அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எனினும் கருணாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் நியாயமில்லை என அவரின் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமகால அரசாங்கத்தின் நடவடிக்கையினால் அதிருப்தி அடைந்துள்ள கருணா, இதுவரை காலமும் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல இரகசியங்களை வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கருணாவின் நெருக்கமான சகாக்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சிங்கள ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
வாகனம் ஒன்றை தவறான முறையில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்று பெற்றுக் கொள்வதற்கென கூறி நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டு கருணா கைது செய்யப்பட்டார்.
பிரதியமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட வாகனம் இதுவரையில் ஒப்படைக்கப்படவில்லை என அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.
எனினும் இது தொடர்பிலான சட்டரீதியான ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாகவும், அதனை கருத்திற் கொள்ளாமல் தன்னைக் கைது செய்துள்ளதாகவும் அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் கருணா குறிப்பிட்டுள்ளார்.
அவரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆராய்ந்து அவருக்கு பிணை வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு பிரதான நீதிவானினால் தீர்ப்பு வழங்கப்படும்.
இதேவேளை, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் நேரில் சென்று சந்தித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com