விடுதலைப் புலிகள் இல்லாமையே சில கூட்டுறவுச் சங்கங்களின் முறைகேடுகளுக்குக் காரணம்: ஐங்கரநேசன்

விடுதலைப் புலிகளின் காலப் பகுதியில் கூட்டுறவுத் துறை சிறப்பாகத் தானிருந்தது. அந்தக் காலகட்டத்தில் கட்டுப்பாடு, பயமிருந்தது. தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்பது எல்லோருக்குமே தெரிந்திருந்தது. ஆனால், இன்று அவ்வாறானதொரு நிலைமை இல்லாமலிருப்பதும் சில கூட்டுறவுச் சங்கங்களில் முறைகேடுகள் நடப்பதற்குக் காரணம் என வடக்கு மாகாண விவசாய, கால்நடை, கூட்டுறவு அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்..

யாழ். ஏழாலை மேற்கு ஸ்ரீவிநாயகர் ஐக்கிய நாணய சங்கத்தின் கூட்டுறவாளர் தின விழா இன்று (24) பிற்பகல் ஏழாலை மேற்கு முத்தமிழ் மன்ற கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் கொடிகட்டிப் பறந்ததொரு காலமிருந்தது.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமராகவும், இந்தக் கூட்டுறவு இயக்கத்தை வளர்ப்பதற்குக் காரணமாகவும் இருந்த என்.என்.பெரேரா நிதியமைச்சராகவுமிருந்த காலப் பகுதியில் கூட்டுறவுக்குக் கிடைத்த வருமானமும், பெருமையும், புகழும் அதிகம்.

பொருளாதாரக் கொள்கை பலம் மிக்கதாகவிருந்தது. உள்நாட்டு உற்பத்திகளுக்கான சரியான சந்தை வாய்ப்புப் பெற்றுத் தரப்பட்டது. ஆகவே, அவர்களுடைய கொள்கை மூலம் விவசாய உற்பத்திகளைக் கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக விற்பனை செய்யக் கூடியதாகவிருந்தது.

ஆனால், இன்று இலங்கை அரசாங்கம் விரும்பினாலும் கூட எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு உற்பத்திகள் இலங்கைக்குள் நுழைவதைத் தடை செய்ய முடியாது. இதுவே திறந்த பொருளாதாரக் கொள்கை அல்லது உலக மயமாதலின் நியதியாகவுள்ளது.

கூட்டுறவு இயக்கம் எப்போதும் தோற்றுப் போகாது. ஆகவே, கூட்டுறவாளர்கள் எப்போதும் மனத்தைச் சோரவிட வேண்டிய அவசியமில்லை.

நான் அமைச்சுப் பொறுப்பெடுத்து ஒன்றரை வருடங்களின் பின்னர் முதலமைச்சருக்குள்ள வேலைப்பளு காரணமாக அவரால் கூட்டுறவுத் துறையைச் சரிவரக் கவனிக்க முடியாத காரணத்தால் எனக்குக் கூட்டுறவு அமைச்சுப் பதவியை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

அதனை தடுப்பதற்காகவே அறிந்த பல பிரமுகர்களும், பெரியவர்களும் அது என் வசமாகி விடக் கூடாது என்பதற்காகக் கடுமையாக உழைத்தார்கள்.

காரணம் தங்களுடைய அரசியல் தலையீடுகள் கூட்டுறவுத் துறைக்குள்ளிருப்பதற்கு ஐங்கரநேசன் இடையூறாகவிருப்பார் என்பது அவர்களுடைய நிலைப்பாடு எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

குறித்த விழாவில் மூத்த மற்றும் சிறந்த கூட்டுறவாளர் கெளரவிப்பு இடம்பெற்றதுடன், சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் வே.சிவராஜா தலைமையில் “குடும்பங்களின் இனிமைக்குத் தொலைக்காட்சி தொல்லையா? இல்லையா?” எனும் தலைப்பிலான சிறப்புப் பட்டி மன்றமும் இடம்பெற்றது.

இந்த விழாவில் வடமாகாணக் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மதுமதி வசந்தகுமார், வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன்,யாழ்.மாவட்டக் கூட்டுறவுச் சபைத் தலைவர் தி.சுந்தரலிங்கம், யாழ்.மாவட்டக் கூட்டுறவுச் சப்பைச் செயலாளர் வேதவல்லி ஆகியோரும் விருந்தினர்களாகக் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

-http://www.tamilwin.com

TAGS: