தமிழீழ அன்னையின் புனித நாளான மாவீரர் நாள்

தமிழீழ மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்ட வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஒரு சகாப்தத்தை ஏற்படுத்தியது விடுதலைப் புலிகள் இயக்கமாகும்.

எமது மக்கள் மீது அநீதி இழைக்கப்பட்ட போதும் அதர்மம் இழைக்கப்பட்ட போதும் எமது நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட போதும் அபகரிக்கப்பட்ட போதும் எமது மக்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்கப்பட்ட போதும் அடித்து நொருக்கப்பட்ட போதும் கொன்றெழிக்கப்பட்ட போதும் எமது இளையவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.

எமது மக்களின் சுதந்திரமான வாழ்விற்காகவும் எமது குழந்தைகளின் சுபீட்சமான எதிர்காலத்திற்காகவும் எமது இனத்தின் நிரந்தர விடுதலைக்காகவும் எம்மவர்கள் ஆயுதப் போராட்ட பாதையை வரித்துக் கொண்டனர்.

இதன் அடிப்படையில் தான் 1972 ஆம் ஆண்டு புலிகள் இயக்கம் தனது வரலாற்று ரீதியான பிறப்பை எடுத்தது.

கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஆகிய ஒழுக்க மரபுகளின் நெறிப்படுத்தலில் நாட்டுப்பற்று, வீரம், தியாகம், அர்ப்பணிப்பு ஆகிய உயரிய பண்புகளுடனும் தலைவர் பிரபாகரனின் உன்னத வழி நடத்தலின் கீழ் அணி திரண்ட ஆயிரமாயிரம் போராளிகள் தமிழீழ சுதந்திரப் போரை வீறுடன் முன்னெடுத்தனர்.

வெடித்த மக்கள் புரட்சியின் அதிசயிக்கத்தக்க உன்னதமான வீர வரலாற்றின் பின்னால் நீண்ட ஒரு தியாக வரலாறு ஒரு சரித்திர காவியமாக திகழ்கிறது.

அளப்பரிய அர்ப்பணிப்பும் மகத்தான தியாகமும் உன்னதமான வீரமும் அசையாத மனவுறுதியும் ஒன்றிணைந்த பிரதிபலிப்பாகத் தமிழீழத் தாயின் மடியில் வீழ்ந்துவிட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதல்வர்கள், எங்கள் சுதந்திரப் போர் வரலாற்றின் காவிய நாயகர்களாக ஒளிர்கின்றார்கள்.

ஆயிரமாயிரம் இனிய கனவுகளைச் சுமந்து கொண்டு தங்கள் இளமை வாழ்வை தமிழீழம் என்ற புனிதத் தாயிற்கு அவர்கள் காணிக்கையாக்கினார்கள்.

மக்களிலிருந்து பிறந்து, மக்களிற்குள்ளிருந்து வளர்ந்து, மக்களுக்காக வாழ்ந்த அவர்கள் மக்களுக்காகவே மரணிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் திருப்தியும் அடைந்தார்கள்.

விடுதலையமைப்பு பின்னர் கண்ட பிரமாண்ட வளர்ச்சிக்கு முன்னராகக் கடந்து வந்த கரடு முரடான பாதையை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும். துன்பங்களுக்கும் வேதனைகளுக்கும் மத்தியில் ஏறி வந்த படிகளை ஒரு தரம் திரும்பிப் பார்க்க வேண்டும். அந்த ஒவ்வொரு படிகளிலும் கூடவே வந்த உறவுகள் அவ்வப்போது இல்லாமல் போனார்கள்.

முதலாவது சாவை அணைக்க மரணப் படுக்கையில் கிடக்கும் போதும் அப்பா அம்மா என்று முனகாது, தம்பி தம்பி என்று தலைவனை அழைத்தபடி இலட்சியத்தை காப்பாற்றுங்கள் இயக்கத்தை கட்டி வளருங்கள் என்று கூறிச் சென்றார் சங்கர்.

வெடித்துத் தன் தோழர்கள் பலரைக் கொன்றுவிடப் போகிறது அந்தக் குண்டு என்பதை நொடிப் பொழுதில் ஊகித்து அவ்வெடி குண்டினை தன் வயிற்றோடு அணைத்து அக்குண்டின் சிதறல்களைத் தானே தாங்கினார் அன்பு.

அவனையும் அவனது தம்பியையும் எதிரிகள் பிடிக்க முற்பட்ட போது தனது தம்பியை தானே சுட்டுவிட்டு தனக்கும் சுட்டு தன்னையே அழித்துக் கொண்டார் ரவிக்குமார்.

எதிரிகள் அவர்களைச் சுற்றி வளைத்த போது தப்ப முடியாது என்ற நிலையில் ஒருவரை ஒருவர் கட்டியணைத்தபடி தங்களிடமிருந்த ஒரே ஒரு கைக் குண்டை தமக்கிடையில் வெடிக்க வைத்தார் ஐிவா ரஞ்சன்.

தாங்கள் எதிரிகளிடம் அகப்படப் போகிறோம் என்ற இறுதி நிமிடத்தில் தம்மிடம் இருந்த ஒரே ஒரு சைனைட் குப்பியை பாதி பாதியாக உட்கொண்டு தம்மையே அழித்துக் கொண்டார் அன்ரன் உமாராம்.

கடுமையான சுகயீனத்தின் போதும் மழையையும் பனியையும் பார்க்காது தனக்குரிய கடமைகளிலேயே கண்ணாயிருந்து அதனால் வந்த உயிராபத்தையும் ஏற்றுக்கொண்டார் சோதியா.

எதிரிகள் அவனைச் சுற்றி வளைத்த போது எதிரிகளிடம் பிடிபடக் கூடாது என்பதற்காக பிறந்து தவிழ்ந்த தாயின் மடியிலேயே சயனைட் உட்கொண்டார் ரமேஸ்.

ஒருவர் கூட மீதமின்றி குடும்பத்தில் எல்லோருமே படுகொலை செய்யப்பட்ட போதும் தாயகமே தாகமாக வாழ்ந்தார் றீகன்.

போர் முனையில் என்னுடைய கடமையைக் காக்க வேண்டும் என்பதற்காக விரைந்து சென்ற போது எதிர்பாராத விபத்தில் சிக்கினார் சூட்டி.

எதிரியிடமிருந்து படகையும் பொருட்களையும் காப்பாற்றுவேன். முடியாமல் போனால் படகுடன் சேர்ந்து நானும் எரிகிறேன் என கடலில் எரிந்து போனார் மோகன் மேத்திரி.

தான் திரும்பி வரமாட்டேன் என்பது உறுதியாக தெரிந்திருந்தும் தன் உடற் தசைகள் துகள்துகள்களாக சிதறிப் போகும் என்பதை அறிந்திருந்தும் சாவை வண்டியிலேயே சுமந்து காற்றோடு காற்றாகிப் போனார் கரும்புலி மில்லர்.

இந்தியாவின் காந்தீய மூடியைக் கிழித்து அதன் ஆக்கிரமிப்பு சுயரூபத்தை தமிழீழ மக்களுக்கும் உலகுக்கும் அம்பலப்படுத்த தன் உடல் நார்களை அணுவணுவாக சித்திரவதை செய்து வீரகாவியமானார் திலீபன்.

கடலில் ஒவ்வொரு பயணங்களின் போதும் சாவு வரலாம் என்பது தெரிந்திருந்தும் பயணங்கள் போனவர்கள். இப்படிப் பயணங்கள் போய் இன்று வரை திரும்பாமல் கடலோடு கரைந்து போன கடற்புலிகள். பெரும் தடைகள் சவாலாக எழுந்த போதெல்லாம் தடை நீக்கிகளாக சாதனைக் களங்களை திறந்து விட்டு காவியமாகிப் போன கரும்புலிகள், கடற்கரும்புலிகள்.

புரட்சிகர ஆயுதப் போராட்டத்தில் பெண்களும் அணி திரள வேண்டும் என்ற தலைவர் பிரபாகரனின் நோக்கத்தை சமூகத்தின் அடிமைத்தனம் மிக்க பண்பாட்டு வழமையின் வரம்புகளைத் தகர்த்து செயல் வடிவமாக்கி போர் முனைகளிலே களப் பலியாகிவிட்ட பெண் புலிகள்.

இந்திய – சிறீலங்கா அரசுகளின் இணைந்த நம்பிக்கை துரோகத்தால் தம்மையே அழித்துக் கொண்டதன் மூலம் தமிழீழ மக்களைப் பீடித்திருந்த மாயைகளுக்கும் போலி நம்பிக்கைகளுக்கும் சவக்குழி தோண்டிய புலேந்திரன் குமரப்பா உட்சேர்ந்த பன்னிரு வேங்கைகள்.

இவர்களைப் போல் எத்தனை அற்புதமானவர்கள். எத்தனை உன்னதமானவர்கள். எத்தனை மகத்தானவர்கள் தமது இன்னுயிரைத் தந்தார்கள். இதனைப் போல் எத்தனை ரத்த காவியங்கள்.

ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது சுதந்திரம். எமது உரிமை, எமது கௌரவம் என்ற தலைவனின் கூற்றுக்கு இவர்கள் தங்களை வரவிலக்கணம் ஆக்கிக் கொண்டார்கள்.

போர் முனைகளில் போராளிகள் சந்தித்த ஒவ்வொரு வெற்றியின் போதும் அவ்வெற்றிக்காக இலட்சிய வெறியோடு போராடிய எத்தனை ரத்தக் கனிகளை நாம் பறிகொடுத்து விட்டோம். தங்களை நினையாமல் தமிழீழத்தை நினைத்தவர்கள். தங்கள் வாழ்வை விட தமிழீழத்தின் விடுதலையை நேசித்தவர்கள். கொளுந்துவிட்டெரிந்த தமிழீழ விடுதலை நெருப்புக்கு எத்தனை பேர் தங்களை எண்ணையாக ஊற்றிக் கொண்டார்கள்.

போர் முனையில் முதல் களப் பலியாகிப் போன லெப்டினன் சங்கரின் நினைவு நாளான கார்த்திகை 27 ஆம் நாளே இவர்கள் அனைவரையும் வணங்கும் புனித நாள் மாவீரர் நாள்.

உலகெங்கும் உள்ளோர் தம் நாடுகளிற்காக ஈகம் செய்தவர்களை நினைவில் நிறுத்தி பேரெழுச்சி கொள்கின்றனர். ஈழ மக்களும் தம் மண்ணின் மைந்தர்களை நினைவில் கொள்ளும் நாளே மாவீரர் நாள்.

என்றென்றும் அணையாமல் எங்கள் ஆன்மாவில் எரிந்து கொண்டிருக்கும் அந்த தியாக தீபங்களுக்கு உளமார்ந்த நினைவுகளுடன் வீரவணக்கம் செலுத்தும் நாள்.

அவர்கள் சுமந்து சென்ற இலட்சியங்களை சமூக விழுமியங்களை நாமும் முன்னெடுப்போம் என்று உறுதியெடுத்துக் கொள்ளும் நாள்.

நான் பெரிது. நீ பெரிது என்று வாழாது சமூக உயர்விற்கும் வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் சமூகமாக அவர்கள் ஏற்படுத்திய ஒற்றுமையே பலம் என்பதை தாரக மந்திரமாக வரிந்து முன்னேற உறுதியெடுத்துக் கொள்ளும் நாள்.

எம்முள் உள்ள புல்லுரிவிகள், வேடதாரிகள், அரசியல் வியாபாரிகள், சந்தர்ப்பவாதிகள் அனைவரையும் அடையாளம் கண்டு புறம்தள்ளி ஒற்றுமையாக முன்னேற இனமாக உறுதி கொள்ளும் நாள்.

இந்த நாள் வெறும் வணக்க நாள் அல்ல. எம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக் கொள்ளும் புனித நாள்.

இந்த ஆண்டு 2016 அமையும் மாவீரர் நாள் 28 வது மாவீரர் நாளகும். இந்நாளில் நேற்று வரை களத்தின் சாதனையாளர்களாகியும் இன்று நலிந்து போயும் உள்ள எம் தாயக உறவுகளை நினைவில் கொண்டு அவர்கள் வாழ்வை தாங்குவோம். வளமான தமிழர் வாழ்விற்கு எம் வீரமா மறவர்களின் பணியை தொடருவோம் என உறுதியெடுத்துக் கொளவோம்.

இவர்கள் தமிழீழ அன்னையின் மூத்த புதல்வர்கள். விடுதலை இயக்கத்தின் முன்னோடிகள். எமது மண்ணும் மக்களும் சுதந்திரமாக வாழ முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டியவர்கள்.

போராளிகளுக்கு வழி காட்டிகளாக திகழ்ந்தவர்கள். எமது தலைவனின் தளபதிகள் தமிழீழ தேசத்தின் அடிக்கற்களாகும்.

-http://www.tamilwin.com

TAGS: