சுயநிர்ணய அடிப்படையில், தமிழ் தேசம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமஸ்டி என்ற நிலைப்பாட்டிலேயே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய முன்னணியில் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வந்திருந்தார்.
இந்த வீரவணக்க நிகழ்வுக்கு கூட்டமைப்பின் உறுப்பினர்களும் சென்றிருந்ததாகவும், இதன் போது மாவை சேனாதிராஜா அவர்கள் தலைவர் பிரபாகரனை சந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மறுநாள் குறித்த இருவரும் சந்தித்துகொண்டனர். இந்த சந்திப்பின் போது அதிகார பரவல் சம்பந்தமாக தீர்வு திட்டம் ஒன்றை முன்வைப்பது தொடர்பில் இரா.சம்பந்தன் அவர்கள் தங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
எனினும், அதற்கு தங்களிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லையாம். அது தொடர்பில் என்னவென்று இரா.சம்பந்தன் கேட்டுவர சொன்னார் என்று தலைவர் பிரபாகரன் அவர்களிடத்தில் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், இதற்கு பதில் வழங்கிய தலைவர் பிரபாகரன் அவர்கள், அதிகார பகிர்வு என்பதற்கு இடமில்லை. அந்த அடிப்படையில் செயற்பட இயலாது என பதில் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து தன்னை சந்தித்த தலைவர் பிரபாகரன் அவர்கள், அதிகார பரவல் என்ற அடிப்படையிலேயேதான் கூட்டமைப்பினர் கதைத்துகொண்டு இருக்கின்றனர்.
அழிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றோம். கொள்கையினை விட்டு மண்டியிடுவோம் என கூட்டமைப்பினர் நினைக்கின்றார்களோ தெரியாது.
எனினும், தாம் ஒருபோதும் அவ்வாறு செய்ய போவது கிடையாது என தலைவர் பிரபாகரன அவர்கள் தன்னிடம் கூறியதாக செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அன்று பிரபாகரன் எடுத்த முடிவு பிழையானதாக இருந்திருக்குமாக இருந்தால் கடந்த செப்டம்பர் மாதம் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் தமிழ் மக்கள் கலந்துகொண்டிருக்க மாட்டார்கள்.
அந்த அரசியல் தேவையின் உணர்ந்துகொண்டதன் காரணமாகவே தமிழ் மக்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டார்கள். தன்னை பொருத்தமட்டில் இரா.சம்பந்தன் அவர்கள் இந்த இடத்தில் தோல்வி கண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு சமஸ்டி தீர்வினை தமிழ் மக்களுக்கு பெற்றுதர வேண்டும். அப்படி இல்லை என்றால் இந்த சரித்திர படுகொலைக்கு இவர்களும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
அன்று அதிகார பரவலாக்கல் என்ற அடிப்படையிலான சமஸ்டிக்கு ஒத்துக்கொண்டால் போர் நிறுத்தம் செய்வோம் என ஒத்துக்கொண்டவர்கள், இன்று இருந்ததை விட முன்னேற்றம் என்று கூறுவது தமிழ் மக்களுக்கு செய்யும் பாரிய துரோகம் ஆகும்
எனவே, இந்த ஒற்றை ஆட்சிக்கு எதிராக தமிழ் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்தால் கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் என் செல்வராசா கஜேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com