வடக்கு, கிழக்கையும் பிரபாகரனையும் இணைத்துக்கொண்டு கூட்டாட்சி ஒன்றை அமைக்குமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு அன்று அமெரிக்கா உத்தரவிட்டது. அந்த உத்தரவை உதாசீனம் செய்துவிட்டே மஹிந்த விடுதலைப்புலிகளுக்கு எதிராக யுத்தத்தை நடத்தினார் என்றும் மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக தெரிவித்தார்.
அவர் தனது எம்.பி. பதவியை இராஜிநாமா செய்வது தொடர்பில் கருத்துக் கூறும்போதே இந்தத் தகவலையும் வெளியிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இந்த அரசியல் கலாசாரம் தொடர்பில் எனக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாகவே நான் எனது எம்.பி. பதவியை இராஜிநாமா செய்வதற்கு முடிவெடுத்துள்ளேன். இராஜிநாமாவைத் தொடர்ந்து அரசியல் அழுத்தக் குழுவொன்றை அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளேன். அந்தக் குழு அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் நேர்வழியை நோக்கி அழுத்தம் கொடுக்கும்.
நான் எம்.பி. பதவியை இராஜிநாமா செய்வதற்கு எடுத்துள்ள முடிவை அனைவரும் வரவேற்றுள்ளனர். நாட்டில் நல்ல அரசியல் கலாசாரம் உருவாக வேண்டும் என்பதே எனது ஒரே இலட்சியமாகும். எனது தந்தை பிரதமராக இருந்தபோதும்கூட அவரது பதவியைப் பயன்படுத்தி அரசியல் துஷ்பிரயோகத்தில் நான் ஈடுபட்டதில்லை. தாமதமாகித்தான் அரசியலுக்கே வந்தேன்.
ஸ்ரீலங்கா சுந்தந்திரக் கட்சி ஒன்றுபட வேண்டும் என்று நான் கோரிக்கை முன்வைக்கின்றேன். மஹிந்தவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பேச்சு மேசைக்கு வர வேண்டும். மனம் திறந்து பேசி கட்சியை ஒற்றுமைப்படுத்த வேண்டும்.
புலிகளுடன் யுத்தம் செய்யாமல் பிரபாகரனையும் வடக்கு, கிழக்கையும் இணைத்துக்கொண்டு கூட்டாட்சி ஒன்றை அமைக்குமாறு அமெரிக்கா அன்று மஹிந்தவுக்கு உத்தரவிட்டபோதும் அதையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு விடுதலைப்புலிகளை அழித்து ஒழித்தவர்தான் மஹிந்த. அப்படிப்பட்ட மஹிந்தவுடன் ஏன் மைத்திரி பேசக்கூடாது? ஏன் அவரை இணைத்துக் கொண்டு கட்சியை ஒற்றுமைப்படுத்தக்கூடாது?” என்றார்.
-http://www.tamilwin.com