பிரதமர் அண்மையில் காணாமல்போனவர் தொடர்பில் தெரிவித்த கருத்து தமிழர்களின் மனங்களில் நீங்காத வடுவை ஏற்படுத்தியுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த 1987 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டு 30 வருடம் பூர்த்தியாகின்ற நிலையில் இன்று (28) அவர்களை நினைவு கூரும் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழர்களின் பகுதிகளில் சிங்கள பேரினவாதத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு படுகொலைகளும் திட்டமிட்ட வகையில் இலங்கை தீவில் இருந்து தமிழர்களை முற்று முழுதாக அழிக்கவேண்டும் என்ற நோக்குடன் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், அவர்கள் எங்களை அழிக்க அழிக்க நாங்கள் வளர்ந்து கொண்டேயுள்ளோம். தமிழர்களின் போராட்டம் இந்தியா தொடக்கம் அமெரிக்கா வரையில் உலக நாடுகளில் உள்ள அனைத்து தமிழர்களும் ஒன்றிணைத்து போராடக்கூடிய வல்லமை கொண்ட இனமாக தமிழினம் வளர்ந்து நிற்கின்றது என்றால் அதற்கு காரணம் பேரினவாத அரசின் ஒடுக்குமுறையாகும்.
கொக்கட்டிச்சோலை பகுதிகளில் 1987 மற்றும் 1991ஆம் ஆண்டுகளில் படுகொலைகள் நடைபெற்றுள்ளன.
அந்தவேளையில், அந்த படுகொலைகளை செய்தவர்களுக்கு தெரியும் தாங்கள் கொலை செய்பவர்கள் விடுதலைப்புலிகள் அல்ல என்று. அவர்களின் நோக்கம் அன்று தமிழர்களை அழிப்பதாகவே இருந்தது.
அந்த நோக்கிலேயே கடந்த காலத்தில் படுகொலைகள் நடைபெற்றுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு படுகொலைகள் நடாத்தப்பட்டன.
தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தமிழ் இனத்தின் வரலாறுகள், வடகிழக்கு இணைந்த தாயகத்தில் என்றோ ஒரு நாள் தீர்வுத் திட்டத்தினைப் பெற்றுக்கொள்வோம்.
அதற்காக ஒவ்வொரு தமிழனும் உயிர் இருக்கும் வரையில் போராடுவார்கள்.அது அரசியல் ரீதியாக இருக்கலாம்,ஆயுத ரீதியாக இருக்கலாம்.அகிம்சை ரீதியாககூட இருக்கலாம்.
மேலும்,அன்று தமிழர்கள் படுகொலை செய்யப்படும் போது அதற்கு எதிராக அன்றைய இளைஞர்கள் போராடாமல் இருந்திருந்தால் இன்று தமிழ் இனமே அழிந்திருக்கும் முற்று முழுதாக சிங்கள பேரினவாத தீவாக இது மாற்றப்பட்டிருக்கும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com