இந்த நாட்டு அரசாங்கத்திடம் இருந்து நீதியை எதிர்பார்க்கமுடியாது –கருணாகரம்

karunakaranநாங்கள் கொண்டுவந்த நல்லாட்சி அரசின் நீதியமைச்சராக இருந்துகொண்டு, அம்பிட்டிய சுமனரத்ன தேரர் போன்றவர்களுக்கு ஆதரவளிக்கும் நீதியமைச்சரிடமிருந்து நாங்கள் நீதியை எதிர்பார்க்கலாமா? என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகமும் இணைந்து நடாத்திய முன்பள்ளி ஆசிரியர்களின் வினைத்திறன் கண்காட்சி நேற்று களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

பிள்ளைகளது நடைப்பயணம் ஆரம்பித்தவுடனேயே அவர்களுக்கு கல்வியை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகின்றது. அதனால் பிள்ளைகளை இரண்டரை வயதிலேயே பாலர் பாடசாலைகளில் சேர்த்து விடுகின்றோம்.

குழந்தைகள் பாடசாலைக்கு வந்தவுடன் அவர்களுக்கு மாதா, பிதா,குரு,தெய்வம் எல்லாமே ஆசிரியர்கள் தான். நீங்கள் இந்த பணியகத்தாலும் மாகாண சபையாலும் நன்றாக கவனிக்கப்படுவதில்லை என்பதை நாங்கள் நன்கறிவோம்.

பாலர் பாடசாலை ஆசிரியர்களின் சம்பள உயர்வு விடயத்தில் நாங்கள் இன்னும் உறுதியாக செயற்பட்டு வருகின்றோம். உங்கள் துன்பங்கள் அனைத்தும் எமக்கு நன்கு தெரியும்.

எமது பகுதிகளில் கல்வியின் நிலை எவ்வளவு பின்தங்கியிருக்கின்றது என்பது கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

எமது தமிழ்ச் சமூகம் ஒரு காலத்தில் கல்வியில் கோலோச்சிய காலம் மாறி இன்று நாங்கள் கல்வியில் பின்னடைந்திருக்கின்றோம்.

கடந்த 2015ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 7611பேர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதியிருந்தார்கள்.

ஐந்து பாடங்களுக்கு மேல் சித்தியடைந்தவர்களில் 77வீதமானவர்களாகும். எமது சகோதர இனமான முஸ்லிம் மாணவர்களில் 23 சதவீதமானவர்கள் சித்தியடைந்திருக்கின்றார்கள்.

பிள்ளைகளை ஆரம்பத்திலேயே நற்பழக்கவழக்கங்களை போதித்து ஒழுக்கமானவர்களாகவும் கல்வியில் ஆர்வமுள்ளவர்களாகவும் நற்பிரஜைகளாகவும் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு பாலர் பாடசாலை ஆசிரியர்களின் கைகளில் தங்கியிருக்கின்றது. அதை நீங்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.

நல்லாட்சி அரசின் நீதியமைச்சராக இருந்துகொண்டு அம்பிட்டிய சுமனரத்ன தேரர் போன்றவர்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு நீதியமைச்சரிடமிருந்து நாங்கள் நீதியை எதிர்பார்க்கலாமா?

அல்லது இந்த நாட்டின் அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்களாகிய நாங்கள் நீதியை எதிர்பார்க்கலாமா? அந்த நிலை மாறிக்கொண்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் குறுநில மன்னர்கள் போல செயலாற்றும் அமைச்சர்கள் மகிந்தவின் ஆட்சிக்காலத்திலும் அவரோடு ஒட்டிக்கொண்டிருந்தனர்.

நல்லாட்சி அரசாங்கத்திலும் ஒட்டிக்கொண்டு இருந்துகொண்டு அந்த ஆட்சியில் செய்ததை இந்த ஆட்சியிலும் செய்துகொண்டு நல்லாட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்த முனைகின்றனர். என மேலும் தெரிவித்தார்

குறித்த நிகழ்விலே கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் , ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

-http://www.tamilwin.com

TAGS: