விடுதலைப் புலிகளை அழிக்க இராணுவத்தினருக்கு உதவிய கருணா..! அம்பலமான உண்மை

karuna_ammanகருணாவின் அறிவுறுத்தலின் பேரில் அவர் சார்பான குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரபாகரன் சார்பு உறுப்பினர்களைக் கொலை செய்வதற்கு இராணுவத்திற்கு உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் பிரித்தி விராஜ் மனம்பேரி இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், முன்னாள் கடற்படைப் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் மூவருக்கு எதிரான சாட்சி விசாரணை இன்று ஐந்தாவது நாளாகவும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

விசேட ஜூரிகள் சபை முன்னிலையில் இந்த சாட்சி விசாரணைகள் இடம்பெறுகின்றது. முறைப்பாட்டாளர்கள் தரப்பில் சாட்சியமளிக்கும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் பிரித்தி விராஜ் மனம்பேரி பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணியின் குறுக்குக் கேள்விகளுக்கு இன்றும் பதிலளித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்திருந்ததை தாம் அறிந்திருந்ததாக அவர் சாட்சியமளித்துள்ளார்.

2003ஆம் ஆண்டு கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்ததை தாம் அறிந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக கருணா அம்மானுடன் நேரடி தொடர்பு இருந்ததா என சட்டத்தரணி சாட்சியாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அவர், 2002ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருந்தபோது தாம் மட்டக்களப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமையாற்றியதாகவும் அந்த அலுவலகத்திற்கு கருணா வருகைதந்தபோது அவரை சந்தித்ததாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் மேலதிக சாட்சி விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 -http://www.tamilwin.com
TAGS: