கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை மீட்பதற்காக போராட்டங்களை 10ஆவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமது நியாயமான கோரிக்கையை ஜனதிபதியிடம் தெரிவிப்பதற்கு பல அரசியல் கட்சிகள் போட்டியாக செயற்பட்டுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதுவரை சந்தித்த அரசியல் பிரமுகர்கள் தமது கோரிக்கைகளை நல்லாட்சி அரசிற்கு எடுத்துச் சொல்லுவதாக தெரிவித்து சென்ற நிலையில் அவர்கள் ஆக்கப்பூர்வமாக இதுவரை செயற்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆக்கபூர்வமாக செயற்பட்டிருந்தால் இப்பொழுது எமக்கு ஒரு தீர்வு கிடைத்திருக்கும். ஆனால் அது கிடைக்காத காரணத்தினால் அவர்களின் செயற்பாட்டில் ஆக்கபூர்வம் இல்லை என்று நாங்கள் சொல்லுகின்றோம் என்றும் கூறியுள்ளனர்.
மேலும், அரசியல் பிரமுகர்கள் பலர் தொலைபேசி ஊடாக அடிக்கடி தொடர்பை ஏற்படுத்தி தாம் நிலம் மீட்கும் வேலைகளில் கூடுதலாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக அவர்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் அடிக்கடி பதிவுகளை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
அதற்கு உதவியாக காணிகள் தொடர்பான ஆவணங்களை வருபவரிடம் கொடுத்து விடும்படியும் தொலைநகலில் அனுப்பும்படி கேட்கின்றனர்.
நாங்களும் வழங்குகின்றோம் அனுப்புகின்றோம் ஆனால் இதுவரை எமக்கான தீர்வு கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
-http://www.tamilwin.com