அடங்கிப் போயிருந்த ஓர் விடயத்தினை மீண்டும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பேச அது தென்னிலங்கை தரப்பில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால், அவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவராக இருப்பார் என தெரிவித்த வார்த்தைகளே அவை. இதுவே பல தென்னிலங்கை அரசியல் வாதிகளால் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
உண்மையில் பிரபாகரன் இருக்கும் போது தமிழ் மக்களின் வாழ்வில் பிரச்சினைகள் இருக்கவில்லை என்பதும் வடக்கு வாழ் மக்களின் ஓர் கருத்து என கூறப்படுகின்றது.
அதே வகையில் விஜயகலாவின் குறித்த கருத்து தொடர்பில் அரசு தரப்பில் பெரிதாக விமர்சனங்கள் எழுப்பப்பட வில்லை, ஆனால் அரசுக்கு எதிரானவர்கள் பலவிதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள்.
அதேபோன்று பிரபாகரன் மரணிக்கவில்லை என பாராளுமன்றத்தில் சரத் பொன்சேகா இவ்வருட ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார்.
பழ. நெடுமாறன் உட்பட பலரும் கூட இவ்வாறான ஒரு கருத்தை 2016ஆம் ஆண்டு ஆரம்பப்பகுதிகளில் தெரிவித்திருந்தார்கள்.
மேலும், “யுத்தத்தின் இறுதி தருணங்களில் நடந்த உண்மைகளை கண்டறியும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளும்.
இறுதிக்கட்டத்தில் பிரபாகரன் உயிருடன் இருந்தாரா? போர் முறைமைக்கு முரணான வகையில் அவர் கொல்லப்பட்டாரா? என்பது கண்டறியப்படும்”.
இவை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன 2016ஆம் வருட ஆரம்ப பகுதிகளில் தெரிவித்த வார்த்தைகள். ஆனால் இன்றுடன் வருடமும் நிறைவுக்கு வந்து விட்டது.
என்றாலும் கூட அதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளையும் செயற்பாடுகளில் இதுவரையிலும் எடுக்கப்பட்ட வில்லை என்பதே உண்மை.
அதே போன்று பசில் ராஜபக்ச கூட அண்மையில் “கடந்த அரசாங்கம் பிரபாகரனின் மரணச் சான்றிதழ் வழங்க வில்லை ஆனால் இந்த அரசாங்கம் அதனை செய்யலாம்” என கருத்து தெரிவித்திருந்தார்.
இவ்வாறாக பலரும் பல விதமான கருத்துகளை முன்வைத்து வருகின்றார்களே தவிர இது வரையில் அந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டதாக தெரியவில்லை.
இதற்கான காரணம் என்ன? அரசு தரப்பு பிரபாகரனின் மரணத்தை உறுதி செய்து விட்டு விடுமானால் இப்போதைக்கு இவ்வாறான கருத்துகளை எவரும் வெளிப்படுத்த மாட்டார்களே. ஏன் அரசு அதனை செய்ய தயங்குகின்றது என்பது ஓர் கேள்வியே.
இப்போதும் விடுதலைப்புலிகளின் தலைவர் குறித்து விஜயகலா பேசியதை விமர்சனப்படுத்துகின்றார்களே தவிர அந்த கருத்துக்கு அடித்தளமாக இருந்த விடயம்., அதாவது பிரபாகரனின் மரணம் உண்மையா? பொய்யா என்பது தொடர்பில் வெளிப்படையாக அரசு எதனையும் கூறவில்லை அதனை கூறியிருந்தால் இனிமேல் இவ்வாறான கருத்துகள் எழுப்பப்படாது என்றே கூறப்படுகின்றது.
இவற்றினை பார்க்கும் போது இன்று வரை அரசு பிரபாகரனின் மரணத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்பது மட்டுமே தெளிவாகின்றது. இல்லாவிடின் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்திருக்க முடியும்.
மற்றொரு வகையில் தென்னிலங்கை அரசியல் மாற்றங்களுக்கு விடுதலைப்புலிகளும் அதன் தலைவரின் பங்களிப்பும் மிக அவசியம் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.
யுத்தம் நிறைவுக்கு வந்து ஆண்டுகள் மட்டுமே கடந்து கொள்கின்றதே தவிர சர்ச்சைகளுக்கு மட்டும் தீர்வு காண எந்த அரசும் முன்வரவில்லை.
இவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது அரசும் கூட பிரபாகரனின் மரணத்தை ஏற்றுக் கொள்ளாமல் தடுமாறிக்கொண்டு இருக்கின்றது என்றே தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தகாலத்தில் களத்தில் இருந்தவர்களாலும், அப்போது ஆட்சி நடத்தியவர்களாலும் மட்டுமே இதற்கான விடையை கொடுக்க முடியும். அதுவரையில் வருடங்கள் மாறினாலும் ஆட்சிகள் மாறினாலும் விமர்சனங்களும் முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துக்களும் மட்டுமே வெளிவரும்.
ஆகமொத்தம் அரசியல் இலாபங்களுக்காக விடுதலைப்புலிகளின் தலைவர் பெயர் உச்சரிக்கப்பட்டு வருகின்றது என்பது மட்டும் ஒரு வகையில் உண்மை என்றே தென்னிலங்கை அரசியல் புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.
2017ஆம் வருடம் சரி இதற்கான பதில் கிடைக்குமா, பிரபாகரனுக்கு உண்மையில் என்ன நடந்தது? இரகசியம் உடைக்கப்படுமா என்பதும் ஒரு இப்போதைக்கு மிகப்பெரிய கேள்வி.
-http://www.tamilwin.com