100 கிராம் கஞ்சாவினை 30 சிறிய பொதிகளாக பொதி செய்து ஒரு பொதியை 100 ரூபாவிற்கு விற்பனை செய்யும் வடக்கு மாகாணத்தினையே தற்போது மூழ்கடிக்கும் கேரள கஞ்சாவின் பாவனை அதிகரிப்பது போலவே அதன் விற்பனை முகவர்களும் அதிகரிக்கின்றனர்.
இவ்வாறு இடம்பெறும் கஞ்சா விற்பனை தொடர்பில் அதன் உற்பத்தி மையத்தில் இருந்து நுகர்வோர் வரை செல்லும் வழி தொடர்பில் ஓர் தேடலில் ஈடுபட்ட வேளையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன.
இந்த வகையில் கேரளா கஞ்சாவானது தமிழ்நாட்டின் ஊடாகவே எமது பகுதிக்கு கடத்தப்படுகின்றது என்பது மட்டுமே அனைவருக்கும் தெரிந்த உண்மையாக உள்ள போதும் அது வரும் மார்க்கங்கள் தொடல்பிலோ அல்லது அதன் கைமாறு விலைகள் தொடர்பிலோ அறிந்திருக்கவில்லை.
கஞ்சா செடிகள் பாரம் குறைந்தவையே அதனால் ஒரு கிலோகிராமிற்கு அதிக இலைகள் கொண்டவையாகவே காணப்படுகின்றது. இவை பெரிய பொதிகளாக நன்கு ஒட்டப்பட்டு நீர் புகாவண்ணம் பாதுகாக்கப்பட்டே தமிழ்நாட்டின் ஊடாக எடுத்து வரப்படுகின்றது.
இவ்வாறு எடுத்து வரப்படும் கஞ்சாவினை கைப்பற்றும் பொலிசார் தெரிவிக்கும் விலையானது கிலோ ஒன்று ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபா. ஆனால் அவை மொத்த வியாபாரிகளினால் இவ்விலைக்கே கிலோகிராம் அளவு பெறுபவர்களிற்கு வழங்கப்படுகின்றன.
இவ்வாறு கிலோகிராம் அளவு பெறுபவர்கள் சிறுவியாபாரிகளிடம் 100, 200 கிராம் என சிறு பொதிகளாக விற்பனை செய்கின்றனர். இவ்வாறு சிறு அளவில் வாங்குபவர்களே 100 கிராம் கஞ்சாவினை 30 பொதிகளுக்கு குறையாது பேப்பரில் சுற்றி அதில் ஒரு பொதியை 100 ரூபாவிற்கு விற்பனை செய்கின்றனர்.
அதாவது மிக குறைந்த ஒரு விலையில் தீங்கு விளைவிக்கும் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுகின்றது. பொலிசாரின் கையில் இந்த மொத்த வியாபாரிகளோ அல்லது கிலோக்கணக்கில் விற்பனை செய்பவர்களோ அகப்படுவதே கிடையாது.
அவ்வாறு அகப்படுவதானால் 100, 200 கிராம் வேண்டி அதனை சிறிதாக விற்பனை செய்பவர்களே அகப்படுகின்றனர்.
ஏனெனில் இவர்களே அதிகவாடிக்கையாளர்களுடன் தொடர்பை பேணுபவர்கள். இவ்வாறு இந்த கிராம் அளவு கஞ்சா விற்பனையாளர்கள் சிலர் பொலிசாரின் வலையில் மாட்டியுள்ளனரே அன்றி அதற்கு மேற்பட்ட அளவினை கைமாற்றுபவர்கள் இதுவரை சிக்கியது கிடையாது.
இதனால் தற்போது இந்த சிறு அளவு விற்பனையாளர்களும் குறித்த சிறு பொட்டலங்களை தமது உடமையில் வைத்து விற்பனை செய்வது கிடையாது. 5, 10 சரைகளாக வீதிகள் பொது இடத்தில் உள்ள மறைவான இடங்களில் வைத்து விட்டு வீதிகளில் நிற்க, வாடிக்கையாளர் சென்று பணத்தினை வழங்க இருக்கும் இடத்தினை தெரிவிக்கின்றார். அதன்பிரகாரம் வாடிக்கையாளர் அதனை எடுத்துச் செல்கின்றார்.
இவ்வாறான விற்பனை குடாநாட்டின் நகர்ப்புறப் பாடசாலை ஒன்றிற்கு அண்மையிலும் மிக மும்முரமாக இடம்பெறுவதோடு மாலை நேரத்தில் ஓர் ஒதுக்குப்புற வீதியிலும் இடம்பெறுகின்றன.
இவைதொடர்பில் கடற்கரையில் நிற்கும் சம்பவங்களில் சில கட்ட கஞ்சா பிடிபட்ட போதிலும் விற்பனை நேரத்தில் பிடிபட்ட சம்பவங்கள் இல்லவே இல்லை. ஆனால் ஒரு சிலர் நுகர்விற்காக வாங்கியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்குதான் பலத்த சந்தேகம் எழுகின்றது குடாநாட்டை மட்டுமன்றி வடக்கு மாகாணத்தில் கடந்த 6 ஆண்டுகளாக இடம்பெறும் இக்கோர வர்த்தகத்தை ஏன் பொலிசாரால் ஒழிக்க முடியவில்லை, கடற்படையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதற்கும் அதிர்ச்சியான தரவுகளே எட்டுகின்றன.
இவ்வாறு கடத்துபவர்கள் ஆயுதப்படையினருடன் ஒட்டி உறவாடி புலனாய்வாளார்களாக செயற்பட்டவர்களிற்கான நிதிக் கொடுப்பணவுகள் வெட்டப்பட்ட வேளையில் இதற்கான எழுதாத அனுமதிகள் வழங்குவதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு வலுச்சேர்ப்பதாகவே வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் விடைகாணமுடியாத வினாவான யாழ் குநாட்டைச் சுற்றி 40,000 படையினரும் வடக்கு மாகாணத்தில் மட்டும் 90,000 இராணுவம் 10,000 கடற்படை விமானப்படை இருக்க இவ்வளவு ஆயுதப்படையினரையும் தாண்டி எவ்வாறு போதைப் பொருள் எடுத்து வரப்படுகின்றது. என்ற கேள்வியும் இதற்கு சான்று பகிர்வதாகவே அமைகின்றது.
எனவே வடக்கில் இராணுவம் இருக்கும் வரைக்கும் போதைப்பொருள் கஞ்சா பாவனையை ஒழிக்க முடியுமா என்பதும் பாரிய கேள்விக்குறியாகவே உள்ளது.
-http://www.tamilwin.com

























