வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்வுக்காக உருவாக்கப்பட்ட மீள்குடியேற்றச் செயலணிக்கு மீள் குடியேற்ற அமைச்சு 3,000 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது.
வீட்டுத் திட்டம், வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கு மீள்குடியேற்றச் செயலணிக்குத் தனியான திட்ட அலுவலகமும் உருவாக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றச் செயலணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் உருவாக்கப்பட்டது.
மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க ஆகியோரை இணைத்தலைவர்களாகக் கொண்டு இந்தச் செயலணி இயங்குகின்றது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனையும் செயலணியின் இணைத்தலைவராக உள்வாங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அத்துடன், மீள்குடியேற்றச் செயலணிக்கு எதிரான தீர்மானமும் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் செயலணி வடக்கில் திட்டங்களை மேற்கொள்வதற்கு தனியான திட்டப்பணிப்பாளரும், ஒவ்வொரு மாவட்டங்களுக்கு ஒருங்கிணைப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீண்ட காலம் இடம்பெயர்ந்தவர்களுக்கு வீட்டுத் திட்டம், வாழ்வாதார உதவிகள் வழங்கல் என்பன முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், யாழ்ப்பாணத்தில் வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்களும், மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் முஸ்லிம் மக்களும், வவுனியாவில் சிங்கள மக்களும் இந்தத் திட்டத்துக்குத் தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com