முல்லைத்தீவு – மன்னாகண்டல் பிரதேசத்தில் 110 குடும்பங்களுக்கான மீள்எழுச்சி வேலைத்திட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் இன்று(19) ஆரம்பித்துவைத்துள்ளார்.
குறித்த வேலைத்திட்டத்தின் ஊடாக வீடுகள் புனரமைத்தல், வீதிகள் திருத்தவேலைகள் மற்றும் நீர்வழங்குதல் போன்ற முக்கிய விடயங்களை செயற்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், முல்லைத்தீவில் அண்மை காலமாக வரலாற்று சிலைகள் அமைக்கும் செயற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.
வரலாற்றில் பொதுமக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர்களின் சிலைகள் அமைக்கும் பணிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகிய இருவரும் செயற்படுத்திக் கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் பொதுமக்கள் மத்தியில் அவை தொடர்பாக வெளிப்படையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த வரலாற்று சிலைகள் அமைப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அங்கத்தவர்களால் மட்டுமா முடியும்..? அது சாதாரண ஒருவராளும் முடியும்.
தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாவில்லை. அவை தீர்க்கப்படுமா..? முடிந்தால் அவற்றை முதலில் செய்யுங்கள்.
அத்துடன், சிலைகள் அமைப்பதுதான் இப்போதைய முதல் தேவையாக இருந்தால், இந்திய அரசிடம் 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த தீயாகி திலிபனின் சிலையை முதலில் அமைத்துக் காட்டுங்கள்.
அதற்காக மாவீரன் பண்டாரவன்னியன் மற்றும் வள்ளுவர், ஒளவையார், காந்தி போன்றோர்களின் சிலைகள் அமைப்பதற்கு நாங்கள் எதிர்ப்புதெரிவிக்கவில்லை.
மேலும், இந்த வேலைத்திட்டம் இன்றைய சூழலில் சாதாரண ஒருவராளும் செய்ய முடியும். காலம் கானியும் போது மாவீரர்களுக்கு சிலைகள் அமைப்போம் என்று நீங்கள் கூறினால் அந்த காலம் கனியும் வேளைத்திட்டங்களை முதலில் செயற்படுத்தவேண்டும் என பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
-http://www.tamilwin.com