தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தமை தொடர்பில் யாழ்ப்பாணம் நல்லூரில் தற்போது பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் ஒன்றிணைந்து குறித்த ஆர்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 03 ஆண்டுகளாக தடைவிதித்துள்ள நிலையில், அதற்கெதிராக தமிழகத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக உறவுகளே நீங்கள் எக்காரணம் கொண்டும் போராட்டத்தினை கைவிடாதீர்கள் என்று பதாதைகளை ஏந்தியவாறு இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பீட்டா அமைப்பினை வன்மையாக கண்டித்தும், தமிழக அரசு இதற்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி கோஷமிட்டனர்.
இனத்தின் வீர விளையாட்டு! எனும் தலைப்பின் கீழ் “ஏறு தழுவுதல்” மீட்புப் போராட்டத்தில் உயிர் உருகும் தாய்த் தமிழக உறவுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஈழத்தமிழ் உறவுகள் நாங்கள்!, தடை அதை உடை! போன்ற பிரதானவாசகத்தைத் தாங்கியும்,
“அலங்கா நல்லூர் ஆடும் வரை ஈழ நல்லூர் அடங்காது!”,”உயிரனைய தமிழகமே உறவுணர்ந்து எழுகின்றோம்”, “உலகம் தமிழனை உற்று நோக்கும் எங்கள் ஒற்றுமை உங்களை ஓட விரட்டும்!”,
“PETA எம் இனத்தின் எதிரி! நின்று பார் எம் நெருப்பின் முன்னாள்!”,”ஜல்லிக்கட்டு எமது பாரம்பரியம்” உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களைத் தாங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக குறித்த பகுதியில் ஆயிரக்கணக்கில் மக்கள் ஒன்றிணைந்ததால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-http://www.tamilwin.com