மகுடிகளின் வாசிப்பிற்கு பாம்புகள் ஆடுவதைப் போல், சிலர் ஆட்டுவிக்க பலர் ஆடுகின்றார்கள், இங்கு மகுடிகளின் நாதம் இனவாதம் என்பது இருட்டறை மெழுகுவர்த்தியைப் போன்றது.
இராணுவப்புரட்சி ஏற்படும் என ஒரு சிலர் எச்சரிக்கை விடுக்க, மறு புறத்தில் முழு நாடும் வேண்டும் என்ற கோரிக்கைகள் பூதாகரமாக வெடித்து வருகின்றது.
“நீ எதுவாக மாறுகின்றாயோ அதுவாகவே மாறிவிடுவாய்” என்பது தற்போது கனகச்சிதமாக “நான் இனவாதி நீயும் இனவாதியாக மாறிவிடு” என்ற வகையில் மாற்றப்படுவது நடைமுறை இலங்கையில் அவதானிக்கக் கூடிய ஒன்றுதான்.
இவை மட்டுமா வடக்கில் இராணுவ பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும், என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு வரத்தான் செய்கின்றது, ஆனாலும் பாவம் வடக்கிற்கு இது புளித்துப்போன விடயம்.
இந்த பிரச்சினைகளுக்கு ஆரம்ப புள்ளி எது என்று நோக்குவதனை விடவும் முற்றுப்புள்ளி வைப்பது மட்டுமே இப்போதைய அரசின் முக்கிய கடற்பாடு, என்பது மட்டும் புரியாத நிலையில் அரசு இப்போதைக்கு இல்லை என்பதும் உண்மைதான்.
கண்டியில் ஒன்று திரண்டுள்ள பிக்குகளும் சிங்கள அமைப்புகளும் அடுத்து மட்டக்களப்பில் ஒன்று திரள ஆயத்தமாகிவிட்டது.
இது தொடர்பாக மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் அழைப்பு விடுக்கும் போது தெரிவித்துள்ளதாவது,
“கடந்த 23 வருடங்களாக விடுதலைப்புலிகளிடம் அடி வாங்கி மட்டக்களப்பில் நான் சேவை செய்து வருகின்றேன், குண்டுகள் வெடித்து கொத்துக் கொத்தாக அழிந்த இராணுவ வீரர்களை அள்ளி எடுத்தவன் நான்.
இது வரையில் பொறுமையாக இருந்தோம் இனியும் பொறுமை காத்தால் முழு இலங்கையும் அந்நிய மதங்களுக்கு சென்று விடும். இப்போது நாம் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு விட்டது.
இப்போது இருக்கும் அமைப்புகளை விடவும் புதிதாக பல அமைப்புகள் உருவாகினாலும் பரவாயில்லை, ஆனாலும் அனைத்தினது நோக்கமும் ஒன்றாகவே இருக்க வேண்டும்.
நல்லாட்சியை நம்பிப் பயன் இல்லை, நாம் ஒன்று திரள வேண்டும், அடுத்து கூடிய விரைவில் மட்டக்களப்பில் அனைத்து சிங்கள அமைப்புகளும் ஒன்று திரளும் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளது எனது இரத்தத்திற்கு புது வேகம் கொடுத்துள்ளது”
இவை சுமணரத்தின தேரரினால் விடுக்கப்பட்ட அழைப்பா? அல்லது மட்டக்களப்பை அழிக்க விடுத்த அழைப்பா? என்பது அவரது பேச்சை கேட்பவர்களுக்கு தெளிவாகத் தெரியும். (காணொளியை பார்க்க இங்கே அழுத்தவும்)
அண்மையில் இந்த ஒரு தேரர் மட்டக்களப்பில் செய்த இனவாதச் சேவையின் எதிரொலிப்பு இன்னமும் பயங்கரமாக கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றது.
இந்த நிலையில் அனைத்து ஒட்டுமொத்த, அதுவும் இனவாதத்தை பகிரங்கமாக பரப்பும் பிக்குகள் மட்டக்களப்பிற்கு படை எடுத்துள்ளனர். இவர்களோடு இணைந்து இனவாதப் பூதங்களும் படையங்கம் வகிக்கும் என்பதில் மட்டும் எந்த வித ஐயமும் இல்லை.
ஆனாலும் விடுதலைப்புலிகளும், முடிந்து போன யுத்தமும் இன்னமும் “சோற்றுக்கு வைக்கும் ஊறுகாய் போல” ஒரு சில பிக்குமார்களும், அரசியல் தலைமைகளும் எடுத்து வைத்து அடிக்கடி சுவை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றது.
அதற்கான காரணம் இவை இரண்டு மட்டுமே இப்போதைக்கு இலங்கையில் பிரச்சினையை தூண்டிவிட இலகுவான வழிமுறைகள்.
எந்தவொரு நிலையிலும் சமஷ்டி, நல்லிணக்கம் அதையும் தாண்டி ஒற்றுமை என்ற மரம் இலங்கையில் வேரூன்ற வேண்டும் எனில் நடக்காது. அரசு இனியும் பொறுமையாக இருந்தால் இனவாதப் பூதம் முழு இலங்கையையும் விழுங்கத்தான் செய்யும்.
அது சரி இலங்கையில் அரசியல் யாப்பை பொறுத்தவரை நேரடியாக இப்போது முளைத்துள்ள சிக்கலை தகர்க்க முடியாது என்பதும் உண்மைத்தான் ஆனாலும் எப்படி அரசு இதனைத் தீர்க்கப்போகின்றது என்பது வெளிப்படையில்லை என தென்னிலங்கை அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
-http://www.tamilwin.com