இலங்கையில் பல தசாப்தங்களாக தொடரும் இன மோதல்கள் தீவிரமடைந்து காணப்பட்ட போதும், தென்னிலங்கையின் சில மனிதாபிமான மனிதர்களும் உள்ளதாக அண்மைய பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்து பல உயிர்களை காவு கொண்ட போதும், இரு இனங்களுக்கு இடையிலான மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த விபத்தின் போது யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் நடந்து கொண்ட விதம், தென்னிலங்கையில் அதிகம் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.
இன முரண்பாடுகளுக்கு அப்பால் இரு உயிர்களை காப்பாற்றும் முயற்சியில் அங்கிருந்த தமிழர்கள் ஈடுபட்டதாக, பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில பதிவேற்றி வருகின்றனர்.
இந்த அனர்த்தத்தின் மூலம் ஏற்பட்ட நல்லிணக்கம் இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படுவதற்கான ஆரம்ப புள்ளியாக கூட அமையலாம் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் அரச பேருந்து மற்றும் வான் மோதியதில் 11 பேர் ஸ்தலத்தில் உயிரிழந்திருந்தனர்.
கோர விபத்தில் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும், விபத்து இடம்பெற்ற இடத்தில் 11 மெழுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழர்களின் இந்த மனிதாபிமான நடவடிக்கை, தென்னிலங்கை மக்களின் மனங்களை குளிரச் செய்துள்ளது. தமிழர்கள் எல்லோரும் புலிகள், சிங்கள மக்களை கொல்லுபவர்கள் என்ற எண்ணப்பாட்டில் இருந்தவர்களின் நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பில் தமிழ் மக்களுக்கு ஆதரவாக பல பதிவுகள் பேஸ்புகில் பதியப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
“உயிரிழந்த 11 பேரும் சிங்களவர்கள்…. உயிரிழந்தது தமிழ் பிரதேசத்தில்… விபத்தின் போது இருவரையாவது மரணத்தில் இருந்து காப்பாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டதும் தமிழர்கள்… உயிரிழந்த சிங்களவர்களுக்காக அஞ்சலி செலுத்தி துன்பத்தை பகிர்ந்துக் கொண்டதும் தமிழர்கள்… அங்கு மனிதாபிமானம், நட்பு மற்றும் தோழமையே தலை தூக்கியது…. பல நூற்றாண்டு பழைமையான இரத்த சொந்தம் காணப்பட்டது… தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் தூண்டுதல்களுக்கு ஏமாறாமல்.. தமிழ் சிங்களம் என்ற பேதமற்ற இலங்கையர்களாக செயற்படுவதற்கு இந்த 11 பேரின் மரணமாவது காரணமாக இருக்கட்டும்…” என தென்னிலங்கையை சேர்ந்தவர்களின் பிரதான பேஸ்புக் பக்கங்களில் பதிவிடப்பட்டிருந்தன.
இதேவேளை இந்த விபத்தின் போது யாழ். மக்கள் நடந்து கொண்ட விதம் குறித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நன்றி தெரிவித்திருந்தனர்.
தமிழர்கள் சிங்களவர்கள் மீது வெறுப்புணர்வுடன் இருப்பார்கள் என்ற நிலைப்பாட்டை தாங்கள் இந்த சம்பவத்தை அடுத்து மாற்றிக் கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, பாதிக்கப்பட்ட உறவினர்களினால் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
தென்னிலங்கை மக்கள் மனிதாபிமானம் கொண்டவராக இருந்தாலும், அரசியல் நோக்கங்களுக்காகவும் தமது இருப்பை தங்க வைத்துக்கொள்ளவும் அரசியல்வாதிகளினால் விதைக்கப்பட்டதே இனவாதம்.
இவ்வாறான மனிதாபிமான நடவடிக்கைகள் எதிர்காலங்களில் இனவாத அரசியல்வாதிகளுக்கு பெரும் இடியாக அமையும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
-http://www.tamilwin.com