இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது இலங்கை அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்களை பிரித்தானிய அனைத்துலக ஊடகமான சானல்-4 ஆதாரங்களுடன் வெளியிட்டது.
இலங்கையின் கொலைகளம் என்ற தலைப்பில் சானல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தின் பாகம் 2-ஐ தயாரித்து வெளியிடும் பணியில் தற்போது சானல்-4 ஊடகம் ஈடுபட்டுள்ளது.
“தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்” என்ற தலைப்பில் வெளிவரவுள்ள இந்த போர்க்குற்ற ஆவணப்படத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல் குறித்த பல அதிர்ச்சி தரும் தகவல்கள் அடங்கியுள்ளது. அத்துடன் ஆதாரங்கள் இருந்தும் ஏன் இலங்கை அரசு மீது அனைத்துலகம் இன்னும் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என இந்த காணொளியில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இறுதிக்கட்டப் போரின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்கிக்கொண்ட பொதுமக்கள் சிலரின் நேரடிச் சாட்சியங்களும் இதில் அடங்குவதோடு புதிய போர்க்குற்ற காணொளிக் காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவருகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் சானல்-4 வெளியிட்ட இலங்கையின் கொலைகளம் ஆவணப்படம் உலகம் பூராகவும் காட்சிப்படுத்தப்பட்டது. எனினும் இதுவரை இலங்கை அரசுக்கு எதிராக போதியளவு அனைத்துலக நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.