்துள்ளது.
மட்டக்களப்பில் பிக்கு ஒருவர் பகிரங்கமாகவே இனவாதக்கருத்துகளை முன்வைத்து வருகின்றார். இத்தனை வருடகாலம் இல்லாது தற்போது அவர் பௌத்தத்தை காக்க வேகமான, அதே சமயம் கடும் போக்கான முறையில் புறப்பட்டுள்ளார் என்பது சிந்திக்கப்பட வேண்டியதே.
ஆனாலும் அவர் வெளிப்படையாக இனவாதத்தினை கக்கி வந்தாலும் அதனை பொலிஸாரோ, அல்லது தலைமைகளோ நிறுத்தவில்லை என்பது வேடிக்கைதான்.
ஆனாலும் இங்கு பிக்கு நிழல் மட்டுமே நிஜம் இருப்பது வேறொரு இடத்தில், எய்தவரை விட்டு அம்பை தண்டிப்பது முறையாகாது. ஆனால் கட்டுப்படுத்தப்பட வேண்டியது மட்டும் அவசியம்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட முதல் தொடக்கம் பிக்குகள் மூலமாக ஒரு வகை பதற்ற சூழல் இலங்கையில் காணப்பட்டு கொண்டு வருகின்றது. அதற்கு முக்கிய காரணம் பிக்குகள் இலங்கை அரசியலுக்கு முக்கியமானவர்கள்.
பௌத்தமும் இலங்கை அரசியலும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்து பயணித்து வருவதாலேயே ஆகும்.
எவ்வாறாயினும் நல்லாட்சி உண்மையில் மக்களுக்கான நல்லாட்சி என்பதனை தவறு செய்தால் யாராக இருந்தாலும், தவறு என தண்டிக்க அல்லது கண்டிக்காவிட்டால் விளைவுகள் இலங்கை மறக்க வேண்டிய கடந்த காலத்தை மீட்டிப்பார்க்க வைத்து விடும் என தென்னிலங்கை புத்திஜீவிகள் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com