முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, கருணா குழுவினருக்கு தம்மால் வழங்கப்பட்டது என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ நடவடிக்கைப் பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயந்த குணவர்தன நீதிமன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கு நேற்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலகவின் மேற்பார்வையில் விசேட ஜுரிகள் சபை முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது இராணுவ நடவடிக்கைப் பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயந்த குணவர்தன மற்றும் இராணுவப் பலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் லியனகே ஆகியோர் சாட்சியம் அளித்திருந்தனர்.
தொடர்ந்தும் சாட்சியம் வழங்கிய அவர்கள், குறித்த ரி-56 ரக துப்பாக்கியானது இராணுவத்தின் மத்திய ஆயுதக் களஞ்சியத்தினூடாக இராணுவப் புலனாய்வுப் படையணிக்கு வழங்கப்பட்டு,
அங்கிருந்து பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மூன்றாம் இராணுவப் புலனாய்வு கட்டளை மையத்தினூடாக கருணா குழுவுக்கு வழங்கப்பட்டதாக இராணுவ நடவடிக்கைப் பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயந்த குணவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த துப்பாக்கியுடன் சுமார் 150 வரையிலான துப்பாக்கிகளும், யுத்த உபகரணங்களும் கருணா குழுவினருக்கும் இராணுவத்துடன் இணைந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்ட குழுக்களுக்கும் வழங்கப்பட்டதாகவும் நீதிமன்றில் சாட்சியமளிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.
2006ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி குறித்த ஆயுதமும், மேலும் ஒருதொகை ஆயுதங்களும் இராணுவப் புலனாய்வுப் படையணிக்கு விநியோகம் செய்யப்பட்டது.
உளவுத் தகவல்களை சேகரித்து தாக்குதலுக்குத் தேவையான பொறிமுறையை வழங்கும் நோக்கிலேயே இதனை செய்திருப்பதாகவும் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
எனினும் மூன்றாவது புலனாய்வுக் கட்டளை மையத்திலிருந்து செயற்பட்ட நட்புக் குழுக்களுக்கு விநியோகிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் எந்தவித ஆவணங்களும் தரவுப்படுத்தப்படவில்லை என்று சாட்சியாளர்கள் மன்றில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விடுதலைப் புலிகளை ஆயுத ரீதியில் தோற்கடிப்பதற்காக ரி-56 ரக துப்பாக்கியையும், வேறுசில ஆயுதங்களையும் கருணா குழுவுக்கு வழங்கியதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும், ஓய்வுப்பெற்ற மேஜர் ஜெனரலுமான லியனகே நீதிமன்றில் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com