ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு தொடர்பான அனைத்துலக அணுசக்தி ஏஜன்சியின் (ஐ.ஏ.இ.ஏ.) அறிக்கை, நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து, மத்திய கிழக்கில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள், ஈரான் மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன. அதேநேரம், ஐ.ஏ.இ.ஏ. அறிக்கையின் குற்றச்சாட்டுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஈரான், தனது அணுசக்தி உற்பத்தியை நிறுத்தப் போவதில்லை என உறுதியாகக் கூறியுள்ளது.
கடந்த ஒரு வார காலமாக, உலக நாடுகள் எதிர்பார்த்த, ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பு குறித்த ஐ.ஏ.இ.ஏ., அறிக்கை நேற்று முன்தினம் வெளியானது. மொத்தம் 22 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை, தொழில்நுட்ப மொழியில் வறண்ட நடையில் எழுதப்பட்டுள்ளது.
“ஈரான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே அணுகுண்டு தயாரிக்கும் தொழில்நுட்பத்தைப் பெற்று, தற்போது அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. அதோடு, அணு ஆயுதங்கள் தாங்கிச் செல்லக் கூடிய ஏவுகணைகளையும் தயாரிப்பதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு விட்டது” என்பது தான் அந்த அறிக்கையின் சாராம்சம்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரங்கள், ஐ.ஏ.இ.ஏ.,யின் உறுப்பு நாடுகள் மற்றும் ஈரானின் அணுசக்தி தொடர்பான அறிக்கை, ஐ.ஏ.இ.ஏ., ஈரானில் நேரில் நடத்திய ஆய்வுகள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டதாக ஐ.ஏ.இ.ஏ., கூறியுள்ளது.
ஏற்கனவே கடந்த சில நாட்களாக மிரட்டல் மேல் மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்த அமெரிக்கா, தற்போது ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அதிகரிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளும் இதில் சேர்ந்துள்ளன.
ஐரோப்பிய யூனியன், இந்த அறிக்கை குறித்து கவலை தெரிவித்துள்ளது. ஒட்டு மொத்தமாக இவை அனைத்தும் சேர்ந்து, ஈரான் மீது மேலும் கடினமான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளன.
இந்நிலையில், இப்பிரச்னையின் மையமான இஸ்ரேல், ஈரான் மீதான தனது தாக்குதல் குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் நேற்று முன்தினம், இஸ்ரேலிய இராணுவ அமைச்சர், இராணுவ நடவடிக்கைகள் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என தெரிவித்தார்.
இஸ்ரேல் முன்னாள் இராணுவ அமைச்சர் ஷவுல் மொபாத், “ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் தூரத்திற்குள் ஐரோப்பா இருக்கிறது. ஈரான் ஐரோப்பா மீது தாக்குதல் நடத்தாது என்று யாராவது நினைத்தால் அது பெரும் தவறு” என்றார்.
இதனிடையே ஈரானிய இராணுவத் தளபதி “ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துமானால், அதன் பின் இஸ்ரேலே இருக்காது” என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
ஐ.ஏ.இ.ஏ., அறிக்கையால் காட்டம் அடைந்துள்ள ஈரான் குடியரசுத் தலைவர் அகமதி நிஜாத் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: “தங்கள் உரிமையில் இருந்து ஒரு இம்மியளவு கூட ஈரானியர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அணு ஆயுதங்கள் குவிந்துள்ள இந்த உலகில் ஒன்றிரண்டு அணுகுண்டுகளைத் தயாரிப்பது பெரிய விஷயமல்ல. எங்களைப் பற்றி அறிக்கை கொடுக்கும் ஐ.ஏ.இ.ஏ., அமெரிக்க அணு ஆயுதத் தயாரிப்பு குறித்து அறிக்கை வெளியிடுமா? பண்பட்ட நாகரிகம் வாய்ந்த ஈரான், அணுகுண்டுகளைத் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை. அதேநேரம், அணு ஆயுதங்களால் தாக்குவோம் என்ற மிரட்டலுக்கும் ஈரானியர்கள் பயப்பட மாட்டார்கள்.” என்றார்.