இந்த நாட்டு சிறுபான்மைச் சமூகங்களில் கையறு நிலைக்கு யாரைக்குறை சொல்வது என்பது குறித்து சிந்திப்போமானால் யார் மீதும் பழிசுமத்த முடியாது, நாமே தான் எமது தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கின்றோம். இதற்குப் பிரதான காரணம், சிறுபான்மை சமூகங்களுக்கிடையே ஒற்றுமையின்மையே ஆகும்.
பெரும்பான்மைச் சமூகத்துடன் உறவாடி அவர்களது உ ள்ளத்தை கவரும்படி அன்னியோன்யமாகப் பழகுவோமானால் இனங்களுக்கிடையிலான பிளவு ஏற்பட்டிருக்க முடியாது. எமது செயற்பாடுகள் அவர்கள் சந்தேகிக்கும் விதத்திலேயே அமைந்து காணப்படுகின்றது.
எம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம்.தமிழ் பேசும் சமூகங்களுக்கு பிரச்சினைகள் குவிந்து காணப்படுவதை எவராலும் மறுத்துரைக்க முடியாது. அந்தப் பிரச்சினைகளை போராட்டங்கள் மூலமோ, அச்சுறுத்தியோ வென்றெடுக்க முடியாது.
பெரும்பான்மைச் சமூகத்தின் மனங்களை வென்றெடுப்பதன் மூலமே அது சாத்தியப்பட முடியும். தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பிரச்சினைகள், எதிர்பார்ப்புகள், உரிமைகள் தொடர்பில் பெரும்பான்மைச் சமூகத்தில் உள்ள புத்திஜீவிகளும், கல்விமான்களும் புரிந்து வைத்திருக்கின்றனர்.
குறிப்பிட்ட சில இனவாதக் குழுக்களின் செயற்பாடுகளை வைத்து ஒட்டுமொத்த பெரும்பான்மை சமூகத்தையும் விரோதமாகப் பார்க்க முடியாது.
தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையே காணப்படும் ஒன்றுமையின்மை, காட்டிக்கொடுப்புகள், அரசியல் வேறுபாடுகளால் சமூகம் பிளவுபட்டுப் போயுள்ளது.
தமிழ்ச் சமூகத்தைப் போன்றெ முஸ்லிம் சமூகத்துக்குள்ளும் முரண்பாடுகள் தலைதூக்கியுள்ளன. எமக்கிடையேயான ஒற்றுமை நீண்டகாலமாக சிதறுண்டு போயுள்ளது. இதிலிருந்து மீண்டுவராத வரை சிறுபான்மைச் சமூகங்களுக்கு விடிவு கிட்டப் போவதில்லை.
தமிழினத்துக்குள் காணப்படும் முரண்பாடுகள், பொறாமைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் ஒற்றுமைப்பட வேண்டிய நெருக்கடி மிக்க தருணமிது. அதேபோன்று முஸ்லிம் மக்களுக்கிடையேயும் அரசியல், கட்சி, மத ரீதியிலான முரண்பாடும், பிரிவினையும் கைவிடப்பட வேண்டும்.
முஸ்லிம் தலைமைகள் ஒன்று பட வேண்டியதன் அவசியத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார் அண்மையில் சுட்டிக்காட்டி இருந்ததை இங்கு மீளவும் நினைவூட்ட விரும்புகின்றோம்.
அதேபோன்று தமிழ் மக்களுக்கிடையிலும் ஒற்றுமை கட்டியெழுப்பப்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டி முதலில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தை உருவாக்க வேண்டுமென்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
இதேபோன்றதொரு கருத்தை முஸ்லிம் அமைப்புகளின் ஒன்றியமும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவித்திருந்தது. இதன் மூலம் சமூகங்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து ஒன்றுபட்டு தீர்மானங்களை எடுப்பதன் மூலம் தீர்வினை வெற்றி கொள்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியமும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியமும் தத்தமது பிரச்சினைகளை ஆராய்ந்ததன் பின்னர் இரண்டு ஒன்றியங்களும் ஒன்றுபட்டு கூட்டாக தீர்மானங்களை எடுத்து பெரும்பானமைக் கட்சிகளுடனும், அரசுடனும், எதிர்க் கட்சிகளுடனும் பெரும்பான்மை சமூக அமைப்புகள், புத்திஜீவிகளுடனும் கலந்துரையாடி, பேச்சு நடத்தி சமாதானத் தீர்வுக்கான பாதையை அகலப்படுத்திக் கொள்ள முடியும்.
சிறுபான்மைச் சமூகங்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடுகள் இருக்க முடியும். தமிழ் மக்களின் வாழ்வாதாரம், காணி, இருப்பு, அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் போனோர் விவகாரம் என்று பல்வேறுபட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.
அதேபோன்று முஸ்லிம் மக்களுக்கு மத ரீதியிலான பிரச்சினைகள், மீள் குடியேற்றம், கல்வி, அரசியல், இனவாதச் செயற்பாடுகள் என நிறையவே காணப்படுகின்றன.
இந்தப் பிரச்சினைகளை வெற்றி கொள்வதற்கு முதலில் நாம் ஒன்றுபட வேண்டும். எமக்கிடையேயான விருப்பு, வெறுப்புகளை அகற்றி புரிந்துணர்வுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் எம்மால் ஒரு ஸ்திரமான இணக்கப்பாட்டுக்கு வரமுடியும்.
இந்த ஒற்றுமையினூடாக எமது பலத்தை வெளிப்படுத்துவோமானால் பெரும்பான்மைச் சமூம் சிந்திக்க முற்படும். அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களின் மனங்களை வெற்றி கொள்வதற்கான தடத்தில் நாம் பயணிக்க முடியும்.
குரோதங்களையும், பொறாமை எண்ணங்களையும் விலத்தி நல்லெண்ணத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனைய வேண்டும். இனங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்பட்டால் மட்டுமே பிரச்சினைகளை இலகுவாக அணுகி நல்லதொரு தீர்வுக்கு பாதையை திறக்கக் கூடியதாக இருக்கும்.
எதிரும் புதிருமாக செயற்பட்டு எதனையும் சாதிக்க முடியாது உள்ளங்கள் ஒன்றுபடுவதன் மூலமே எதனையும் வெற்றிகொள்ள முடியும்.
புரிந்துணர்வும் விட்டுக் கொடுப்பும் தாராளமாக பயன்படுத்தப்பட முடிந்தால் நிச்சயமாக நாம் பயணிக்கும் பாதை சரியான திசையாக அமைய முடியும்.
30 வருட கால யுத்தத்துக்குப் பின்னர் ஓரளவேனும் ஒற்றுமையாக பயணிக்க முடிந்துள்ளது. இந்த ஒற்றுமை பயணம் வலுவடைய வேண்டும்.
இதனூடாக அரசாங்கத்தினதும், பெரும்பான்மைச் சமூகத்தினதும் மனவோட்டங்களை அவதானித்து அவர்களது மனங்களை வென்றெடுக்க முடிந்தால் நிச்சயமாக சகல இன மக்களும், சரிநிகர் சமானமாக உரிமைகளோடு தலை நிமிர்ந்து வாழும் சூழலை ஏற்படுத்த முடியும் என்பதை உறுதியாக நம்பலாம்.
-http://www.tamilwin.com