உலகில் ஏற்பட்டுள்ள பலமாற்றங்களுக்கு புரட்சிகளே காரணமாக அமைந்துள்ளன. அந்த வகையில் அண்மையில் தமிழகத்தில் வெடித்த எழுச்சி பேரணி ஒரு பாரிய வெற்றியை பெற்று தந்திருந்தது.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்த எழுச்சி போராட்டத்தின் தீவிரம் இறுதியில் வெற்றி எனும் கனியை பறிக்க வித்திட்டது.
தமிழகத்தின் அலங்காநல்லூரில் ஆரம்பமான இந்த போராட்டம் படிப்படியாக விஸ்வரூபம் எடுத்து, பின்னர் மாபெறும் எழுச்சி போராட்டமாக மாறியது. அத்துடன், இந்த போராட்டத்திற்கு தமிழர்கள் வாழும் அத்தனை நாடுகளில் இருந்தும் ஆதரவு கிடைத்தது.
அலங்காநல்லூர் ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம் பின்னர் பல தரப்பின் ஆதரவுடனும் ஒரு மாபெரும் எழுச்சி பேரணியாக மாறியது எப்படி..?
பல தரப்பினர்களின் ஆதரவும், தமிழர்கள் ஒற்றுமையும், சர்வதேச ரீதியில் குறித்த போராட்டத்திற்கு கிடைத்த ஆதரவுமே இந்த ஆர்ப்பாட்டம் மாபெரும் எழுச்சி பேரணியாக மாற காரணமாக அமைந்தது.
இரண்டு, மூன்று ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு விவகாரம் இந்த எழுச்சி பேரணியே ஒரு இறுதி நிலையை அடைய காரணமாக அமைந்தது என்று கூறலாம்.
இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் தாக்கம் அண்மையில் காணாமல் போனவர்களினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் காணமுடிந்தது. இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தரவேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் வடக்கு கிழக்கில் இடம்பெற்றிருந்தன. எனினும் அவை அனைத்து தோல்வியிலேயே முடிந்தது. தமிழ் தலைமைகளாலும், அரச தரப்பினராலும் வழங்கப்பட்டு வந்த போலியான வாக்குறுதிகள் இந்த போராட்டங்களை தோல்வியடைய செய்திருந்தன.
இதன் காரணமான விரக்தியின் உச்சத்தில் இருந்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் கடந்த 23ஆம் திகதி முதல் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தனர்.
ஆரம்பத்தில் இந்த போராட்டம் குறித்து அலட்டிக்கொள்ளாத இலங்கை அரசு பின்னர் போராட்டத்தின் தீவிரத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தது என்றே கூறவேண்டும். அதன் காரணமாகவே குறித்து போராட்டத்தில் இலங்கை அரசு நேரடியாக தலையிட ஆரம்பித்தது.
அதில் வெற்றியும் கண்டுள்ளது. ஆம் ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த இந்த போராட்டம் இரண்டு நாட்கள் சென்ற பின்னர் குறித்து ஆர்ப்பாட்டத்திற்கு கிடைத்த ஆதரவை கண்டு இலங்கை அரசாங்கம் அச்சமடைந்து போனது என்றே கூறவேண்டும்.
குறித்த போராட்டத்தை எப்படி கொண்டு தொடர்ந்தும் செல்வது எனபது தொடர்பில் முன் ஆயத்தங்கள் எதுவும் ஆர்ப்பாட்டகார்களிடம் இருந்திருக்கவில்லை. எனினும் பின்னர் அந்த போராட்டத்தின் தன்மை போக்கு திசைமாறியது.
குறித்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக நாட்டில் பல இடங்களிலும் போராட்டம் வெடிக்க துவங்கியது. சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள் முதல் பலரும் குறித்து ஆர்ப்பாட்டத்திற்கு ஆரதவாக களத்தில் இறங்கினர்.
