நாட்டில் இரத்த ஆறு ஓடும், அந்நிய மதங்களை இலங்கையை விட்டு அகற்ற வேண்டும், வடக்கு எமக்கு சொந்தம் அதனை உரிமை கொண்டாட எவரும் முயல வேண்டாம் எனக்கொதித்து பகிரங்க இனவாதத்தினை தூண்டிவந்தனர் பிக்குகள் என்பது அறிந்த விடயமே.
அடுத்து இதில் அதிரடி திருப்பு முனையாக, நேற்று ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்த பொதுபல சேனா,
“நாட்டை ஆளுவது மஹிந்தவா? மைத்திரியா? அல்லது ரணிலா எவராக இருந்தாலும் பரவாயில்லை. சிங்களவர்களின் பிரச்சினை தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும், பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் உடனடியாக நேற்று இரவு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ச,
“பொதுபலசேனா மற்றும் அனைத்து சிங்கள அமைப்புகளிடம் பேச்சுவார்த்தையினை நடத்தினோம், நாங்கள் எதிர்ப்பார்ப்பது சமாதானமான ஒரு நடவடிக்கையினையே.
அதற்கான சாதகமான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது, தேரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடினோம், அவர்களுடைய கோரிக்கைகள் தொடர்பில் கூடிய விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தோம்” என விஜயதாச ராஜபக்ச கூறியுள்ளார்.
அதன் பின்னர் ஞானசார தேரர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில்,
“நாம் நீண்டகாலமாக எதிர்ப்பார்த்து இருந்த பேச்சு வார்த்தையே இப்போது நடைபெற்றுள்ளது, பௌத்த சாசன அமைச்சர் என்ற வகையில் அமைச்சரின் கருத்துகளை நாம் நம்புகின்றோம்.
அதேபோன்று இப்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர், அதன் காரணமாக எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றாம்” என தெரிவித்தார்.
இங்கு முக்கியமான விடயம் என்னவெனில் இது வரையில் இலங்கையில் பௌத்தத்தை காக்க வேண்டும் என பகிரங்கமாக, பயங்கர எச்சரிக்கைகளையும் விடுத்து வந்த தேரர்கள் திடீரென அமைதியாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை “நாட்டை குழப்புவதற்காகவும், தேர்தலை தள்ளிப்போடவும் இனவாத செயற்பாடுகள் நல்லாட்சி அரசே திட்டமிட்டு நடத்துகின்றது” என தெரிவிக்கின்றனர் கூட்டு எதிர்கட்சியினர்.
மறு பக்கம் நல்லாட்சியில் உள்ளவர்கள், “முன்னாள் ஜனாதிபதியின் செயற்பாடுகள் காரணமாகவே நாட்டில் இனவாதம் தூண்டப்படுகின்றது” என குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
எவ்வாறாயினும் பயங்கர எச்சரிக்கை விடுத்தவர்கள் தற்போது சாந்தமாகி விட்டனர், சூறாவளியாக புறப்பட்டவர்கள் திடீரென அணைந்து விட்டனர். என்றே கூறப்படுகின்றது.
இப்போது புதிதாக வெளிப்பட்டுள்ள பூதம் எதுவெனில் வடக்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே.
இந்த நிலையில் தென்னிலங்கை குழப்பங்கள் குறைந்து விட்டன, அல்லது சாதூர்யமாக குறைக்கப்பட்டு விட்டன. அடுத்து ஒட்டு மொத்த தென்னிலங்கையும் வடக்கில் பால் திசை திரும்பியுள்ளதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கும் காரணம் உண்டு ஆவா, பிரபாகரன் படை என புதிதாக பல அமைப்புகள் அடுத்தடுத்து வெளிவந்தது. பின்னர் அவற்றிக்கும் இராணுவத்தினருக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என ஆட்சியாளர்கள் தெரிவித்தார்கள்.
ஒரு தரப்பு விடுதலைப்புலிகள் தான் ஆவா எனக் கூற, மறு தரப்பு இராணுவமும் இல்லை, புலிகளும் இல்லை வெறும் கொள்ளைக் கூட்டம் மட்டுமே என்றனர்.
போதுமடா குழப்பங்கள்.., என இந்த தளம்பல்கள் சிறிது அடங்கிக் கொண்டு வரும் போதே, மீண்டும் ஆவா குழுவிற்கும் இராணுவத்திற்கும் தொடர்பு உண்டு என்கின்றனர் ஆட்சியாளர்கள்.
இவை அப்படியே நிற்க., நாடு ஒரு பக்கம் அமைதியடையும் வேளையில் மீண்டும் குழப்பம், அதுவே நடக்கும் நடக்காது என பூச்சாண்டி காட்டப்பட்டு வரும் இராணுவப்புரட்சி கதைகள்.
ஆனாலும் வெளிப்படையாக இவை தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் வடக்கின் இராணுவ பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என சில கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றது.
அல்லது ஆவா போன்று பல குழுக்கள் உருவாகிவிடும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது, இப்போது வடக்கில் கைதுகளும் அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.
இராணுவப்புரட்சி கதைகள் பூதாகரமாக கூறப்பட்டு வரும் வேளையிலேயே வடக்கின் பாதுகாப்பு கதைகளும் வெளிவந்துள்ளது.
அச்சுருத்தல் விடுக்கும் ஆவாவோடு, இராணுவப் புரட்சி கதைகளையும் சேர்த்து வடக்கினையும் அத்தோடு இணைத்து விட்டால் வடக்கை தொடர்ந்தும் இராணுவக்கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அடிமைப்படுத்த முடியும் என்பது இலகு.
சரியாக குறிப்பிட்ட காலப்பகுதியில் கொதித்தெழுந்த தேரர்கள் கொஞ்சம் அடங்க, இராணுவப்புரட்சி, வடக்கின் பாதுகாப்பு கதைகள் துளிர்த்துள்ளன. அதன்படி இவை சரியாக கார்த்திகை 27இனை குறிவைத்தே காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கடந்த வருடம் தடை விதிக்கப்பட்டிருந்தும் அச்சத்தின் மத்தியில் மாவீரர் தினம் நடந்தது. மீண்டும் அது நடந்து விட்டால் பெறும்பான்மையின் பெருமை என்னவாகும்?
இப்போதைக்கு சட்டென்று பற்றவைக்க முடியுமான தொரு விடயம் விடுதலைப்புலிகள் எனும் நெருப்பு மட்டுமே, என்பது அண்மைக்கால இலங்கையில் அரசியல் பாதையினால் தெளிவாகின்றது.
ஆக இவை அனைத்தினையும் பார்க்கும் போது, வடக்கை குறிவைத்தே திட்டமிட்டு சதிகள் இடம் பெறுகின்றது என்பது தெள்ளத் தெளிவு எனவும், அடுத்த கட்டம் எவ்வாறு அமையப்போகின்றது என்பதுமே இப்போதைய கேள்வி எனவும் கூறப்படுகின்றது.
-http://www.tamilwin.com