போர் முடிந்ததால் தமிழர் பெட்டிப்பாம்புகளாக அடங்கிவிட்டதாக எவரும் நினைக்கக்கூடாது!

eelam_tamils_650போர் முடிந்ததால் தமிழர் பெட்டிப்பாம்புகளாக அடங்கிவிட்டதாக எவரும் நினைக்கக்கூடாது! – அநீதிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள் என்கிறது கூட்டமைப்பு.

“போர் முடிவடைந்ததால் தமிழர்கள் பெட்டிப் பாம்புகளாக  அடங்கிக் கிடப்பார்கள் என எவரும் நினைக்கக்கூடாது. எமது மக்களிடம் நேர்க்குணமும் இருக்கிறது; போர்க்குணமும் இருக்கின்றது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

 

நாடாளுமன்றத்தில் நேற்று  நடைபெற்ற கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள், அரச தொழில் முயற்சி, ஆரம்பக் கைத்தொழில் ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“விவசாயத்துறையிலும், கைத்தொழில் துறையிலும் தங்கியிருக்கின்ற ஒரு  சூழ்நிலை இருந்தாலும் நாம் இன்று தகவல் தொழில்நுட்ப யுகத்தியேலே வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். அதற்கேற்ற வகையில் மாற்றங்கள் அவசியம். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் உற்பத்தித் திறனிலும் இலங்கை கீழ்மட்டத்திலேயே  இருக்கின்றது. அதுவும் மேம்படுத்தப்படவேண்டும்.

நாட்டில் மொத்தமாக 2 ஆயிரத்து  395 கைத்தொழில் சாலைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்று தகவல் இருக்கின்றது. எனினும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 31 தொழிற்சாலைகள் மாத்திரமே பதிவுசெய்யப்பட்டுள்ளன.

வடக்கில் 35 தொழிற்சாலைகள் இயங்கி வந்த நிலையில் தற்போது 10 தொழிற்சாலைகளே  இயங்கி வருகின்றன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டிலுள்ள மொத்த தொழிற்சாலைகளுடன் ஒப்பிடுகையில் இதன் சதவீதம் 1.22 வீதமாக  இருக்கின்றது.

போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை கட்டியெழுப்புவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது  எனக் கூறப்பட்டுவரும் நிலையில், அங்குள்ள தொழிற்சாலைகளில் வீதத்தை பார்க்கும்போது நிலைமை கவலையளிக்கும் வகையில் உள்ளது.

அதேவேளை, தொழில் உள்ளிட்ட பாகுபட்டால் தெற்கில் கிளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. தொழில்பாகுபாடு, இன,மத உள்ளிட்ட ஒடுக்குமுறை செயற்பாட்டால் வடக்கு, கிழக் கிலும் இளைஞர்கள் கிளர்ந்தெழுந்த சந்தர்ப்பங்கள் இருக் கின்றன. எனவே, தொழில்கள் வழங்கும்போது இனப்பாகுபாடு காட்டப்படக்கூடாது.

 

மீண்டும் விரக்தியானதொரு நிலைமை ஏற்படாத வகையில் இளைஞர்கள் வழிநடத்தப்பட வேண்டும். ஆகவே, முடங்கிக்கிடக்கும்  தொழிற்சாலைகள் மீள இயங்க வைப்பதற்கு  நடவடிக்கை அவசியம்.

 

மட்பாண்டம், தும்பு உள்ளிட்டன ஆரம்பக் கைத்தொழில்களும் இன்றைய காலகட்டத்தில் முடக்கப்பட்டுள்ளன. இவை பற்றி விசேட கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

 

தமிழர்களைப் பொறுத்தமட்டில் நேர்மையாகவும், உண்மையாகவும் – நடுநிலையாகவும் செயற்படக்கூடிய அமைச்சர்களை மதிக்கின்றனர். நேர்மையாக நடந்துகொள்கின்றனர். பக்கச்சார்பு – ஓரவஞ்கசம் காட்டுபவர்கள் மீது சீற்றரும் கொள்வார்கள். அதாவது எங்கள் மக்களிடம் நேர்க்குணமும் இருக்கின்றது போர்க்குணமும் இருக்கின்றது.

அநீதிகள் இழைக்கப்படும்போது அவர்கள் கிளர்ந்தெழுவார்கள்; கிளர்ந்தெழுந்தும் உள்ளனர். போர் முடிவடைந்துவிட்டது என்பதற்காக எமது மக்கள் பெட்டிப் பாம்புகளாக அடங்கிக்கிடப்பார்கள் என்று எவரும் நினைக்கக்கக்கூடாது. தமது உரிமைகளை வென்றெடுக்கும் விடயத்தில் பலவழிகளிலும் தந்திரோபாயங்களை  கையாள்வார்கள். சில விட்டுக்கொடுப்புடன் எங்கள் மக்களுக்காக  செய்யவேண்டியவற்றை கட்டாயம் செய்வோம்” – என்றார்.

-http://www.tamilcnn.lk
TAGS: