சிறிலங்காவுக்கு கலப்பு நீதிமன்றம் தேவையா?

india_srilank_map_001‘அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம்’ என்கின்ற சர்ச்சைக்குரிய சொற்றொடரானது இன்று சிறிலங்காவின் இடைக்கால நீதி தொடர்பில் விவாதிக்கப்படும் பேசுபொருளாக மாறியுள்ளது.

அனைத்துலக சமூகத்தின் நம்பிக்கை மற்றும் ஆதரவுடன் கூடிய நீதிப் பொறிமுறை ஒன்று சிறிலங்காவிற்கு தேவை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இதற்காக 11 உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைச் செயலணி ஒன்றைக் கொண்ட ‘அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம்’ உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆனால் ‘கலப்பு நீதிமன்றங்கள்’ என்கின்ற சொற்றொடரானது  தற்போது சிறிலங்காவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நடைமுறையிலுள்ள ஆறு கலப்பு நீதிமன்றங்களை ஆழமாக ஆராய்ந்து அவற்றின் செயற்பாடுகள் என்ன என்பது தொடர்பாகவும் இங்கு விளக்குவதன் மூலம் சிறிலங்காவின் நீதிச்சேவை தொடர்பான மாதிரி ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.

சியராலியோனிற்கான சிறப்பு நீதிமன்றம்:  Special Court for Sierra Leone (SCSL)

2002ல் உருவாக்கப்பட்ட அனைத்துலக புதைகுழி வன்முறைகள் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதமாகவே சியராலியோன் சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. அத்துடன் நாட்டின் தலைவர் ஒருவரைக் குற்றவாளி என நிரூபித்து தண்டனை வழங்கிய ஒரேயொரு கலப்பு நீதிமன்றமாகவும் இது காணப்படுகிறது.

முன்னாள் யூகோசிலோவியாவிற்கான அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம், நிரந்தர அனைத்துலக குற்றவியல் நீதிமன்றமான உரோம சாசனம் போன்றவற்றின் பின்னணியிலேயே சியராலியோன் சிறப்பு நீதிமன்றமானது ஒரு கலப்பு நீதிமன்றமாக உருவாக்கப்பட்டது. உள்நாட்டு மற்றும் அனைத்துலகக் கூறுகள் சாசனத்திற்கேற்ப பொருளாதார நலன்களுக்கு அப்பால் குற்றவியல் வழக்குகளை விசாரணை செய்யும் நோக்குடனேயே இந்த நீதிமன்றம் செயற்படுகிறது.

சியரா லியோனில் கலப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதில் ஐ.நாவின் உதவியை நாடுவதில் இந்நாட்டு அரசாங்கம் விருப்பம் கொண்டிருந்ததுடன் தனது நாட்டில் கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்க வேண்டும் எனவும் இந்த அரசாங்கம் சுயவிருப்பத்தைக் கொண்டிருந்தது. ஐ.நா செயலாளர் நாயகம் மற்றும் ஐ.நா பாதுகாப்புச் சபை ஆகிய இரு தரப்பிற்கும் இடையிலான ஒப்புதலை அடுத்து சியராலியோன் சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.

முன்னாள் ஐ.நா செயலாளர் நாயகம் கோபி அனான் மற்றும் சியரா லியோன் அரசாங்கத்திற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு 16 ஜனவரி 2002ல் இந்த நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இதற்கான உடன்படிக்கையானது உள்நாட்டு அரசியல் சாசனத்தின் பிரகாரம் உள்நாட்டு விதிமுறைகளை வலியுறுத்தி கலப்பு நீதிமன்ற ஏற்பாடுகளுக்கு ஏற்ப வரையப்பட்டமை இதன் தனிச்சிறப்பாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆழமான தலையீடு மற்றும் சியராலியோன் அரசாங்கத்தின் அதீத விருப்பும் இணைந்தமையால் இவ்வாறானதொரு வரையறுக்கப்பட்ட நீதி சார் அம்சங்களைக் கொண்ட நீதிமன்றத்தை உருவாக்கக் கூடிய ஏதுவான நிலைமை எட்டப்பட்டது. குறிப்பாக, தனது ஆணையை வெற்றிகரமாக நிறைவேற்றிய ஒரேயொரு கலப்பு நீதிமன்றாக தற்போதும் சியராலியோன் சிறப்பு நீதிமன்றம் செயற்படுகிறது.

கம்போடிய நீதிமன்றங்களில் அசாதாரண சம்மேளனங்கள்: (Extraordinary Chambers in the Courts of Cambodia (ECCC)

ஐ.நா பாதுகாப்புச் சபையின் அதிகூடிய தலையீட்டுடன் உருவாக்கப்பட்ட சியராலியோன் சிறப்பு நீதிமன்றைப் போலல்லாது, கம்போடியாவின் கலப்பு நீதிமன்ற முயற்சிகளுக்கு ஐ.நா பொதுச்சபையானது முன்னின்று செயற்பட்டது. மேலும், சியாரா லியோன் போன்றே,  ‘கெமர் ரூஜ்’  Khmer Rouge    தலைவர்கள் தொடர்பான வழக்கு விசாரணையை மேற்கொள்வதில் ஐ.நா தலையீடு செய்வதற்கு கம்போடிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியது.

இந்த நீதிமன்றை உருவாக்குவதில் ஐ.நா பாதுகாப்புச் சபை தலையீடு செய்யாததால் இது தொடர்பான முக்கிய விடயங்களில் ஐ.நாவுடன் பேரம்பேசலை மேற்கொள்வதற்கு கம்போடியாவானது அதிகாரத்துவ சக்திகள் சிலவற்றை இதில் ஈடுபடுத்தியது. உள்நாட்டிற்கும் பொருத்தமான சட்டம் ஒன்றை உருவாக்குவதில் ஐ.நாவுடன் தெளிவான புரிந்துணர்வு எட்டப்பட்ட பின்னர், வெற்றிகரமாக உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு அதனைத் தொடர்ந்து உள்நாட்டுச் சட்டத்தின் ஊடாக ECCC  என்கின்ற கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.

இந்த நீதிமன்றின் பெரும்பான்மை நீதிபதிகள் கம்போடியாவைச் சேர்ந்தவர்களாவர். இது தற்போது சிறிலங்காவால் முன்வைக்கப்பட்ட  ஆலோசனைச் செயலணிக்கு ஒப்பானதாகும். ஐ.நாவின் பலமான தலையீட்டைத் தொடர்ந்து உள்நாட்டுச் சட்டத்தின் ஊடாக கலப்பு நீதிமன்றப் பொறிமுறைகளை அமைப்பதற்கு சியராலியோன் அரசாங்கமும் கம்போடிய அரசாங்கங்களும் தமது முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கின என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கும் அப்பால், இவ்விரு நாடுகளும் தமது நாடுகளில் தேசிய விசாரணை நீதிமன்றங்களை உருவாக்குவதற்கு போதியளவு வளங்களையும் போதியளவான பயிற்சிகளைப் பெற்ற மனித வலுவையும் கொண்டிராமையால் அனைத்துலகத் தலையீட்டை ஏற்றுக்கொண்டமைக்கான காரணியாகக் காணப்படுகிறது.

திலி மாவட்ட நீதிமன்றின் சிறப்பு விசாரணைக் குழுக்கள்: Special Panels of the Dili District Court (Timor Leste)

1999ல் ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்பட்ட கருத்து வாக்கெடுப்பில் கிழக்குத் தீமோரானது சுதந்திரம் வேண்டும் என வாக்களித்த பின்னர் இடம்பெற்ற பல்வேறு மீறல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்து இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிக்கும் முகமாகவே 2000ல் கிழக்குத் தீமோரில் இந்த நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. திலி மாவட்ட நீதிமன்றின் சிறப்பு விசாரணைக் குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்கள் ஐ.நா கலப்பு நீதிமன்ற நிர்வாகத்தின் கீழ் பணியாற்றுவதற்கான வரையறைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஐ.நாவின் பலமான ஆதரவுடன் உள்நாட்டுச் சட்டக் கட்டமைப்புகளுக்கேற்ப உருவாக்கப்பட்ட சியரா லியோன் மற்றும் கம்போடிய கலப்பு நீதிமன்றங்களைப் போலல்லாது, கிழக்குத் தீமோரில் உருவாக்கப்பட்ட கலப்பு நீதிமன்றானது முற்றிலும் ஐ.நா தலையீட்டைக் கொண்டிருந்தது. அதாவது தீமோரின் சுயாதீனமான அரச இயந்திரம் காணப்படாதமையே முற்றிலும் ஐ.நாவின் தலையீட்டுடன் கலப்பு நீதிமன்றம் உருவாக்குவதற்கான காரணமாக அமைந்தது.

கிழக்குத் தீமோரைச் சேர்ந்த நீதிபதிகளும் இந்த நீதிமன்றில் அங்கம் வகிப்பதால் இது ‘கலப்பு’ நீதிமன்றம் என்கின்ற வகைக்குள் அடங்குகிறது. வளப்பற்றாக்குறை, வல்லுனர்களின் பற்றாக்குறை, இந்தோனேசியாவின் அரசியற் சூழலிற்குள் அகப்பட்டுத் தவித்தல் போன்ற பல்வேறு காரணிகள் ஏனைய கலப்பு நீதிமன்றப் பொறிமுறைகளுக்குச் சாதகமாக உருவாக்கப்பட்ட திலி மாவட்ட நீதிமன்ற சிறப்பு விசாரணை நீதிப் பொறிமுறையானது மே 2005ல் இடைநடுவில் கைவிடும் நிலை உருவாகியது.

விதிமுறை 64 சட்டங்கள் (கொசோவோ): (Regulation 64 Panels (Kosovo)

கிழக்குத் தீமோரைப் போலவே, கொசோவோவில் இடம்பெற்ற மோசமான குற்றவியல் வழக்கானது கொசோவோவில் செயற்பட்ட ஐ.நா ஆணைக்குழுவின் முழுமையான தலைமைத்துவத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறானதொரு கலப்பு நீதிமன்றை உருவாக்குவதற்கான வளங்களை கொசோவோ அரசாங்கம் கொண்டிராமையால் அனைத்துலக நீதிமன்றின் பெரும்பான்மைப் பங்களிப்புடன் ‘விதிமுறை 64 சட்டங்கள் (கொசோவோ)’ என்கின்ற கலப்பு நீதிமன்றானது உருவாக்கப்பட்டது.

ICTY என்கின்ற  போர்க் குற்றவியல் நீதிமன்றின் நீதிச் செயற்பாட்டிற்குள் ஏற்கனவே  ஒன்று ஏற்கனவே கொசோவோவில் உருவாக்கப்பட்ட நிலையில் இரு கலப்பு நீதிமன்றப் பொறிமுறைகளைக் கொண்ட ஒரேயொரு நீதிமன்றாக கொசோவோ நீதிமன்றம் திகழ்கிறது. சியரா லியோன் மற்றும் கம்போடியாவைப் போலல்லாது, கிழக்குத் தீமோரைப் போன்றே கொசோவோவும் ஐ.நா அதிகாரிகள் சட்ட வரையறைகளை உருவாக்குவதற்கு முழுமையான அதிகாரத்தை வழங்கக்கூடிய ஏழாவது சாசன சட்டத்திற்கேற்ப உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிழக்குத் தீமோரை விட அனைத்துலக சமூகத்தின் அதிகூடிய தலையீடு காணப்படும் கலப்பு நீதிமன்றமாக கொசோவோ விளங்குகிறது.

பொஸ்னியன் போர்க் குற்றங்கள் சம்மேளனம்: Bosnian War Crimes Chamber

இக்கலப்பு நீதிமன்றானது குறிப்பாக பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா போன்றவற்றுக்காக உருவாக்கப்பட்டது. இது ஏற்கனவே உருவாக்கப்பட்ட ICTY  நீதிமன்றின் நீதிச் செயற்பாட்டிற்கு உட்பட்ட பிறிதொரு கலப்பு நீதிமன்றாகத் திகழ்கிறது.

ICTY  நீதிமன்றின் சுமையைக் குறைப்பதற்காவும்  தர்க்க ரீதியாக இதன் ஆணையை உயர்த்தும் நோக்குடன் ஐ.நா பாதுகாப்புச் சபையால் பொஸ்னியன் போர்க் குற்றங்கள் சம்மேளனம் உருவாக்கப்பட்டது. இது முற்றிலும் ஐ.நா தலையீட்டுடன் செயற்படுகிறது. இது தவிர்ந்த பிற நேரங்களில் இந்த நீதிமன்றானது உள்நாட்டு சட்டச் செயற்பாடுகளில் ஈடுபடுகிறது.

