தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் காலத்தை வீணடிக்காமல் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் – அமீர் அலி

tamileelamவடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் இனிமேலும் தயக்கம் காட்டுவார்களாயின் தமிழர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ எந்தத் தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாது எனக் கிராமியப் பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் எம்.கோபாலரட்னம் தலைமையில் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

,இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், தமிழர் விடுதலைக் கூட்டணியாக இருக்கலாம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருக்கலாம், தமிழ்ப் பேரவையாக இருக்கலாம்.

கட்சிகள் முக்கியம் அல்ல. எமது தீர்வை எவ்வாறு பெற்றுக்கொள்ளும் கட்சித் தலைவர்களுடைய விடயமே முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டுமாயின், இரண்டு சமூகங்களுக்குள்ளும் உள்ள பிரச்சினைகள் உடனடியாகப் பேசித் தீர்க்கப்பட வேண்டும்.

முஸ்லிம்களுக்கு உள்ள சந்தேகத்தை தமிழ் அரசியல் தலைவர்களும் தமிழ் மக்களுக்கு உள்ள சந்தேகத்தை முஸ்லிம் அரசியல் தலைவர்களும் தெளிவுபடுத்த வேண்டும்.

இதன் பின்னரும் ஒரே செயற்றிட்டத்தில் செயற்படுவதற்கு தமிழ், முஸ்லிம் தலைவர்கள் தயார் இல்லை என்றால், யாரும் எதிர்பாராத தீர்வைச் சுலபமாக அடைய முடியாது. தமிழ், முஸ்லிம்களை இரண்டாகப் பிரித்து வைத்து காய் நகர்த்தல்கள் மேற்கொண்டுவரப்படுகின்றன.

இனிமேலும் அவ்வாறானவர்களின் சதி வலைக்குள் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் அகப்பட்டு விலை போவார்களாயின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் சமூகங்களை நாங்களே ஏமாற்றுகின்றோம் என்பதாக அமையும்.

தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் இனிமேலும் காலத்தை வீணடிக்காமல் அவசரமாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும். தமிழ் அரசியல் தலைமைகளானது முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு பச்சை சமிக்ஞையைக் காட்ட வேண்டும்.

இவ்வாறு நாம் செயற்படாதுவிடின், மீண்டும் இரண்டு சமூகங்களும் இரு துருவங்களாக இருக்க நேரிடும் என கிராமியப் பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி குறிப்பிட்டுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: