திருகோணமலை, சம்பூரில் அனல் மின்நிலையம் ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் நேற்று இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் கைச்சாத்திடப்படவிருந்த நிலையில், இறுதி நேரத்தில் அது இலங்கை அரசால் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
ஏற்கனவே அமைச்சரவையின் விசேட அனுமதியுடன் மின்நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திட ஏற்பாடாகியிருந்தது. இதற்காக இந்தியாவின் மின்சக்தி எரிபொருள் அமைச்சரும் நேற்று இலங்கை வர ஏற்பாடாகியிருந்தது.
ஆனால், ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்த நிலையில் இறுதிநேரத்தில் அது ஒத்திவைக்கப்பட்டது எனத் தெரிகிறது.
ஒப்பந்தம் கைச்சாத்திடல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் உடனடியாக வெளிவரவில்லை. எனினும், ஒப்பந்தம் கைச்சாத்திடல் இறுதிநேரத்தில் ஒத்திவைக்கப்பட்டமை இந்தியாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது எனத் தெரிகிறது.
அண்மைக் காலமாக சீனா இலங்கையில் முதலீடுகளை மேற்கொண்டு தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.