லெபனானுக்கான சிறப்பு நீதிமன்றம்: Special Tribunal for Lebanon (STL)

பெப்ரவரி 2005ல் பிரதமர் ரபிக் கரிரி மற்றும் 21 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை செய்வதற்காகவே இந்த நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இப்படுகொலைச் சம்பவம் தொடர்பாகவும் அதன் விளைவுகள் தொடர்பாகவும் விசாரணை செய்வதே இந்த நீதிமன்றின் நோக்காகக் காணப்படுகிறது.

கிழக்குத் தீமோர் மற்றும் கொசோவோ கலப்பு நீதிமன்றங்கள் போன்றே லெபனானுக்கான சிறப்பு நீதிமன்றமும் ஏழாவது சாசனத்தின் ஊடாக உருவாக்கப்பட்டது. இது ஐ.நா தலையீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டாலும் கூட இதில் லெபனான் நீதிபதிகள் அங்கம் வகிப்பதால் இது ஒரு கலப்பு நீதிமன்றாகக் காணப்படுகிறது. அத்துடன் சியரா லியோன் மற்றும் கம்போடியா போலவே, லெபனான் நாட்டு அரசாங்கத்தின் கோரிக்கையின் பிரகாரமே இந்த நீதிமன்றம் நிறுவப்பட்டது.

முடிவு:

சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் அனைத்துலகத் தலையீடு இடம்பெறுவதில் ஆர்வங் காண்பிக்கவில்லை. சிறிலங்காவில் கலப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதில் ஐக்கிய நாடுகள் சபை அதிக முயற்சி எடுக்கின்ற போதிலும் இதற்கு உள்நாட்டு அரசாங்கம் தனது சம்மதத்தைத் தெரிவிக்கவில்லை. இந்த விடயமானது சிறிலங்காவில் விவாதிக்கப்படும் ஒரு சர்ச்சைக்குரிய பொருளாக மாறியுள்ளது. சிறிலங்கா தனது உள்நாட்டு நீதிச் சட்டங்களுக்கு ஏற்ப தற்போது நடைமுறையிலுள்ள கலப்பு நீதிமன்றங்களைப் போன்றதொரு நீதிப் பொறிமுறையைத் தனது நாட்டில் உருவாக்க இடமளிக்க முடியும்.

இவ்வாறானதொரு கலப்பு நீதிமன்றப் பொறிமுறையில் அனைத்துலக நீதிபதிகள் அங்கம் வகிக்கும் அதேவேளையில உள்நாட்டு அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஐ.நாவின் அதிகூடிய தலையீட்டையும் கொண்டிருப்பதே வழமையான நடைமுறையாகும். பரந்தளவான நீதியை வழங்கும் நோக்குடனேயே இவ்வாறான கலப்பு நீதிமன்றங்களை உள்நாட்டு அரசாங்கங்கள் வரவேற்றுள்ளதைக் காணலாம்.

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் தன்மை, நீதிக்கான அழுகை, இந்த நாட்டில் எவ்வகையான நீதிப்பொறிமுறையை உருவாக்குவது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு போன்றவற்றின் அடிப்படையில் பொருத்தமான ஐ.நா மற்றும் அனைத்துலகத் தலையீட்டுடன் கூடிய ‘கலப்பு’ ‘உள்நாட்டு’ அல்லது வேறு ஏதாவது வடிவிலான நீதிப்பொறிமுறை ஒன்று உருவாக்கப்படுவது தனித்துவம் வாய்ந்ததாக இருக்கலாம்.

இவ்வாறானதொரு பொறிமுறை மாதிரியானது அனைத்துலகக் குற்றவியல் நீதிப் பொறிமுறைக்கான சிறிலங்காவின் தனித்துவமான பங்களிப்பாக இருக்கும். உள்நாட்டு நீதிச் செயற்பாடானாது அனைத்துலக சமூகத்தின் ஆசிர்வாதங்கள் அவசியம் பெற்றிருக்க வேண்டும்.

வழிமூலம்       – Eurasia review
ஆங்கிலத்தில் – ABRAHAM JOSEPH*
மொழியாக்கம் – நித்தியபாரதி

-http://www.puthinappalakai.net

TAGS: