முக்கோண நல்லிணக்க அரசியலில் சிக்கி அழியும் ஈழத் தமிழினம்

tamileelammபேசப்படும் எல்லாவித சமாதானங்களும் உரிமைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளாய் அல்லாமல் ஒடுக்கு முறைகளை நிலை நிறுத்துவதற்கான வழி முறைகளாய் உள்ளன. உலகிலுள்ள அனைத்து நாடுகளும் சர்வதேச அரசியல் சக்கரத்தில் சூழலும் அலகுகளாகவே உள்ளன. இன்றைய சர்வதேச அரசியல் ஒழுங்கானது “நல்லிணக்கம்” என்ற ஓர் அழகிய வார்த்தைக்கு ஊடாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கண்டத்திற்குக் கண்டம் வேறுபாடான வார்த்தைகளால் அழைக்கப்பட்டாலும் அடிப்படையில் மேற்படி “நல்லிணக்கம்” என்ற பொதுப் பொருளே அதிலுண்டு.

இத்தகைய சர்வதேச அரசியல் கோட்பாட்டை அதற்குரிய பரிமாணத்தில் புரிந்து கொள்ளாமல் எந்த ஒரு நாடும் உள்நாட்டு ரீதியாகவோ அல்லது வெளிநாட்டு ரீதியாகவோ அரசியலை நகர்த்த முடியாது. இந்நிலையில் உரிமைக்காக போராடும் ஈழத் தமிழினம் இது பற்றி ஆழமான, கோட்பாட்டு வகைப்பட்ட, நடைமுறை சார்ந்த புரிதலைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம்.

உள்நாட்டு அரசுக்கும் வெளிநாட்டு அரசுகளுக்கும் இடையிலான நல்லிணக்கமானது உள்நாட்டு அரசுக்கும் உள்நாட்டு அரசியல் சக்திகளுக்கும் இடையிலான நல்லிணக்கம் என்ற முக்கோண வடிவிலான நல்லிணக்க அரசியலுக்கு உலகிலுள்ள அனைத்து நாடுகளும் உட்பட்டுள்ளன. இங்கு முக்கோண அரசியலில் ஆளும் வர்க்கங்களாக உள்ள சக்திகள் தமக்கிடையே ஒரு

நல்லிணக்கத்தை உருவாக்கி உள்நாட்டு ரீதியிலும் வெளிநாட்டு ரீதியிலும் ஒடுக்குமுறைகளை அரங்கேற்றுகின்றன. இதில் ஈழத் தமிழர் சார்ந்த ஒடுக்குமுறை இன ஒடுக்குமுறையாக வடிவம் பெற்றுள்ளது. வேறு நாடுகளில் அவை மதம் சார்ந்தோ, பிரதேசம் சார்ந்தோ, மொழி சார்ந்தோ அதற்கான வடிவத்தைப் பெறுகின்றன.

பனிப் போர் முடிந்ததைத் தொடர்ந்து அதாவது 1990 இன் தொடக்கத்தில் இருந்து முக்கியமான இரண்டு அரசியல் கோட்பாடுகள் உலக அரங்கில் முதன்மை பெறத் தொடங்கின. அந்த அரசியல் கோட்பாடுகள் இரண்டும் அமெரிக்கா, சீனா ஆகிய இரு பெரும் உலகப் பேரரசுகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்தன. ரஷ்யாவின் உலகப் பேரரச ஆதிக்கம் வீழ்ந்த இடத்தில் சீனாவின் உலகப் பேரரசின் பிரவேசத்தோடு இந்த இரு பெரும் பேரரச தத்துவங்களும் “நல்லிணக்கம்” என்ற வடிவில் உதயமாகின.

பனிப் போர்க் காலத்தில் வல்லரசுகளிடையே காணப்பட்ட மோதல், பகைமை, அரசியல்களின் பாதிப்பில் இருந்து விடுபட்டு பெரு வல்லரசுகளுக்கிடையே ஒரு வகை உடன்பாட்டைக் காண்பதன் மூலம் அனைத்து வல்லமை வாய்ந்த அரசுகளும் தத்தம் தகுதிக்கு ஏற்ப இந்த உலகை சூறையாடுவதற்கான கோட்பாடு “நல்லிணக்கம்” என்ற பெயரில் உதயமாகத் தொடங்கியது. இதனை அரசியல், பொருளாதார, இராணுவ அர்த்தத்தில் மிக நுணுக்கமாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேற்படி இந்த கோட்பாட்டிற்குள் ஈழத் தமிழரின் தலைவிதி புதைந்து போயுள்ள துயரத்தை அப்போதுதான் சரிவரப் புரிந்து கொள்ள முடியும்.

பனிப் போர்க் காலத்தில் சோவியத் யூனியன் உட்பட கம்யூனிச அரசியலுக்கு எதிராக அமெரிக்கா வகுத்துக் கொண்ட கோட்பாட்டிற்கு கான்டெய்ன்மெண்ட் (Containment) எனப் பெயர். இதன் பொருள் “பகைமை கொண்ட முடக்கல்” கோட்பாடு என்பதாகும். அதே வேளையில் இக்கால கட்டத்தில் சீனாவிடம் இருந்த அரசியலானது மோதல் (Confrontation) கோட்பாட்டைக்

கொண்டதாக அமைந்தது. ஆனால் பனிப் போரின் பின்பு அமெரிக்கா மோதல் கோட்பாட்டிலிருந்து பங்கு வகித்து நலனடைதல் (From Containment to Engagement) என்ற கோட்பாட்டை வடிவமைத்தது.

சீனா மோதல் போக்கிலிருந்து இடங்கொடுத்து நலனடைதல் (From Confrontation to Accommodation) என்ற கோட்பாட்டை வடிவமைத்தது. அதாவது Engagement என்பது ஒரு

நாட்டுடன் பகைமை கொள்ளாமல் அந்த நாட்டின் அரசியல் பொருளாதார நடவடிக்கையில் பங்கெடுத்துக் கொள்வதன் வாயிலாக அந்நாட்டிலிருந்து பெறத்தக்க அரசியல் பொருளாதார நலன்களை அடைதல் என்பதாகும். அதே வேளை Accommodation என்பது ஒரு நாட்டுடன் மோதாமல் அந்த நாட்டிற்கு தனது நாட்டின் அரசியல் பொருளாதார நலன்களுக்கு இடங்கொடுத்து அதன் வாயிலாக தனக்கான நலன்களை உள்நாட்டு அர்த்தத்திலும் வெளிநாட்டு அர்த்தத்திலும் பெருகிக் கொள்ளல் என்பதாகும்.

இங்கு “பங்கு வகித்து நலனடைதல்” என்பதும் “இடங்கொடுத்து நலனடைதல்” என்பதும் ஏறக்குறைய ஒரே மையத்தில் சந்திக்கும் கொள்கைகளாக உள்ளன. இதன் மூலம் இரு பெரும்

அரசுகளும் உள்நாட்டு ரீதியிலும் உலகளாவிய ரீதியிலும் மேற்கூறிய அடிப்படையில் நின்று தத்தமக்கான அரசியல், பொருளாதார நலன்களை ஈட்டும் கொள்கையை வகுத்தன. இவை

நன்மையீட்டும் நாடுகளுக்கு கொள்ளையாகவும் ஏனைய நாடுகளுக்கு சூறையாடலாகவும் அமைகிறது.

எப்படியோ இங்கு ஒரு புறம் Engagement, Accommodation என்பதாகவும் மறுபுறம் Accommodation,Engagement என்பதாகவும் இவை சம்மந்தப்படும் இரு நாடுகளின் பலம்-பலயீனம்

என்பவற்றிற்கு ஏற்ப அமைகின்றன. இந்நிலையில் தற்போது இறுதியாக சீனா ஒரு புதுக் கொள்கையை மத்திய ஆசிய நாடுகள் முன்வைத்திருக்கிறது. அதற்கு “Win – Win” Cooperation என்று பெயர். இது இரு நாடுகளும் ஒத்துழைத்து ஒன்றுக்கொன்று நலம் அடைதல் என்ற பொருள் கூறப்படுகிறது.

அதாவது சுரண்டலுக்கு இன்னொரு அழகான பெயர் இது. இதன்படி சுரண்டப்படும் நாட்டிற்கு அது சுரண்டல் அல்ல என்றும் அது இரு தரப்பு ஒத்துழைப்பு வாயிலான நலன் என்றும் அது காட்ட முற்படுகிறது. இங்கு மேற்படி Engagement, Accommodation. Win-Win Cooperation என்ற மூன்றும் வல்லமை வாய்ந்த நாடுகளின் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரே கோட்பாடுதான். இதனை இலகுவாக “நல்லிணக்கம்” என்று ஒரு பொதுப் பெயரில் அழைப்பது தகும். அதாவது ஆளப்படுபவர்களுக்கு எதிராக ஆட்சியாளர்களுக்கிடையேயான நல்லிணக்கம் என்பதே இதற்கான சரியான விளக்கமாகும்.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் தொடங்கிய மேற்படி “பங்கு வகித்து நலனடைதல்” என்பதும் “இடங்கொடுத்து நலனடைதல்” என்பதும் இரு நாடுகள் சம்மந்தப்பட்டவையாக மட்டுமன்றி அவை சார்ந்த உலகளாவிய நாடுகள் சம்மந்தப்பட்டவையாகவும் பின்பு உலகம் முழுவதற்கும் பொதுவானவையாகவும் பரிணாமம் பெற்றுள்ளது.

இவை கள நிலை மற்றும் பிராந்திய வேறுபாடுகளுக்கு ஏற்ப சிறு சிறு சொற் சோடனை மாற்றங்களோடும் மாயாஜால வார்த்தைப் பிரயோகங்களோடும் பிரயோகிக்கப்படுகின்றன. இந்த வகையில் Engagement-Accommodation-Win-Win Cooperation என்னும் மூன்றும் அடிப்படையில் ஒன்றுதான். அவை முன்னுக்கு உள்ளது பின்னுக்கும், பின்னுக்குள்ளது முன்னுக்குமாக மாறி மாறி இடம்பிடிக்கின்றன என்பதே உண்மை. இதில் Engagement என்பது பெரியது. ஆனாலும் மூன்றும் அவற்றை விடப் பலம் குறைந்த நாடுகளைப் பொறுத்து ஒரே விளைவைக் கொண்டவை.

இப்பின்னணியில், இத்தகைய நல்லிணக்கக் கோட்பாட்டின் அடிப்படையில் இன்றைய சர்வதேச அரசியல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அதன்படி சர்வதேச அரசியலின் அச்சாணிக் கோட்பாடாக “நல்லிணக்கம்” என்பது விளங்குகிறது. பலவானின் நலனுக்காக பலவீனமானவனின் ஒத்துப் போதலுக்குப் பெயரே “நல்லிணக்கம்” என்பதாகும்.

இதனடிப்படையில் சர்வதேச அரசியலும் அதனுடன் பின்னிப்பிணைக்கப்பட்ட உள்நாட்டு அரசியலும் ஒருங்கு சேர வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது மேற்படி உலகளாவிய வல்லரசுகளின் நலனுக்குப் பொருத்தமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியலை இசைவாக்கம் செய்வதே சர்வதேச அரசியல் ஒழுங்கின் பிரதான பணியாகும். அந்த இசைவாக்கலுக்குள் ஈழத் தமிழர்களும் ஓர் அலகாக்கப்பட்டுள்ளார்கள்.

சர்வதேச அரசியல் பொருளாதார ஒழுங்கானது மேற்படி Engagement – Accommodation, Accommodation-Engagement என்ற அதிகார சுற்றோட்டத்தின் கீழ் நாடுகளின் வல்லமை

வேறுபாடுகளுக்கு ஏற்ப மாறி மாறி பின்னப்படுகின்றன. இதுதான் சர்வதேச அரசியலின் முதுகெலும்பான விதி.

ஈழத் தமிழர் அரசியலைப் பொறுத்தவரையில் மேற்படி இந்த இரண்டு விதிகளும் இதில் சம்மந்தப்படும் அமெரிக்கா, சீனா என்பன ஒருபுறம் அமைகின்றன. ஏனெனில் பூகோளம் தழுவிய சர்வதேச விதியை இவை இரண்டுமே அரசியல்-பொருளாதார அர்த்தத்தில் நிர்ணயித்து நிற்கின்றன.

அதே வேளை தென்னாசிய பிராந்தியம் இந்தியா என்னும் ஒரு பெரிய அரசு இங்கு களத்தில் உள்ளது. ஆதலால் அதுவும் இதில் தனக்குரிய இடத்தை வகிக்க முற்படும். இதனால் அமெரிக்கா, சீனா, இந்தியா என மூன்று பெரிய அரசுகள் இதில் நேரடியாக சம்மந்தப்படுகின்றன.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பெறுபேறான வெற்றிக் கனிகளை அதிகம் சீனா பெற்றுக் கொண்டது. இதனை அமெரிக்காவும் இந்தியாவும் ஏற்றுக்கொள்ள மறுத்தன. முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் சீனாவின் பங்குதான் தமது வெற்றிக்குப் பெருந் துணையாக அமைந்தது என்று இலங்கை ஆட்சியாளர்களும் இராஜதந்திரிகளும் வெளிப்படையாகக் கூறியுள்ளனர்.

அதாவது யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் இதில் ஐ.நா. சபை தலையிட வேண்டும் என்ற நிலைப்பாடு ஐ.நா. பாதுகாப்புச் சபையில் முன்வைக்கப்பட்ட போது அதற்கு எதிராக சீனா தனது முழு அதிகாரத்தையும் பிரயோகித்து அதற்கான தீர்மானங்களை எடுக்கவிடாது தடுத்தது. அதுதான் இராஜதந்திர ரீதியில் தாம் அந்த யுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க காரணமாய் அமைந்ததாக இலங்கைக்கான அப்போதைய ஐ.நா. தூதர் பேசியும் எழுதியும் உள்ளார்.

அத்துடன் மேற்குலகில் புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழ்வதினால் அவர்களின் அழுத்தத்திற்கு மேற்குலநாடுகள் உட்படக் கூடிய வாய்ப்பு உண்டென்றும் இந்திய அரசில் பலம் பொருந்திய தமிழ் மாநிலம் ஓர் அங்கமாய் உள்ளதால் இந்திய அரசும் அழுத்தத்திற்கு உள்ளாக முடியும் என்றும் ஆனால் சீனாவில் அவ்வாறு தமிழர்கள் வாழவில்லையென்றும் எனவே சீனா உள்நாட்டு ரீதியாக தமிழரின் அழுத்தங்களுக்கு கட்டுப்படத் தேவையற்ற தன்மையைக் கொண்டுள்ள நாடு என்றும் அதே வேளை சீனாவே இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் தமது வெற்றிக்குத் துணை நின்றது என்றும் சிங்கள இராஜதந்திரிகளும் அறிஞர்களும் கூறி வருகின்றனர்.

ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் அதற்கு நேரடியாக துணை புரிந்த சீனாவால் முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்த பின்பு இலங்கையில் ஓங்கி வளர்வது இலகுவாக இருந்தது. இந்து சமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இலங்கை அமைந்திருப்பதால் அமெரிக்காவிற்கு இது கவலையை அளித்தது. அதே வேளை மேற்படி இந்து சமுத்திரம் தழுவிய இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்துடன் கூடவே இந்தியாவின் பாதுகாப்பிற்கு அவசியமான கேந்திர முக்கியத்துவத்தில் இலங்கை அமைந்திருப்பதாலும் இந்தியாவின் கவலை இரட்டிப்பானதாகக் காணப்பட்டது.

இப்பின்னணியில் ஒரு வகை நல்லிணக்க அரசியலை அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கையில் முன்வைத்தன.

2015 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என்பனவற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் இத்தகைய இலக்கை

அமெரிக்காவும் இந்தியாவும் எட்டக் கூடியவாறான தேர்தல் வெற்றிகள் கிடைத்தன.

“நல்லிணக்க” அரசாங்கம் என்பதே இதற்கான மகுடமாய் அமைந்தது. அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் புதிய ஆட்சியின் கீழான இலங்கை அரசின் நல்லிணக்கம் என்பது ஒரு புறமும் சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான நல்லிணக்கம் என்பது இன்னொன்றாகவும் அமைந்தது. அதாவது முதலாவது நல்லிணக்கம் என்பது சீனாவின் கை ஓங்காத அமெரிக்க மற்றும் இந்திய உறவுகளுக்குப் பொருத்தமான நல்லிணக்கம் ஆகும். இரண்டாவதாக இந்தியா, அமெரிக்கா, ரணில், சிறிசேன அரசாங்கம் தொடர்பான மூன்று அரசுகளுக்கும் இடையேயான நல்லிணக்கம் ஆகும். மூன்றாவதாக இத்தகைய அரசாங்கத்தை இலங்கையில் உருவாக்குவதற்கு ஏதுவாக சுதந்திரக் கட்சியினருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் இடையேயான நல்லிணக்கம் என்பது ஈழத் தமிழர் முன்வைக்கும் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை தொடர்பான போர்க் குற்ற விசாரணை, சர்வதேச விசாரணை என்பவற்றை தவிர்ப்பதன் அடிப்படையிலான நல்லிணக்கம் ஆகும். நான்காவதாக மேற்படி உருவாகவுள்ள சிறிசேன, ரணில் அரசாங்கத்தைப் பதவியில் அமர்த்துவதற்கு ஏதுவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான நல்லிணக்கம் என இவை நான்கு வட்டங்களைக் கொண்டு அமைந்தன.

இதன்படி நல்லிணக்கத்திற்கான நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டதும் மேற்படி அனைத்து நல்லிணக்க சக்திகளும் தத்தம் நலன்களை முதற் கண் அடைந்த போதிலும் தமிழ் மக்களின் நலன்கள் எட்டப்படவில்லை. போர்க் குற்ற விசாரணை, சர்வதேச விசாரணை இல்லையென்பது இற்றை வரை நடைமுறையாக உள்ளன. இதனால் சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையேயான மேற்படி இலக்கைக் கொண்ட நல்லிணக்கம் என்பது இதுவரை அடையப்பட்டுள்ளது.

ஈழத் தமிழரின் பிரச்சினையின் பேராலும் அதனை மையமாகவும் கொண்டே மேற்படி அமெரிக்க, இந்திய, சிறிசேன அரச மட்ட நல்லுறவும் கூடவே ஐ.தே.க மற்றும் சுதந்திரக் கட்சி நல்லுறவும், சிறிசேன, ரணில் அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்லுறவும் அமைந்தன. இங்கு ஈழத் தமிழர் பிரச்சினைதான் மேற்படி அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு தரப்பினர்களினதும் நல்லுறவுக்கான அச்சாணியாகும்.

அந்த வகையில் ஈழத் தமிழரின் ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய இலங்கை ஆட்சியாளர்களுக்கும் வெளிநாட்டு அரசுகளுக்கும் அளித்ததன் மூலமே இந்த நல்லாட்சி அரசாங்கம் உருவாக முடிந்தது. ஆனால் ஈழத் தமிழரின் நலன்கள் எதுவும் இதுவரை அடையப்படவில்லை என்பது மட்டுமல்ல அவை சாத்தியமற்றவை என்பதற்கான நடைமுறைகளே காணப்படுகின்றன. ஆனால் மேற்படி நல்லிணக்கத்தோடு சம்மந்தப்பட்ட மற்றைய தரப்பினர் அனைவரும் தத்தமக்கான நலன்களை ஏறக்குறைய ஈட்டியுள்ளனர்.

அதே வேளை புதிய நல்லாட்சி அரசாங்கம் சீனாவை புறந் தள்ளுவதில் தற்காலிக நடைமுறைகளை ஆரம்பத்தில் கொண்டிருந்தாலும் தற்போது அது சீனாவுடன் வெளிப்படையான நல்லுறவை நல்லாட்சி அரசாங்கம் அறிவித்துள்ளது.

தற்போது இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேசியாவிற்கு மேற்கொண்ட அரச முறைப் பயணத்தின் போது அவருடன் கூடச் சென்றிருந்த வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் பின்வருமாறு கூறியுள்ளார்.

அதாவது ஹம்பான்தோட்ட துறைமுகத்தை இலங்கை அரசாங்கம் சீனாவிற்கு குத்தகைக்கு வழங்கி விட்டதா என்ற கேள்வியைப் பத்திரிகையாளர்கள் மேற்படி அமைச்சரிடம் கேட்ட போது அவர் அளித்த பதில் பின்வருமாறு அமைந்தது, ஹம்பான்தோட்ட துறைமுகம் தொடர்பாக சீனாவா இந்தியாவா என்பதல்ல முக்கியப் பிரச்சினை. அது இலங்கைக்கான பொருளாதார நலன்தான் எமது பிரச்சினை என்று கூறியதன் மூலம் சீனச் சார்பு நிலை தொடர்பான தன் நிலைப்பாட்டை அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் உலகிலுள்ள அனைத்து நாடுகளும் சேர்ந்து எம்முடன் செயற்படவல்ல ஒரு வெளியுறவுக் கொள்கையை தற்போதைய இலங்கை அரசாங்கம் உருவாக்கி உள்ளதாகவும் அதற்கு உலக நாடுகளிடம் வரவேற்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இப்பின்னணியில் இந்தியா இது விடயத்தில் கவலை கொள்ள இடமுண்டு. அக்கவலையைத் தவிர மேற்படி அனைத்து தரப்பினரும் நன்மை அடைந்திருக்கும் போது தமிழர்களுக்கான நலன்களும் நீதியும் கானல் நீராய் காட்சியளிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நல்லாட்சி அரசாங்கத்தில் பங்காளியாக்குவதன் மூலம் மேற்படி அனைத்து சக்திகளினதும் நலன்களுக்கான திட்டம் வகுக்கப்பட்டது. இங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் மற்றும் ஏனைய வெளிநாட்டு சக்திகளுக்கும் இடையில் நல்லிணக்கம் பெருமளவு இருந்தாலும் தமிழ் மக்களின் உரிமைகளுக்கும் நீதிக்குமான விடயத்தைப் பொறுத்து சிங்களத்திற்கும் தமிழிழனத்திற்கும் நல்லிணக்கம் ஏற்படவில்லை.

அதற்கான வாய்ப்பு இனி ஏற்படும் என எதிர்பார்ப்பதும் கடினம். சீனாவை புறந் தள்ளுவதான முதற் சுற்று நல்லிணக்கம் இந்தியா, அமெரிக்கா, இலங்கை அரசு என்பன ஆரம்பத்தில் இருந்தாலும் அதனை மீறி சீனாவுடன் வலுவான உறவு உருவாகத் தொடங்கியுள்ள நிலையில் பிராந்திய அர்த்தத்திலான நல்லிணக்கம் கேள்விக் குறியாகியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையேயான நல்லிணக்கம் தமிழ் மக்களுக்கு உரிய நன்மையைக் கொடுக்க முடியாது போனது மட்டுமன்றி இலங்கை அரசை

போர்க் குற்றம், சர்வதேச விசாரணை என்பதிலிருந்து மீட்கவும் உதவியுள்ளது. இறுதி ஆய்வின்படி பார்த்தால் நல்லிணக்க கோட்பாடு தமிழ் மக்களை பலியிட்டு ஏனையவர்களின் நலன்களை நிலைநாட்ட உதவியுள்ளதே தவிர தமிழ் மக்களுக்கான நீதியை வழங்குவதற்கான எத்தகைய அடிப்படையையும் கொண்டதாய் காட்சியளிக்கவில்லை.

காலம் காலமாக நூற்றாண்டுக் கணக்கில் அநீதி இழைக்கப்பட்ட துயருறும் ஈழத் தமிழர்களுக்கு அடுத்து கதியென்ன என்பதே பிரதான கேள்வியாகும். சமூக பொறுப்புணர்வும் அர்ப்பணிப்பும் இன்றி தமிழ் மக்களுக்கான நலன்களை முன்னெடுப்பது பற்றி சிந்திக்க முடியாது. இந்த நிலையில் அநாதரவாக காணப்படும் தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கான வீதி வரைபடத்தை தமிழ்த் தரப்பில் யாரும் கொண்டிருக்கவில்லை என்பதும் துயரகரமான உண்மையாகும்.

உள்நாட்டில் இருக்கும் தமிழ்த் தலைவர்கள் எவரிடமும் தமிழ் மக்களின் நலன்களுக்கான வீதி வரை படம் எதுவும் இல்லையென்பதுடன் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்த் தலைவர்களிடமும் கூடவே அத்தகைய ஒரு வீதி வரைபடம் இருப்பதாகத் தெரியவில்லை.

எல்லாவித நல்லிணக்கங்களும் அவரவர் பங்கிற்கு பயன் அளித்துள்ளனவே தவிர தமிழ் மக்களுக்கு எவ்வித நலனும் ஏற்படவில்லை. இது விடயத்தில் பொறுப்புணர்வும் அர்ப்பணிப்பும் கொண்ட யாராவது உண்டா என்ற கேள்வியைத் தவிர வேறு எதனையும் இங்கு கேட்க முடியவில்லை. ஒருவருடைய செயல் யாருக்கு சேவை செய்கிறது என்பதிலிருந்துதான் அவர் யாருடைய நண்பன் அல்லது யாருடைய எதிரி என்பது அடங்கியுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: