வன்னியில் நடந்த இறுதிப் போரின் போது பெருமளவில் மனித உரிமை மீறல்களும் போர்க் குற்றங்களும் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகி இருக்கும் புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் மக்களை மீளக்குடியமர அனுமதிக்கப்போவதில்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
போர் முடிவடைந்த பகுதிகளான முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை தேசியப் பாதுகாப்புக்கருதி அந்த இடங்களில் மீளக்குடியமர்த்த முடியாதுள்ளது என்றார் இலங்கை அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல.
முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் பகுதிகளில் மக்களை மீளக்குடியமர அனுமதிக்க முடியாது என்று அந்தப் பகுதி இராணுவத்தினர் அறிவித்துள்ளனரே என்று செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, தேசிய பாதுகாப்பு மற்றும் அரசின் தேவைகளைக் கருத்தில் கொண்டும் அந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த முடியாதுள்ளது. மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் நிலவும் பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்த்த முடியாது என்றார் அமைச்சர்.
மீள்குடியமர்வுக்கு அனுமதிக்க முடியாது என்று அரசு அறிவித்துள்ள இந்த இடங்களிலேயே போர்க் குற்றங்கள் அதிகம் நிகழ்ந்தன என்று மனித உரிமைக் குழுக்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
பிரிட்டனின் சானல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க் குற்ற ஆதாரமான இராணுவ அதிகாரி மற்றும் சிப்பாய் ஆகியோர் வழங்கிய சாட்சியங்களில் இந்தப் பகுதிகளிலேயே பொதுமக்கள் படையினரால் ஈவிரக்கமற்றுச் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்திருந்தனர்.
ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுக் கிடந்த மக்களைப் புதைக்க முடியாத நிலையில் சடலங்களை ஒரே இடத்தில் போட்டு ‘பெக்கோ’ இயந்திரத்தின் மூலம் அதன் மீது மண்ணைக் குவித்து மண் அணையை ஏற்படுத்தியிருந்தனர் என்றும் இராணுவச் சிப்பாய் தனது சாட்சியத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அடியோடு மறுக்கும் இலங்கை அரசு போர்க் குற்றங்களோ மனித உரிமை மீறல்களோ இடம்பெறவில்லை என்று தொடர்ந்து கூறிவருகிறது.