சிறிலங்கா அரசின் அரசியல் தீர்வு என்பது மாயைதான் என்ற உண்மை 2017 ஆம் ஆண்டில் தெரிய வரும். இது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குச் சாதகமாக நிலையினை உருவாக்கித் தரக் கூடியது என்ற நம்பிக்கையுடன் எமது பணிகளை முன்னெடுத்துச் செல்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்தார்.
மலர்ந்திருக்கும் 2017 இல் ஈழத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளப் போகும் சவால்கள் மற்றும் சாதகங்கள் என்பன பற்றி புத்தாண்டினை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
தமிழ் மக்கள் அனைவருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் நான் மன நிறைவடைகிறேன்.
மலரும் 2017 ஆம் ஆண்டினை ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் தமிழ் மக்களுக்குச் சாதகமான வாய்ப்புக்களை உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கையுடன் வரவேற்போமாக.
கடந்து சென்ற 2016 ஆம் ஆண்டு அனைத்துலக ஒழுங்கில் ஏற்படக் கூடிய சில மாற்றங்களைக் கோடு காட்டிச் சென்றுள்ளது.
மேற்குலக நாடுகளில் மக்கள் உணர்வுகளைத் தட்டிவிடும் புதியதொரு தேசியவாதம் வளர்ச்சி அடைந்து வருவதனைப் பிரித்தானிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்குச் சாதகமாக வாக்களித்தமையும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலும் வெளிப்படுத்தி நிற்கின்றன.
உலக விவகாரங்களை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் மட்டும், தான் நினைத்தவாறு இனியும் கையாள முடியாது என்பதை சிரியப் போர் சுட்டிக் காட்டியுள்ளது.
உலக அரசியல் ஒழுங்கு ஒற்றை மைய அரசியல் ஒழுங்கிலிருந்து விலகி பல்மைய அரசியல் ஒழுங்கை நோக்கி விரைவாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதும் புலப்படுகிறது.
இந்தப் பல்மைய உலக ஒழுங்கு தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஒற்றை மைய உலக ஒழுங்கை விடச் சாதகமான வாய்ப்புக்களைத் தரக் கூடியதென நாம் கொள்ளலாம். இது குறித்து நாம் விரிவாக ஆய்வு செய்ய வேண்டியதும் அவசியம்.
2017 ஆம் ஆண்டு ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு சவால் மிக்க ஆண்டாக அமையும் என்றே நாம் கருதுகிறோம்.
சிறிலங்கா அதிபர் சிரிசேன புதிய அமெரிக்க அதிபராகத் தெரிவாகியுள்ள டொனால்ட் டிறம்ப் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் சிறிலங்கா அரசு மீது சுமத்தப்பட்டிருக்கும் போர்க் குற்றச்சாட்டுகளைக் கைவிடுமாறு கோரியிருக்கிறார்.
இது நல்லாட்சி என்று தம்மை அழைத்துக் கொள்ளும் தற்போதைய சிறிலங்கா அரசானது நீதி குறித்தும் அறம் குறித்தும் சிறிதேனும் அக்கறையற்ற சிங்கள பௌத்த பேரினவாத அரசாகவே இருக்கிறது என்பதனைத் தெளிவாக்கியிருக்கிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் தீர்மானத்தில் சிறிலங்கா எடுத்துக் கொண்ட பொறுப்பு காலத்தை இழுத்தடித்து நீதியைக் குழி தோண்டிப் புதைக்கும் உள்நோக்கம் கொண்டது என்பதனை சிறிலங்கா அரசின் செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.
இது நீதி கோரும் முயற்சிக்கு சிறிலங்கா அரசு விடுக்கும் சூழ்ச்சியுடன் கூடிய சவாலாகும். இதனை முறியடிக்க வேண்டியது 2017 இல் நம் முன்னால் உள்ள முக்கிய கடமையாகும்.
2017 இல் நாம் எதிர் கொள்ளும் அடுத்த சவால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் எதனையும் பூர்த்தி செய்யாத அரசியல் ஏற்பாடுகளைக் கொண்ட புதிய அரசியலமைப்புக்கு தமிழ் மக்களின் சம்மதத்தைப் பெறும் சிங்களத்தின் சூழ்ச்சித் திட்டத்தை முறியடிக்க வேண்டியதாகும்.
சிறிலங்கா தனது பாராளுமன்றத்துக்கு முன்வைக்கவுள்ள திட்டத்தின்படி தமிழ் மக்கள் ஒரு தேசம் என்றோ தேசிய இனம் என்றோ இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகம் என்பதோ அல்லது தமிழ் மக்கள் தேசிய சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதோ அங்கீகரிக்கப்படவில்லை. இதன்படி வடக்கு கிழக்கு இணைக்கப்படப் போவதில்லை.
மத்தியில் குவிக்கப்பட்ட அதிகாரங்கள் கவர்ச்சியான வார்த்தை ஜாலங்களுடன் மாகாணங்களுக்குக் கிள்ளித் தெளிக்கப்படவுள்ளன.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை சிறிதேனும் எட்ட முடியாத ஒரு திட்டமாகத்தான் புதிய திட்டம் அமையப் போகிறது எனத் தெரிகிறது.
புதிய அரசிலமைப்பைத் தமிழ் மக்களின் சம்மதத்துடன் நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக தோற்கடிக்க சிங்களம் முயல்கிறது.
நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படக் கூடிய புதிய அரசியலமைப்பின் மீதான வாக்கெடுப்புக்கு தமிழ் மக்களின் ஆதரவாக வாக்குகளைப் பெறும் முயற்சி சூழ்ச்சித்தனத்துடன் மேற்கொள்ளப்படக் கூடியதொன்றாகும்.
இவ்வாக்களிப்பில் தமிழர் தேசத்துக்குக் இருக்கக்கூடிய சவால் சிங்கள அரசின் சூழ்ச்சியினை மறைத்து புதிய அரசியலமைப்பினை தமிழர்களுக்கு நன்மை தரக் கூடிய அரசியலமைப்பு என எமது தமிழர் தலைவர் சிலரும் கூறக் கூடிய ஆபத்து இருப்பதாகும்.
மகிந்த ராஜபக்சவும் அவரது கூட்டாளிகளும் இப்புதிய அரசியலமைப்பை எதிர்ப்பதாகவும் நாம் அதனை முறியடிக்க வேண்டுமெனவும் இத்தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் எடுத்துக் கூறக் கூடும்.
இப்புதிய அரசியலமைப்புத் திட்டத்துக்கு தமிழ் மக்களின் சம்மதம் உண்டு எனக் காட்டும் சூழ்ச்சி நோக்கத்தைச் சிங்களம் கொண்டுள்ளது. இதற்குத் தமிழ்த் தலைவர்கள் துணை போகாது தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பும் புதிய ஆண்டின் போது தமிழ் மக்கள் கையிலுள்ளது.
தமிழ் மக்கள் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக வாக்களிப்பார்களாயின் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது மிகுந்த சவாலுக்குரியதாகி விடும்.
வடக்கு – கிழக்கு நிரந்தரமாகவே பிரிந்து விடும். தமிழர் தேசம் சிங்களத்தின் கட்டமைப்பு ரீதியான இன அழிப்புக்குள் சிக்கி மெல்ல மெல்ல அடையாளம் இழந்து அழிந்து போகும் நிலை காலப் போக்கில் உருவாகும் ஆபத்து ஏற்படும்.
தமிழ் மக்கள் இவ்விடயத்தில் மிகவும் விழிப்புடன் இருந்து சிங்களத்தின் சூழ்ச்சியினை முறியடிக்க வேண்டும். புதிய அரசியலமைப்பை முன்வைத்து தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் சிங்களத்தின் சூழ்ச்சியை முறியடிக்கும் தீர்க்கமான பாத்திரம் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு உள்ளது. அதனை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
2017 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்கக் கூடிய சூழ்ச்சிகரமான திட்டங்களை முறியடிப்பதற்கான செயற்பாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீவிரமாக ஈடுபடவுள்ளது.
அனைத்துலக சமூகத்தின் முன் நீதி கோரும் நடைமுறையைப் பலப்படுத்தவும் சிறிலங்கா அரசாங்கம் புதிய அரசியலமைப்பின் ஊடாக மேற்கோள்ளக் கூடிய சூழ்ச்சியை அம்பலப்படுத்துவதற்கும் உரிய செயற்பாடுகளிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கவனம் செலுத்தும்.
எமது இந்த முயற்சிக்கு உலகளாவிய அளவில் தமிழ் மக்களின் ஆதரவை நாம் கோரி நிற்கிறோம்.
தம்மை நல்லாட்சி எனக் கூறிக் கொள்ளும் தற்போதைய சிறிலங்கா அரசுக்கும் முந்திய ராஜபக்ச அரசுக்கும் இடையே தமிழீழ மக்களின் அரசியல் உரிமைகள் குறித்த விடயத்தில் அடிப்படை வேறுபாடுகள் எதுவும் இல்லை.
அவர்கள் நேரடியாகவே உரிமைகள் தர முடியாது என்பார்கள். இவர்கள் இனவாதிகளின் எதிர்ப்பினைக் காரணம் காட்டி தர முடியாது என்பார்கள். ஆனால் இவர்களின் அரசாங்கமோ இனவாதிகளால் நிரம்பிக் கிடக்கிறது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை நல்லாட்சி என்பதும் சிறிலங்கா அரசு தரும் என எதிர்பார்க்கும் அரசியல்தீர்வு என்பதும் மாயமான்கள்தான் என்ற உண்மை 2017 ஆம் ஆண்டில் அம்மணமாகும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.
இது தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குச் சாதகமான நிலையினை உருவாக்கித் தரக் கூடியது என்ற நம்பிக்கையுடன் எமது பணிகளை முன்னெடுத்துச் செல்வோமாக எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com