ஆரம்பத்தில் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலேயே இந்த உண்ணாவிரத போராட்டம் துவங்கியது. இயற்கை முதற்கொண்டு இந்த போராட்டத்திற்கு பல்வேறு இடர்பாடுகள் காணப்பட்டன.
அமைதியாக ஆரம்பிக்கபட்ட இந்த போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணம், திருகோணமலை உள்ளிட்ட இடங்களில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்ற வவுனியாவுக்கு பொது அமைப்புகள் சேர்ந்தவர்களும், பொது மக்களும் படையெடுக்க ஆரம்பித்தனர். இந்த போராட்டம் தொடர்பில் பாராளுமன்றில் கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தது.
அத்துடன், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தரப்பினர்களுக்கு தமிழ் தலைமைகள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். குறிப்பாக வடமாகாண முதலமைச்சர் ஜனாதிபதிக்கு உண்ணாவிரத போராட்டம் குறித்து கடிதம் எழுதியிருந்தார்.
நாளடைவில் போராட்டத்தில் ஈடுபட்டிவர்களின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு மோசமடைந்தது. இதுவே இலங்கை அரசாங்கம் அச்சமடைய காரணமாக அமைந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் யாருக்கேனும் ஏதேனும் நடந்தால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். அதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டியிருக்கும்.
அத்துடன், இந்த போராட்டத்தை இப்படியே விட்டு விட்டால் போராட்டம் மெரினா எழுச்சிய பேரணியை போன்று மாறிவிடும் என எண்ணிய அரசாங்கம் நேரடியாக களத்தில் குதித்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
இதனையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க காணாமல் போனவர்கள் குறித்து கருத்து வெளியிட்டிருந்தார். பிரதமரின் கருத்து பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த அதேவேளை, பலரையும் முகம் சுழிக்க வைத்திருந்தது.
இந்நிலையில் போராட்டத்தின் நான்காவது நாளில் வவுனியாவுக்கு நேரடியாக விஜயம் செய்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தில் சம்பந்தப்பட்ட உயர் மட்ட தரப்பினர்களுடனும், பிரதமருடனும் உண்ணாவிரதம் இருப்பவர்களின் பிரதிநிதிகள் நேரடியாகப் பேச்சுவார்த்கைள் நடத்தலாம். அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருவதாக அமைச்சர் உறுதியளித்தார்.
வாய்மொழி மூலமான உறுதிமொழியை ஏற்க முடியாது. அதற்கான உத்தரவாதம் எழுத்து மூலமாக வரையறுக்கப்பட்ட திகதியுடன் உறுதியளிக்கப்பட வேண்டும் என உண்ணாவிரதம் இருந்தவர்கள் குறிப்பிட்டனர்.
அதற்கமைவாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை விகட்ர் சோசை உள்ளிட்ட அருட்தந்தையர்களின் முன்னிலையில், உறுதிக் கடிதத்தில் கையொப்பமிட்டார்.
அதனடிப்படையில், எதிர்வரும் 9ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான 16 பேருடன், அருட்தந்தையர்கள் அடங்கிய குழுவினர் அரசாங்கத் தரப்பினருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.
எது எவ்வாறாயினும், மெரினா எழுச்சியாக மாற்றமடையவிருந்து வவுனியா உண்ணாவிரத போராட்டத்தை இலங்கை அரசாங்கம் சாதூர்யமாகவும், அதிரடியாகவும் சமாளித்து வெற்றி பெற்றுள்ளது.
எனினும், அரசாங்கத்தரபினால் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்றி பெறுமா என்பது மட்டும் சந்தேகமே. கடந்த கால வரலாறுகளே இதற்கு சான்று.
இதேவேளை, இந்த உண்ணாவிரத போராட்டமானது மெரினா எழுச்சியை பார்க்கிலும் பாரிய எழுச்சியாக மாற்றம் பெற்றிருக்கும். எனினும், இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கையால் இந்த போராட்டம் மழுங்கடிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
-http://www.tamilwin.com