இலங்கைக்கு சகல உதவிகளையும் வழங்குவோம்! – மைத்திரியிடம் தெரிவித்தார் மலேசிய மன்னர்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு மலேசியா சென்றுள்ள ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவுக்கும்,  மலேசிய மன்னர் சுல்தான் முஹம்மதுக்குமிடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.

மலேசிய அரச மாளிகைக்கு சென்ற ஜனாதிபதியை மலேசிய மன்னர் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

மிகவும் சுமுகமாக இடம்பெற்ற இச்சந்திப்பின் போது இலங்கையின் புதிய அரசின் நடவடிக்கைகளைப் புகழ்ந்து பேசிய மலேசிய மன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இணக்க அரசின் செயற்பாடுகளையும் பாராட்டினார்.

இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு தான் மலேசிய அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட மன்னர் சுல்தான் முஹம்மத், இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

நல்லிணக்கம், அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் பொருளாதார அபிவிருத்தியை நோக்கி புதிய இணக்க அரசின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன   மலேசிய மன்னருக்கு விளக்கினார்.

மலேசிய அரசு இலங்கைக்கு வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்வதற்கு மலேசியாவின் உதவி தொடர்ந்தும் கிடைக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த மன்னர் சுல்தான் முஹம்மத் மலேசியாவின் மன்னர்களில் மிகவும் குறைந்த வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilcnn.lk

 
TAGS: