மீண்டும் போர் ஏற்படும் சாத்தியக்கூறு – தமிழர்களுக்கு பாராளுமன்றத்தில் எச்சரிக்கை

army_006இலங்கை அமைதியான நாடு இங்கு மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படும் வாய்ப்பு காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயாணி விஜேவிக்கிரம கூறினார்.

இன்று பாராளுமன்றத்தில் காணி அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

விடுதலைப்புலிகள் நாட்டில் யுத்தம் செய்தது தமக்கான தனி நிலத்தினை பெற்றுக் கொள்வதற்காகவே, இப்போது நாட்டில் நிலம் காரணமாகவே பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்றத்திலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிலத்திற்காக விவாதத்தில் ஈடுபட்டு வருவது வேதனை அளிக்கும் விடயமாகும்.

கடந்த காலத்தில் நாட்டில் யுத்தம் நடந்தது நிலத்திற்காகவே அப்படியானதொரு நிலை மீண்டும் ஏற்படும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றது அதனை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து தடுக்கவேண்டும்.

வடக்கு பகுதிகளில் விகாரைகள் கட்டப்படக் கூடாது என வடமாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நாட்டில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே பிரச்சினைகள் இல்லை.

அவர்கள் விடுத்துள்ள கோரிக்கையை போன்று சிங்களவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் தமிழர்கள் வாழக் கூடாது என கூறினால் என்ன நடக்கும். அதனால் வடமாகாண சபை விடுத்த கோரிக்கையை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அத்தோடு வெளிநாடுகளுக்கு இலங்கையின் காணிகள் விற்கப்படுவதும் தடுக்கப்பட வேண்டும். அப்போதே இலங்கையின் பாரம்பரியம் நிலைத்திருக்கும்.

மீண்டும் இலங்கையில் யுத்தம் ஏற்பட்டு நாடு அழிவுப்பாதையில் செல்வது தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும் அத்தோடு இது அனைவரினதும் கடமையாகும்.

அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டியது இலங்கையர்களின் பொறுப்பு என்பதனையும் அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் ஸ்ரீயாணி விஜேவிக்கிரம கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

-http://www.tamilwin.com

TAGS: