கிளிநொச்சியில் இன்று முதல் தொடர் போராட்டம்

missingகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று முதல் தமது உறவுகள் எங்கே எனக் கேட்டு தமது உறவுகளைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியும் தமக்கான நீதி வேண்டி கிளிநொச்சியில் இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ந்தும் கண்ணீரோடு அவலப்பட்டு வரும் நிலையில் அவர்களது உறவுகள் எங்கே என பொறுப்புவாய்ந்த அரசாங்கத்தினாலும் உரிய பதில் வழங்கப்படாது காலங்கடத்தப்பட்டு வருகின்றது.

மேலும், சர்வதேசத்தாலும் தமது அவல நிலை மறக்கப்பட்டு வரும் நிலையில் தமது உறவுகளைக் கண்டறிந்து தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியும் கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை முதல் கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டம் இரவு பகலாக முன்னெடுக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கவனயீர்ப்புப் போராட்டம் பற்றி அவர்கள் மேலும் கூறுகையில்,

தமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டு நீண்ட காலமாகியும் அவர்கள் பற்றிய எந்தவொரு தகவலையும் பொறுப்புள்ள அரசாங்கத்தாலோ அல்லது ஐ.நா சபையாலோ தமக்கு வழங்கப்படவில்லையெனவும்,

தமது கண்முன்னே தமது கையால் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட தமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டு நீண்ட காலமாகின்றபோதிலும்,

அவர்களைப் பொறுப்பேற்றுக்கொண்ட இலங்கை அரசின் இராணுவத்தினரைச் செயற்படுத்திய அரசு எமது உறவுகள் எங்கே என்ற எந்தவிதமான பதிலையும் இதுவரை எமக்குத் தராமல் எமது கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காமல் பொறுப்பற்ற விதத்தில் இருந்து வருகின்றது.

இதற்கு எதிர்ப்புத் தெரவித்தும் எமது உறவுகளை அரச படைகள் ஒழித்து வைத்திருக்கும் இடங்களை இந்த அரசு கண்டறித்து உடனடியாக அவர்களை வெளிப்படுத்தி சட்டப்படி விடுதலை செய்யுமாறு கோரியும் நாம் இன்று முதல் கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

எமது உறவுகளை ஒழித்து வைத்திருக்கும் இடங்களிலிருந்து அவர்களை வெளிப்படுத்தி, எம்மிடம் ஒப்படைக்கும் வரை எமது கவனயீர்ப்புப் போராட்டம் இரவு பகலாகத் தொடரவுள்ளது. எமக்கு என்ன நடந்தாலும் அதன் விளைவுகளை இந்த அரசாங்கமேதான் பொறுப்பேற்க வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஐ.நா சபையின் தீர்மானங்களைக்கூட இந்த அரசு செயற்படுத்தாமல் கண்மூடி இருந்து வருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைக் கண்டறிவதற்கு ஐ.நா சபை நேரடியாகத் தலையிட்டு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம் என அவர்களால் கூறப்பட்டது.

தற்போது ஐ.நா சபை அமர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் ஐ.நா சபையின் கவனத்தை ஈர்த்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை இப்போராட்டம் தொடரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இப்போராட்டத்திற்கு அனைத்து உறவுகளிடமிருந்தும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் கோரப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: