அமெரிக்க மரைன் கொமாண்டோக்களைக் கவர்ந்த கரும்புலிப் படகு

கடந்தவாரம் திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்திருந்த அமெரிக்க கடற்படையின் மரைன் கொமாண்டோ படையினர், கடற்புலிகளின் கரும்புலித் தாக்குதல் படகுகளின் செயற்பாட்டு முறையை அறிந்து கொள்வதில் ஆர்வம் காண்பித்தனர்.

சிறிலங்கா கடற்படையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மரைன் படைப்பிரிவுக்குப் பயிற்சி அளிக்கும் நோக்கிலும், சிறிலங்கா கடற்படையுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கிலும், யுஎஸ்எஸ் சோமசெற் என்ற அமெரிக்க கடற்படையின் ஈரூடக போக்குவரத்துக் கப்பல் கடந்த22 ஆம் திகதி திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்தது.

இந்தக் கப்பலில் அமெரிக் கடற்படையின் 11ஆவது மரைன் நடவடிக்கை அணியைச் சேர்ந்த மரைன் கொமாண்டோக்களும் திருகோணமலை வந்திருந்தனர்.

மூன்று நாட்கள் சிறிலங்கா கடற்படை மரைன் படைப்பிரிவினருடன் இணைந்து இவர்கள் திருகோணமலை துறைமுகப் பகுதிகளில் பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

அத்துடன் சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை அருங்காட்சியகம் மற்றும், கடற்படைத் தளபதி பகுதியையும் அமெரிக்க மரன் படைப்பிரிவினர் சுற்றிப் பார்வையிட்டனர்.

கடற்படை அருங்காட்சியகத்தில், கடற்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, தாக்குதல் படகுகளையும், அமெரிக்க மரைன் படையினர் பார்வையிட்டனர்.

குறிப்பாக, கடற்கரும்புலித் தாக்குதலுக்காக வடிவமைக்கப்பட்ட, படகுகளின் வடிவமைப்பு மற்றும் செயற்திறனை அறிந்து கொள்வதில், அமெரிக்க மரைன் படையினர் ஆர்வம் காட்டியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடற்கரும்புலிகளின் தாக்குதல் படகுகளின் திறன் மற்றும் அவற்றினால் எதிர்கொண்ட நெருக்கடிகள் பற்றி அமெரிக்க மரைன் கொமாண்டோக்களுக்கு சிறிலங்கா கடற்படை அதிகாரிகள், விளக்கமளித்துள்ளனர்.

-http://www.tamilwin.com

TAGS: