சமஷ்டி ஆட்சிக்கு ஒருபோதும் இடம் கொடுக்கப்போவதில்லையென்று முடிவெடுத்து விட்டார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜெயலலிதாவுக்கு எதிராக சில விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் இருந்தது.
சிறைக்கு கூட சென்று வந்திருந்தார். ஆனால் தமிழக மக்கள் அவற்றை எல்லாம் கருத்தில் எடுக்கவில்லை.
ஜெயலலிதா விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்துக்களை குறிப்பிட்டவர் என்ற விமர்சனம் உள்ளது.
ஆனால் ஜெயலலிதா தமிழ்மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என தமிழக சட்ட சபையில் சட்டஉறுப்பினர்களை இணைத்து தீர்மானாங்களை நிறைவேற்றினார்.
ஆனால் இங்கு உள்ளவர்கள் அது தொடர்பாக சிந்திப்பதில்லை. இந்த நாட்டில் ஒற்றையாட்சி தான் இருக்கும். ஒற்றையாட்சிக்குள் தான் எந்த தீர்வையும் பெறமுடியும்.
சமஸ்டி என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை என்று ஜனாதிபதி, பிரதம மந்திரி இன்னும் பல அமைச்சர்கள் தெளிவாக கூறிவிட்டார்கள் என இதன் போது சுட்டிக்காட்டினார்.
மேலும், சொல்லப்போனால் இவை தொடர்பில் அரசியல் சாசன சபையில் சம்மந்தனோ அல்லது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமந்திரனோ எதுவும் பேசவில்லை என்பதை அந்த 21 பேர் கொண்ட குழுவில் இருக்கக் கூடியவர்கள் பத்திரிகையுடன் பேசும் போது குறிப்பிட்டுள்ளார்கள் என சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறியமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com