குறைந்த செலவில் செயற்கை சுவாச இயந்திரமொன்றை இலங்கை மருத்துவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
இந்த செயற்கை சுவாச இயந்திரத்தை இலகுவில் எடுத்துச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுராதபுரம் போதான வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்களில் ஒருவரான டொக்டர் துலான் சமரவீரவே இவ்வாறு நவீன சுவாச இயந்திரத்தை கண்டு பிடித்துள்ளார்.
தனது கண்டு பிடிப்பு பற்றி கூறுகையில்…
வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவருக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றம் செய்யும் வரையில் இந்த புதிய கருவியின் மூலம் சுவாசம் வழங்கப்பட முடியும்.
வைத்தியசாலை ஒன்றிலிருந்து மற்றுமொரு வைத்தியசாலைக்கு நோயாளியை காவிச் செல்லும் போது நோயாளர் காவு வாகனத்தின் பற்றரியில் இந்த இயந்திரத்தைப் பொருத்தி செயற்கை சுவாசத்தை நோயாளிகளுக்கு வழங்க முடியும்.
தற்போது பலூன் போன்ற ஓர் இயந்திரத்தை நோயாளர் காவு வண்டியில் செல்லும் மருத்துவர் அல்லது தாதி அழுத்தி அழுத்தி சுவாசத்தை வழங்க வேண்டியிருக்கின்றது.
4-5 மணித்தியால பயணம் என்றால் இவ்வாறு தொடர்ச்சியாக அழுத்தி அழுத்தி செயற்கை சுவாசம் வழங்குவது சிரமமான காரியமாகும்.
பிரதான வைத்தியசாலையில் செயற்கை சுவாச இயந்திரங்கள் காணப்படுகின்றன. எனினும் இது போன்று இடம் நகர்த்த கூடிய இயந்திரங்கள் கிடையாது.
மேலும் செயற்கை சுவாச இந்திரமொன்றை கொள்வனவு செய்ய 8 முதல் 17 லட்சம் வரையில் செலவாகும்.
நான் உருவாக்கியுள்ள இந்த இயந்திரத்திற்கு வெறும் 15000 ரூபா மட்டுமே செலவாகியுள்ளது. எனவே இந்த இயந்திரத்தை உருவாக்கி வைத்தியசாலைளுக்கும் நோயாளர் காவு வண்டிகளுக்கும் வழங்கப்பட முடியும்.
இந்த இயந்திரத்தை உருவாக்க அரசாங்கத்தின் தலையீட்டுடன் சுகாதார அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நான் கோருகின்றேன்.
நான் கண்டுபிடித்த தொழில்நுட்பம் மற்றும் ஏனைய உதவிகளை வழங்க தயாராக இருக்கின்றேன்.
கைகளினால் இயக்கக்கூடிய செயற்கை சுவாச இயந்திரத்தை பயன்படுத்துவது மிகவும் சிரமமானது என்பதனை அனுபவ ரீதியாக அறிந்து கொண்டதனால் இவ்வாறு, புதிய இயந்திரமொன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன் என டொக்டர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com