தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இருந்து உயிரிழந்தவர்களுக்கு நினைவு தினம் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
கடந்த கால யுத்தத்தில் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்தவர்களுக்கும், இந்த யுத்தத்தில் உயிரிழந்த பொது மக்களுக்கும் அஞ்சலி செலுத்த முடியும்.
ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்கு உதவி புரிந்தவர்களுக்கு மாவீரர் தினம் கொண்டாட அனுமதி இல்லை. அவர்கள் எமது நாட்டுக்காகவோ அல்லது நாட்டு மக்களுக்காகவோ போராடவில்லை என அறிவித்தார்.
நாட்டுக்காக உயிரிழந்திருந்தால் அஞ்சலி செலுத்துவதில் பிழையான விடையம் இல்லை, ஆனால் அவர்கள் நாட்டுக்காக போராடவில்லை எனவும் குறிப்பிட்டார்.
இந்த மாவீரர் தினத்தினை அனுஷ்டிப்பதற்கோ, அல்லது பயங்கரவாதத்துடன் தொடர்புடைய இவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கோ இந்த நாட்டில் ஒருபோதும் அனுமதியில்லை, எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்த இடமில்லை என்றும், மாவீரர் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com