பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப தவறும் அரசாங்கம்!

mullivaikkal-300x173நாட்டின் நீதித்துறை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த கால யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் நீதித்துறை தொடர்பில் முழுமையான நம்பிக்கையற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.

கடந்த காலங்களில் நீதித்துறை தொடர்பில் காணப்பட்ட நிலைமைகளே பாதிக்கப்பட்ட மக்களை இந்தளவிற்கு அதிருப்தியுறும் நிலைமைக்கு கொண்டு சென்றன.

குறிப்பாக யுத்தத்தினால் பாரிய மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் பாதிக்கப்பட்ட மக்கள் சர்வதேச தலையீடு இன்றி தமக்கு நீதி நிலைநாட்டப்படாது என்று வலியுறுத்த ஆரம்பித்தனர்.

விசேடமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையிலும் சர்வதேச நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்கறிஞர்கள், பங்கேற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீதித்துறையில் அண்மைக்காலமாக இடம்பெறும் சில விடயங்களைப் பார்க்கும் போது மக்கள் மேலும் தாம் நம்பிக்கை இழப்பதாக கருதுகின்றனர்.

இந்நிலையில் நீதித்துறை மீதான நம்பிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அண்மைக்கால நிலைமை குறித்து கவலை அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பில் நீதித்துறையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னரும் வருகின்ற தீர்ப்புக்கள் தொடர்பில் கவலையடைந்துள்ளோம். சர்வதேசத்திற்கு முன்பாக இந்த தீர்ப்புகளை சமர்ப்பித்துள்ளோம். சர்வ தேசத்தின் பங்களிப்பு நீதித்துறையில் அவசியம் என்பதையும் இவை வலியுறுத்தி நிற்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கமும் இணைந்து அனுசரணை வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்று உள்ளது.

அதில் சர்வதேச சட்டவியலாளர்கள், நீதிபதிகள், சட்டத்தரணிகள் போர்க்குற்றம் தொடர்பிலான விசாரணையில் ஆஜராக வேண்டும் என்று கூறிய போது அதனை இலங்கை ஏற்றுக்கொண்டது.

ஆனால் அது இன்று பின்னடிக்கப்பட்டுக் கொண்டுள்ளது என்றும் மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலத்தில் இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட குழுக்களும் ஆயுதங்களை பாவித்து எங்களது தலைவர்களை கொலை செய்த போதிலும் எமது மக்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்ட போதிலும் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நீதித்துறையின் மேல் நாங்கள் நம்பிக்கையிழக்கும் நிலையையே ஏற்படுத்தியது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, எங்கள் மக்களுடைய பலம் ஜனநாயக ரீதியாக வழங்கிய தீர்ப்புகள் என்பன சர்வதேசம் வரைக்கும் அங்கீகரிக்கப்படும் தீர்ப்புகளாக இந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடியளவிற்கு வழி செய்தன.

போர் இல்லாமல் சதியில்லாமல் ஆட்சி மாற்றப்படுகின்ற அளவுக்கு தமிழ் மக்கள் தீர்ப்பளித்துள்ளனர் என்பதனையும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கோடிட்டுக் காட்டியுள்ளார்.

அதாவது அண்மைக்காலமாக வெளிவந்த சில நீதித்துறை சார்ந்த முடிவுகள் மக்களை மேலும் நம்பிக்கையிழக்கச் செய்திருப்பதாகவும் எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் செயற்பாட்டில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழர் தரப்பு தெரிவிக்கின்றது.

உண்மையில் நீதித்துறையில் கடந்தகாலங்களில் காணப்பட்ட நிலைமைகள் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பாரிய அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தன.

குறிப்பாக ஊடகவியலாளர் படுகொலை மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்களுக்கு இதுவரை நீதி நிலைநாட்டப்படவில்லை.

இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட காணாமல் போனோர் தொடர்பிலும் இதுவரை நீதி நிலைநாட்டப்படவில்லை.

கடந்தகால மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமி்க்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்களும் நீதியை நிலைநாட்டும் ஸ்தானம்வரை செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றது.

எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு சர்வதேசத்தின் பங்களிப்புடன் கூடிய நீதிப்பொறிமுறை செயற்பாட்டின் ஊடாகவே நீதி கிடைக்கும் என நம்புவதில் நியாயம் இருக்கின்றது.

எனவே, பதவியில் இருக்கின்ற அரசாங்கமானது இந்த நிலைமை குறித்து ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியமாகும்.

விசேடமாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஏன் சர்வதேசத்தின் பங்களிப்புடன் கூடிய நீதிப்பொறிமுறையை எதிர்பார்க்கின்றனர் என்பதை அரசாங்கம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்த விடயத்தில் மக்கள் பக்கம் இருக்கின்ற நியாயத்தன்மை குறித்து அரசாங்கம் ஆராய வேண்டும்.

கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான முறையில் நீதி நிலைநாட்டப்பட்டிருந்தால் அந்த மக்கள் ஒருபோதும் சர்வதேசத்தை நாடி செல்லமாட்டார்கள் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போதைய நிலைமையில் யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றங்கள் என்பன தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை விரைவாக நிலைநாட்ட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு காணப்படுகின்றது.

இந்த விடயத்தில் சர்வதேசமும் பாதிக்கப்பட்ட தரப்பும் ஐக்கிய நாடுகள் சபையும் நீதிப்பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், அரசாங்கமோ, எக்காரணம் கொண்டும் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பை அனுமதிக்க முடியாது என கூறிவருகிறது.

ஆனால், அண்மைக்காலமாக இடம்பெறும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என்பது நிரூபணமாவதாக தமிழர் தரப்பும் தெரிவிக்கிறது.

அதுமட்டுமன்றி கடந்த 2015ம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையிலும் இலங்கையில் முன்னெடுக்கப்படும் நீதி வழங்கும் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விசேடமாக பொதுநலவாய சர்வதேச நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிப்பொறிமுறையில் இடம்பெற வேண்டுமென அந்தப் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அந்தப் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கியிருந்தது. எனவே, அந்தப் பிரேரணையை அமுலாக்கும் சந்தர்ப்பத்தில் சர்வதேச நீதிபதிகள் விவகாரத்திற்கு பதிலளிக்க வேண்டியது அவசியமாகும்.

குறிப்பாக நீதித்துறை விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தியடையும் வகையிலான நம்பகரமான பொறிமுறையை முன்னெடுக்க வேண்டுமானால் சர்வதேசத்தின் பங்களிப்பு இருக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் விரும்புகின்றனர்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து விரைவில் தீர்மானமொன்றை எடுக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34வது கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.

அதன்போது இந்த சர்வதேச நீதிபதிகள் விவகாரத்திற்கும் அரசாங்கம் பதிலளிக்க வேண்டியுள்ளது.

எவ்வாறெனினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பகரமான முறையில் நீதியை நிலைநாட்ட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

மக்கள் நம்பிக்கை வைக்காத மற்றும் அதிருப்தியடையும் வகையிலான நீதிப்பொறிமுறையை முன்னெடுப்பதில் எவ்விதமான அர்த்தமும் இல்லை என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்கள் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையில் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர். யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் நிறைவடையப் போகின்ற நிலைமையிலும் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படவில்லை.

விசேடமாக இருபதாயிரத்திற்கும் மேற்பட்டதாகக் கூறப்படும் காணாமல்போனோர் தொடர்பில் பாதிக்கப்பட்டோருக்கு இதுவரை நீதி நிலைநாட்டப்படவில்லை.

எனவே, மக்கள் பாரிய அதிருப்தியுடனும் நம்பிக்கையற்ற தன்மையுடனுமேயே இருக்கின்றனர். அவர்கள் நீதித்துறை மீது முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டுமானால் அரசாங்கம் அந்த உத்தரவாதத்தை மக்களுக்கு வழங்க வேண்டும்.

அந்த நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இல்லாவிடின் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் மக்களின் நம்பிக்கையைப் பெறுவது கடினமாகிவிடும்.

பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பாமல் எவ்விதமான பொறிமுறையையும் முன்னெடுப்பதில் அர்த்தமில்லையென ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைனும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்.

எனவே, இந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் விடயத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

-http://www.tamilwin.com

TAGS: