கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்னால் ஒன்று திரண்ட மக்கள் மாவீரர் துயிலும் இல்லத்தை சிரமதானம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வழி காட்டலுக்கு அமைய இன்று(25) காலை குறித்த சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் இனத்தின் விடிவுக்காக போராடி தமது உயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஒவ்வொரு வருடமும் கார்த்திகை 27ஆம் திகதி தமிழ் மக்களினால் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் மீளக் குடியமர்ந்த மக்கள் கடந்த ஏழு வருடங்களாகத் தங்கள் பிள்ளைகளை நினைவுகூர முடியாதவர்களாகத் தவித்து வந்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மற்றும் முழங்காவில், ஆகிய பகுதிகளில் மொத்தமாகஇரண்டு மாவீரர் துயிலும் இல்லங்கள் காணப்படுகின்றன.

இதில் யுத்தத்தின் பின்னர் இரண்டு துயிலும் இல்லங்களும் இராணுவத்தினரால் முற்றாக அழிக்கப்பட்டு அவர்கள் வசம் இருந்தது.

எனினும் இப்பொழுது குறித்த பகுதிகளில் இருந்த இராணுவமுகாம் அகற்றப்பட்டுள்ள நிலையில் கனகபுரம், துயிலுமில்லத்தில் மக்களினால் சிரமதானம் செய்யப்படுகின்றது.

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தைத் துப்பராவக்கும் பணியில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிளையும், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தைத் துப்பரவாக்கும் பணியில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவும் கலந்து கொண்டனர்.

இதே வேளை குறித்த நாளில் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லங்களில் மாலை 6.05 மணிக்கு வணக்க வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

எனவே மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொது மக்கள் என எல்லோரையும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டு மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி கிளையினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம், விசுவமடு மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றில் விசுவமடு துயிலும் இல்லத்தில் இராணுவம் இருப்பதனால் ஏனைய இரண்டு மாவீரர் துயிலும் இல்லங்களில் இம்முறை மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்த நல்லாட்சி அரசாங்கம் எங்கள் பிள்ளைகளுக்கு விளக்கு ஏற்றி வழிபடுவதற்கு அனுமதித்தமைக்கு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

இதில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், கட்சியின் அங்கத்தவர்கள், செயற்பாட்டாளர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தைத் சுத்தமாக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: