கொலைக்களமாக மாறும் யாழ்ப்பாணம்: அசாதாரண சூழலின் உச்சம்- கருவோடு சிதைக்கப்பட்ட பெண்

kolaiயாழ்ப்பாணமும், வடக்கு மாகாணமும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை அடிக்கடி ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல்வாதிகளும் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், இது தொடர்பாக சரியான சட்ட ஒழுங்குகளை நிலைநாட்டுவதற்கு காவல்த்துறையினரும், அரசாங்கமும் தயாரில்லாமல் இருப்பது வேதனையானது.

விடுதலைப் புலிகளுடான யுத்தம் முடிவடைந்த நிலையில் வடமாகாணம் முழுவதும் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

5 குடிமகனுக்கு ஒரு இராணுவத்தினர் இருப்பதாக அரசியல்வாதிகள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

மேலதிகமாக காவல்த்துறையினரும் இருக்கின்றார்கள். ஆனால், எவ்வாறு கொலை கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்கின்றன என்பதற்கு சரியான பதிலை காவல்த்துறையினர் வெளியிடவில்லை.

இதே மாதிரி வடக்கில் போதிளவு கேரள கஞ்சாவும் தடையின்றிக் கிடைக்கின்றது. இவை எல்லாம் எவ்வாறு? எங்கிருந்து? யாரால் மேற்கொள்ளப்படுகின்றன என்று பாதுகாப்பை உறுதிப்படுத்தும் காவல்த்துறையினர் சரியாக ஆராயவில்லை.

ஒரு ஆயுதப் போராட்ட அமைப்பையும், அவர்களுக்கான ஆயுத விநியோகங்களையும் தடுத்து நிறுத்தி புலிகளை நாட்டில் இருந்து முற்றாக அழிக்க முடியும் எனில், காவல்த்துறையினரால் ஏன் வடக்கில் நிகழும் அசம்பாவிதங்களை தடுத்து நிறுத்த முடியவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இன்றைய தினமும் யாழ். ஊர்காவற்துறை- சுருவில் பகுதியில் இளம் கர்ப்பிணி தாய் ஒருவர் விசமிகளால் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

நாட்டில் சட்டம் ஒழுங்கு கண்காணிப்பில் இருப்பதாகவும், இராணுவத்தினரும் காவல்த்துறையினரும் பாதுகாப்பை சரியாகச் செய்துவருவதாக சொல்லும் அரசாங்கம் இது போன்ற அசம்பாவிதங்கள் நடப்பதை ஏன் தடுத்து நிறுத்த முடியாமல் போகின்றது என்பதே தற்போதுள்ள கேள்வி.

அல்லது வேண்டுமென்றே வடக்கில் வன்முறைகளும், அசாதாரண சூழல் நிலவவேண்டும் என்று இலங்கை அதிகார வர்க்கத்தினர் எதிர்பார்க்கின்றார்களா என அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எதுவாயினும் வடக்கில் நிகழும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நாளை மிகப்பெரியதொரு எதிர்விளைவுகளுக்கு நாட்டை இட்டுச் செல்லும் என்பதை கட்டியம் கூறி நிற்கின்றன.

இரண்டாம் இணைப்பு

யாழ். ஊர்காவற்துறை- சுருவில் பகுதியில் இளம் கர்ப்பிணி தாய் ஒருவர் விசமிகளால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்களில் இருவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ள நிலையில் ஊர்காவற்றுறையில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

நெடுந்தீவை சொந்த இடமாக கொண்ட ந.கம்சிகா (வயது27) என்ற இளம் கர்ப்பிணி பெண் ஊர்காவற்துறை சுருவில் பகுதியில் வசித்துவந்த நிலையில் இன்றைய தினம் மதியம்அவருடைய வீட்டுக்கு சென்ற விசமிகள் குழு ஒன்று குறித்த கர்ப்பிணி பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளது.

இதனால் குறித்த கர்ப்பிணி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மேற்படி சம்பவத்தை அவதானித்த மக்கள் அந்த இடத்தை சூழ்ந்ததுடன் தாக்குதலில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடிக்க முனைந்துள்ளனர்.

இதன்போது இருவர் பொதுமக்களிடம் சிக்கியுள்ளதுடன் மேலும் சிலர் தப்பி சென்றிருக்கின்றனர்.

இந்நிலையில் ஊர்காவற்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டவர்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கும் மக்களுக்குமிடையில் கடுமையான தர்க்கம் மூண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் இணைப்பு – சுதந்திரன்

 

 

– படங்கள் சுதந்திரன்

முன்னர் வந்த செய்தி –

யாழ்.ஊர்காவற்துறை பகுதியில்குடும்பப் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

ஊர்காவற்துறை நீதிமன்றில் கடமையாற்றும் உத்தியோகத்தரின் மனைவியே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஞானசேகரன் கம்சியா (வயது 24) என்ற குடும்பப் பெண்னே இன்று செவ்வாய்க்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் தனியாக இருந்துள்ளார். வீட்டிற்கு சென்ற நபர்கள் வாளால் வெட்டியுள்ளனர்.

படுகாயமடைந்த பெண்ணை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரும் போதே பெண் உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொலை சம்பந்தமாக ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

– சுமிதி

-http://www.tamilwin.com

TAGS: