2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து காணப்படுவதாகவே அதிகளவிலான மக்கள் கூறுகின்றனர்.
குறித்த கருத்துக்களை உண்மையாகும் விதங்களில் தற்போது யாழில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் ஹரிஷ்ணவி என்ற மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் தூக்கிலிடப்பட்டவாறு அவரது வீட்டில் வைத்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். குறித்த படுகொலை வழக்கு யாழ். மக்களை முதலில் ஆட்டம் காணச்செய்தது எனலாம்.
குறித்த வழக்கு விசாரணைகளில் மாணவி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தும், இருந்தாலும் தற்போது வரையில் சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் மட்டுமே நீடிக்கப்பட்டு வருகின்றது.
அடித்ததுடன் சிவலோகநாதன் வித்தியா படுகொலையும் தீர்வு கிடைக்கவில்லை என்றே கூறலாம் குறிப்பாக இந்த படுகொலை தொடர்பிலும் இன்று 2 ஆவது வருடங்களாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இதனை தொடர்ந்து கடந்த மாதம் ஊர்காவற்துறை பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட 7 மாத கர்ப்பிணிப் பெண்ணின் மரணம் தொடர்பான பல சர்ச்சைகள் வடக்கில் எழுந்து வந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 25 வயதிற்கு உற்பட்டவர்கள் என யாழ் பொலிஸார் கூறுகின்றனர்.
இவ்வாறு பெண்களுக்கு எதிராக மட்டும் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றது என்பதும் ஒருபுறம் இருக்க, தற்போது தமிழனை தமிழனே அளித்து வருகின்ற நிலையே உருவாகியுள்ளது.
அதாவது இளைஞர்களுக்குள்ளே காதல், கோபம் என்ற சிறு காரணத்திற்காக வாள்களை கையில் எடுத்துக்கொண்டு மற்றவர்களை வெட்ட சென்று விடுகின்றனர்.
அந்த வகையில் தற்போது சமூக வலைத்தள ஊடகங்களும், பத்திரிகை செய்திகளும் கொலை கொள்ளை, வாள்வெட்டுக்கள் என்றே காணக்கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறு சட்டங்களை தாங்களே கையில் எடுப்பதால் என்ன பயன்? என்பது தெரியாமல் போகின்றது இப்போதைய இளைஞர்களுக்கு.
குறிப்பாக வித்தியா ஹரிஷ்ணவி மற்றும் கர்ப்பிணி பெண் கொலை, யாழில் பல்வேறு இடங்களில் வாள்வெட்டு போன்ற சம்பவங்களை எடுத்து நோக்கும் போது அவை அனைத்தையும் செய்வது 18 தொடக்கம் 25 வயதுக்கு உற்பட்டவர்களே என பொலிஸார் கூறுகின்றனர்.
படிப்பதற்கு பாடசாலைகளுக்கு புத்தகங்களை ஏந்தி செல்லும் கைகளில் வாள்களை ஏந்தி குழுக்களை சேர்த்து வருகின்றார்கள். இதனை சாதகமாக பயன்படுத்தி தற்போது இராணுவத்தினரை வடக்கில் குவிக்க கோரி சில தென்இலங்கை அரசியல் வாதிகள் செயற்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு “இராணுவம் வடக்கில் மீண்டும் குவிக்கப்பட்டால் அதனால் வருகின்ற பிரச்சினைகளை இந்த இளைஞர்களால் அறிந்திருக்க முடியாது” என்கின்றார்கள் யுத்தத்தால் அடிபட்டு வந்த பெரியவர்கள்.
இவ்வாறு முதியவர்கள், அனுபவமுள்ளவர்களின் சொற்களினை கேட்டு எதிர்வரும் தலைமுறையினருக்கு நல்ல உதாரணமாக இந்த இளைஞர்கள் மாற எத்தனிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.
-http://www.tamilwin.com