தமிழர்களை குறிவைக்கும் அழிவு சக்திகள் – கேள்விக்குறியாகும் எதிர்காலம்..!

tamilarkuriஒவ்வொரு நாளும் என்ன நடக்கும் என்பது புரியாத பாதையில் அடியெடுத்து வைத்துள்ள இலங்கையின் அடுத்த இலக்கு நல்லிணக்கம் என்பது மட்டுமே.

இப்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் மற்றும் ஆங்காங்கே ஏற்படும் குழப்ப நிலைகள் அனைத்தின் பின்னணியிலும் ராஜபக்சர்கள் இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இராணுவப் புரட்சி வெடிக்கப்போகின்றது என்ற பயம் மக்களிடையே புகுத்தப்பட்டது. அதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்ற ஓர் நிலைப்பாடு தொடர்ந்து வந்தபோது இப்போது அது மறைந்து போனாலும் புகை இருக்கத்தான் செய்கின்றது.

மாறி மாறி வந்த பிரச்சினைகள் இப்போது புதிய அரசியல் யாப்பிற்கும் தமிழர்களுக்கும் எதிராக திசை திரும்பியுள்ளது.

அந்த வகையில் இப்போதைக்கு அரசியலில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைத்து சக்திகளும் ஒன்றாக இணைந்து புதிய அரசியல் யாப்பிற்கு எதிராக செயற்பட தொடங்கிவிட்டன.

குறிப்பாக தமிழர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் அதே நேரம் அதிகாரம் தங்கள் கைகளுக்கு வர வேண்டும் என்பது மட்டுமே பிரதான நோக்கம்.

இதற்கான காய்நகர்த்தல்களில் எந்த வகையிலும் கபட நாடக தீர்மானங்களை எடுக்க தயாராக இருக்கின்றனர். ஆனாலும் இது கூட்டுச் சதி பௌத்த அமைப்புகள், கடும்போக்காளர்கள், ராஜபக்சர்கள் அனைவரும் இப்போது இணைந்து விட்டனர்.

அண்மையில் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர் அரசியல் யாப்பை ஒத்துக் கொள்ள முடியாது, இது பௌத்த நாடு புலிகள் தலை தூக்கி விட்டார்கள் நாடு சர்வதேசத்திற்கு விலை போய் விட்டது என்றார்.

அங்கு அவர் தெரிவித்த அதே கருத்துகள் தான் மஹிந்த, நாமல், கோத்தா, மற்றும் கூட்டு எதிர்க்கட்சி உட்பட இனவாதம் பரப்பும் வேறு சில விசமிகள் அனைவருமே இப்போது முன்வைத்து வருகின்ற வாதமாகி விட்டது.

இவர்கள் அனைவரதும் கோரிக்கை புதிய அரசியல் யாப்பு கொண்டு வரக்கூடாது அப்படி வந்து விட்டால் நாடு பாரிய ஆபத்துகளை சந்தித்து விடும் என்பது மட்டுமே.

எப்படி என்றாலும் முடிந்து போன யுத்தத்தையும் அதன் வடுக்களையும் மட்டுமே ஆயுதங்களாக எடுத்துக்கொண்டு ஒட்டுமொத்தமாக புலிகள் புலிகள் என இவர்கள் கூறி வருவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

இதன் காரணமாக இவர்கள் அனைவருமே கூட்டு சதியில் இணைந்துள்ளார்களா? என்ற சந்தேகம் ஏற்படத்தான் செய்கின்றது.

குறிப்பாக இனவாதம் பரப்பிய நபர்களுக்கும் ராஜபக்சர்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகவும் ஊடகங்கள் விமர்சித்தன.

அதனால் இவர்கள் அனைவரும் இணைந்தே நாட்டில் பதற்றத்தை தோற்றுவித்து கொண்டிருக்கின்றார்கள் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

உண்மையில் அடிக்கடி அவர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் இவர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்றெல்லாம் கூறிக்கொண்டு வரும் நிலை நாட்டில் இல்லை.

அப்படியானதொரு நிலை இல்லை ஆனாலும் அப்படியான தொரு கலவரத்தை ஏற்படுத்துவது மட்டுமே இவை அனைத்தின் பின்னணி. இதன் மூலம் எதிர்பார்க்கும் பதில் அதிகாரம், ஆட்சி மாற்றம்.

மேலும் இதுவரையில் ஆட்சி பற்றி குறைகளை மட்டும் கூறி வந்த மஹிந்தவும் கூட நான் ஆட்சிக்கு வந்ததும் பார்த்துக் கொள்கின்றேன் என்ற வெளிப்படை கருத்துகளையும் முன்வைக்கத் தொடங்கி விட்டார்.

மேலும் கூட்டாக கோவிந்தா போடும் இவர்களுடைய நோக்கம் அதிகார வேட்கை என்பது தான் என்றாலும் அதனால் ஏற்படும் அடுத்த பக்க விளைவு உண்டாக்கும் பாதிப்பு கூட கடந்த கால சுவடுகளை பார்த்து பயணித்தவர்கள் நினைப்பது இல்லை.

அதிகார ஆசை காரணமாக நாட்டில் குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி கொண்டு உள்ளார்கள் என்பது வேதனைத் தரும் விடயமே.

நான் இல்லை நீ என ஒருவர் மாறி ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றார்களே தவிர நாளை சமூகத்தின் நிலை பற்றி யார் பதிலளிப்பது.

இங்கு அரசும் கூட கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டு தான் இருக்கின்றதே தவிர முன்னேற்றகரமான செயற்பாடுகளை செய்துள்ளதா என்பது இது வரையில் வெளிப்படுத்தப்படாத ஒன்றே..,

அதிகாரங்கள் கையில் உள்ள ஜனாதிபதியும் அரசும் அடுத்து எடுக்கும் தீர்ப்பு எப்படி இருக்கப்போகின்றது என்பது நீருக்குள் தீயை கொண்டு செல்வது போலத்தான் இருக்கின்றது.

-http://www.tamilwin.com

TAGS: